முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட், 2001 செப்டம்பர் 11 தாக்குதலுக்கு அரபு பயங்கரவாதிகளே காரணம் என்று சொல்லப்படுவது சரியல்ல என்கிறார். அப்படியொரு தாக்குதலைத் திட்டமிட்டு நடத்தும் திறன் அரபுக்களுக்கு இல்லை.
ஆனால், அப்படிப்பட்ட “தெளிவாக திட்டமிடலும் துல்லியமான பயிற்சியும் கச்சிதமாக செய்துமுடிக்கும் திறனும்” அமெரிக்க மத்திய உளவுத் துறை (சிஐஏ) இஸ்ரேலிய உளவு மற்றும் சிறப்பு நடவடிக்கைகளுக்கான கழகம் (மொஸ்ஸாட்) போன்றவற்றில் பயிற்சி பெற்றவர்களுக்கு உண்டு என்று மகாதிர் கூறினார்.
“முன்னொரு காலத்தில் அரபுக்கள் மாபெரும் வீரர்களாக இருந்தார்கள். ஆனால், மேலைநாடுகளுக்கு அடிமைப்பட்டுக் கிடந்த காலத்தில் அவர்கள் தங்களின் பேராண்மையை இழந்துவிட்டார்கள். இஸ்ரேலைவிட அவர்களிடம் படை வலிமை அதிகம் என்றாலும் இஸ்ரேலுக்கு எதிராக ஒரு சண்டையில்கூட அவர்கள் வெற்றி பெற்றதில்லை.
“திட்டமிடல், வியூகம் வகுப்பதெல்லாம் அரபுக்களால் முடியாதது. திட்டமிட்டபடி போரை நடத்தும் திறன் அவர்களிடம் கிடையாது. அவர்கள் கட்டொழுங்கு மிக்கவர்கள் அல்லர். இந்தக் கட்டொழுங்கின்மையை எல்லா இடங்களிலும் காணலாம் .திட்டங்களை இரகசியமாக வைத்துக்கொள்ளத் தெரியாது……
“சிஐஏ, மொஸ்ஸாட் ஆகியவற்றில் பயிற்சி பெற்றவர்கள் (தாக்குதல்களை) திட்டமிட்டார்கள், நடத்தினார்கள் என்பதை என்னால் ஏற்க முடியும் ஆனால், (அல்-கைடா தலைவர் ஒஸாமா) பின் லாடன் போன்ற அரபுக்கள் ஆப்கானிஸ்தானிலிருந்து திட்டமிட்டார்கள் என்பதை நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை”, என்றவர் சொன்னார்.
இன்று கோலாலும்பூர் புத்ரா உலக வாணிக மையத்தில், பெர்டானா உலகளாவிய அமைதி அறநிறுவனம் ஏற்பாடு செய்துள்ள 9/11 தாக்குதல்களின் உண்மையைக் கண்டறியும் மாநாட்டைத் தொடக்கிவைத்து உரையாற்றியபோது மகாதிர் இவ்வாறு கூறினார்.
‘பயன்பெறுவோர் யார் என்பதைக் கண்டறிக’
அரபுக்களை ஆற்றலற்றவர்கள் என்று சொன்னதற்காக மன்னிப்பு கேட்டுக்கொண்ட மகாதிர், “பின் லாடனைக் கொல்லவும் கொன்றபின் அவரது உடலை எங்கு வீசியெறிவது என்பதையும் திட்டமிடத் தெரிந்த அமெரிக்கர்களுக்குத்தான்” அந்த ஆற்றல் உண்டு என்றார்.
“அபார திறன் படைத்தவர்கள் அவர்கள். அப்படிப்பட்ட பயிற்சித்திறம் அரபுக்களிடம் இருந்தால் அதை சிஐஏ-யும் மொஸ்ஸாட்டும் அறிந்தே இருந்திருக்கும். ஆக, கடத்தியவர்கள் அரபுக்கள் இல்லையென்றால், அவர்கள் யார்?”, என்றவர் வினவினார்.
9/11-க்குப் பின்னேயுள்ள உண்மையைக் கண்டறிவது மிக முக்கியம் என்று மகாதிர் குறிப்பிட்டார்.ஏனென்றால் அச்சம்பவம் உலகையே மாற்றி முஸ்லிம்களை “உலக எதிரிகளாக” மாற்றி விட்டது.
முஸ்லிம்கள் “ஐரோப்பியர்களைக் கொல்வதைவிட தங்களில் ஒருவரை மற்றவர் கொல்வதில்தான் மும்முரமாக இருக்கிறார்கள்” என்பதை மேலைநாடுகள் நன்கு அறியும். என்றாலும் அவர்களுக்கு இப்படியொரு தோற்றம் உருவாகிவிட்டது.
“ விமானப் பயணிகள் (முஸ்லிம்கள்) தேவையற்ற பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு அவமானப்படுத்தப் படுகிறார்கள்…சிறிது சந்தேகம் எழுந்தாலும் விசாரணைக்காக தடுத்து வைக்கப்படுகிறார்கள்…”.
உண்மையைக் கண்டறியும் முயற்சியில் 9/11-ஆல் “பயன்பெறுவோர்” யார் என்பதையும் ஆராய வேண்டும்.
“9/11-ஆல் இரண்டு முஸ்லிம் நாடுகள் அழிந்துவிட்டன…மற்ற நாடுகளின் பாதுகாப்புக்கும் குழிபறிக்கப்பட்டுள்ளது….பணம் ட்ரில்லியன் கணக்கில் செலவிடப்பட்டது.
“இதனாலெல்லாம் பயனடைந்தவர்கள் யார் என்பதைக் கண்டறிந்தால் இந்தப் பயங்கரவாதச் செயலைச் செய்தவர்கள் யார் என்பது தெரிந்துவிடும்”, என்று மகாதிர் கூறினார்.
அம்மாநாட்டில், அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் சிந்தியா மெக்கின்னி, செய்தியாளர் ஜேம்ஸ் கோர்பெட், 9/11 உண்மை கண்டறியும் குழுவை உருவாக்கிய ரிச்சர்ட் கேஜ், நியாயமான உலகம் காணும் பன்னாட்டு இயக்கத்தின் தலைவர் சந்திரா முஸாபார், பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் நிலோபர் பக்வத், ஹான்ஸ் கொச்லர், குர்தயாள் சிங் நிஜார் ஆகியோரும் உரையாற்றுவார்கள்.