‘அனைவருக்கும் ஹுடுட்’ என்ற டாக்டர் மகாதீர் கோரிக்கையை ஹாடி நிராகரித்தார்

ஹுடுட் சட்டம் முஸ்லிம் அல்லாதார் உட்பட அனைவருக்கும் அமலாக்கப்பட வேண்டும் என முன்னாள் பிரதமர் டாக்டர்  மகாதீர் முகமட் தெரிவித்துள்ள யோசனையை பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் நிராகரித்துள்ளார்.

முஸ்லிம்களுக்கும் முஸ்லிம் அல்லாதாருக்கும் வெவ்வேறான தண்டனைகள் விதிக்கப்படுவது நியாயமற்றது எனக் கருதப்படுவதோடு இஸ்லாத்தின் போதனைகளுக்கு எதிரானதும் என்று மகாதீர் வலியுறுத்துவதாக ஹாடி சொன்னார்.

“அனைவருக்கும் நியாயம் அனைவருக்கும் உரிமை என்பதற்கும் இடையில் வேறுபாடு இருக்கின்றது,” என அவர் குறிப்பிட்டார்.

“முஸ்லிம் அல்லாதாருக்குத் தங்கள் சமயத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளதைச் செய்வதற்கு உரிமை உள்ளது,” என கோத்தா பாருவில் பாஸ் கட்சியின் 58வது தேசிய ஆண்டுப் பொதுக் கூட்டத்துக்குப் பின்னர் ஹாடி நிருபர்களிடம் கூறினார்.

எடுத்துக்காட்டுக்கு அவர் மதுபானம் சம்பந்தப்பட்ட ஹுடுட் சட்டத்தைக் கூறினார்.

“மதுபானம் அருந்தும் மக்கள் தண்டிக்கப்பட வேண்டும். அது ஹுடுட் சட்டம்.”

“ஆனால் அது முஸ்லிம் அல்லாதாரை தண்டிக்கவில்லை. காரணம் அவர்கள் சமயத்தில் அது அனுமதிக்கப்பட்டுள்ளது,” என்றார் ஹாடி.

அந்த முன்னாள் பிரதமர் தமது கருத்துக்களை மருத்துவத் துறையோடு வைத்துக் கொள்வது நல்லது என்றும் அவர் சாடினார்.

ஹுடுட் சட்டத்துக்கு ஆதரவு தேடுவதற்கு இஸ்லாமியக் கட்சிக்கு உரிமை உண்டு என வலியுறுத்திய அவர், ஆனால் அது ஜனநாயக வழிகளில் மட்டுமே செய்யப்படும் எனச் சொன்னார்.

பாஸ் கட்சி தனது தொடக்கப் போராட்டத்திலிருந்து விலகவில்லை என பாஸ் சுரா மன்றம் முடிவு செய்துள்ளது, கட்சியின் இப்போதைய ‘சமூக நல நாடு’ என்னும் கோட்பாடும் அதன் முந்திய ‘இஸ்லாமிய நாடு’ என்னும் கோட்பாடும் ஒரே மாதிரியானதா என ஹாடியிடம் வினவப்பட்டது.

ஆனால் அவர் அந்தக் கேள்வியை ஒதுக்கும் வகையில் பதில் அளித்தார்.

“இஸ்லாம் என்பது ஒரு சமயமாகும். அது நல்லதை இஸ்லாமிய நாகரீகத்திலிருந்து மட்டுமின்றி அரபு உலகம், சீன, இந்திய, கிரேக்க நாகரீகங்களிலிருந்தும் ஏற்றுக் கொள்கிறது.’

“இஸ்லாமிய நாகரீகத்தில் மருத்துவம், வானவியல், அறிவியல், தொழில்நுட்பம் போன்ற அறிவாற்றல்கள் உட்பட முஸ்லிம் அல்லாதாரும் சம்பந்தப்பட்டுள்ளனர்,” என அந்த பாஸ் தலைவர் குறிப்பிட்டார்.

TAGS: