கடந்த மாதம் பள்ளிக் கூடத்தில் துவா (இஸ்லாமியத் தொழுகை) சொல்லாததற்காக கன்னத்தில் அறையப்பட்ட முஸ்லிம் அல்லாத ஒராங் அஸ்லி பிள்ளைகளுடைய குடும்பத்தினர் செய்த போலீஸ் புகாரை மீட்டுக் கொள்வதற்கு அந்தக் குடும்பத்துக்கு பணம் கொடுக்க முன் வந்தனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 7ம் தேதி ஹசான் அச்சோய் குடும்பத்தினர் அணுகப்பட்டதாகவும் போலீஸ் புகாரை மீட்டுக் கொள்வதற்கு அவர்களுக்கு 300 ரிங்கிட் கொடுக்க முன் வந்ததாகவும் பிஹாய் தேசியப் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத் துணைத் தலைவர் அரோம் அசிர் கூறினார்.
“பெண் பிள்ளைகள் ஒருவருடைய சகோதரர் அலோங் ஹசான் என்னுடன் தொடர்பு கொண்டு (நவம்பர் 8) அந்தத் தகவலை தெரிவித்ததுடன் என்னுடைய ஆலோசனையையும் நாடினார்.”
“நவம்பர் 7ம் தேதி பெற்றோர் ஆசிரியர் சங்கக் கூட்டம் ஒன்றுக்குப் பின்னர் தாம் அணுகப்பட்டதாகவும் அறையப்பட்ட மாணவர் ஒவ்வொருவருக்கும் தலா 300 ரிங்கிட் கொடுக்க முன் வந்ததாகவும் அவர் என்னிடம் தெரிவித்தார்.”
அவர்கள் நவம்பர் 7ம் தேதி கோலாலம்பூரில் சந்தித்தனர்.
ஒராங் அஸ்லி உரிமைகள் தொடர்பான மாநாடு ஒன்றில் கலந்து கொள்வதற்காக அவர் கோலாலம்பூருக்குச் சென்றிருந்தார்.
போஸ் பிஹாயில் உள்ள அலோங்-குடன் மலேசியாகினி தொடர்பு கொள்ள முடியவில்லை. காரணம் குவா மூசாங் உட்புறப் பகுதியில் பேராக் கிளந்தான் எல்லைக்கு அருகில் அமைந்துள்ள போஸ் பிஹாயில் தொலைபேசித் தொடர்புகள் கிடையாது.
என்றாலும் கடந்த வாரம் தமது கிராமத்துக்குப் பிந்திய அரோம், சம்பந்தப்பட்ட பிள்ளைகளுடைய பெற்றோர்களை சந்தித்து ஆசிரியர்களுடன் நடத்தப்பட்ட உரையாடல் விவரங்களை உறுதி செய்து கொண்டார்.
“ஆசிரியர்கள் குழு ஒன்று ஒவ்வொரு குழந்தைக்கும் 250 ரிங்கிட் கொடுக்க முன் வந்தது. பிள்ளைகளைக் கன்னத்தில் அறைந்த ஆசிரியர் அதனுடன் ஒவ்வொரு பிள்ளைக்கும் மேலும் 50 ரிங்கிட் கொடுக்க முன் வந்தார். ஆக மொத்தம் ஒவ்வொரு பிள்ளைக்கும் 300 ரிங்கிட்,” என அவர் சொன்னார்.
“குடும்பத்தினர் அதற்கு ஒப்புக் கொண்டால் ஆசிரியர்கள் அவர்களை புகாரை மீட்டுக் கொள்வதற்கு நவம்பர் 19ம் தேதி அழைத்துச் செல்வர். பின்னர் பணம் கொடுக்கப்படும்,” என்றும் கூறப்பட்டது.
அரோம் அந்த விவரங்களை தொலைபேசித் தொடர்புகளைக் கொண்ட அருகில் உள்ள நகரத்துக்கு நவம்பர் 17ம் தேதி சென்று மலேசியாகினியுடன் தொடர்பு கொண்டு தெரிவித்தார்.
போஸ் பிஹாயிலிருந்து ஒன்றரை மணி நேரம் பயணம் செய்து அருகில் உள்ள கோலா பெட்டிஸ் நகரத்தை அடைய வேண்டும். போலீஸ் புகார் செய்யப்பட்ட குவா மூசாங்-கை அடைவதற்கு மேலும் ஒன்றரை மணி நேரம் காரில் பயணம் செய்ய வேண்டும்.
நடவடிக்கை ஏதும் எடுக்கப்படா விட்டால் என்ன செய்வது என்பது பற்றி ஏற்கனவே வழக்குரைஞர் ஒருவருடன் ஆகோசனை நடத்தப்பட்டுள்ளதால் அந்தப் போலீஸ் புகார் மீட்டுக் கொள்ளப்பட மாட்டாது என்றும் அரோம் தெரிவித்தார்.
“அதில் எங்கள் கௌரவம் சம்பந்தப்பட்டுள்ளது,” என்றார் அவர்.
பள்ளியுடன் தொடர்பு கொள்ள முடியவில்லை
மாவட்ட கல்வி அலுவலகமும் மனித உரிமை ஆணையமும் வழங்கிய கைத் தொலைபேசி எண்களைப்பயன்படுத்தி பிஹாய் தேசியப் பள்ளி அதிகாரிகளுடன் தொடர்பு கொள்வதற்கு மலேசியாகினி சென்ற வாரம் பல முறை முயன்றது.
ஆனால் அந்த தொலைபேசி அழைப்புக்களுக்குப் பதில் கிடைக்கவே இல்லை. பள்ளிக்கூடம் ஒதுக்குப்புறமான இடத்தில் இருப்பது அதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.
பிஹாய் தேசியப் பள்ளிக்கு ஒதுக்கப்பட்ட தொலைபேசி எண் மாவட்ட கல்வி அலுவலத்துக்கு செல்கிறது.
அக்டோபர் 23ம் தேதி ஆறாம் வகுப்பைச் சேர்ந்த நான்கு மாணவர்கள் கன்னத்தில் அறையப்பட்டனர். அதனால் அவர்களுடைய பெற்றோர்கள் மூன்று மணி நேரம் பயணம் செய்து குவா மூசாங் சென்று போலீசில் புகார் செய்தனர்.
அந்தச் சம்பவத்தை கல்வித் துணை அமைச்சார் வீ கா சியோங் நாடாளுமன்றத்தில் உறுதிப்படுத்தினார்.
ஆசிரியருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை ‘எடுக்கப்பட்டு வருவதாக’ அவர் சொன்னார்.
என்றாலும் அந்த ஆசிரியர் செய்திருக்கக் கூடிய எந்த கிரிமினல் குற்றத்தையும் விசாரிப்பது போலீசாரைப் பொறுத்தது என்றும் வீ குறிப்பிட்டார்.
பெற்றோர்களுடைய முன் அனுமதி இல்லாமல் எந்த ஒரு ஒராங் அஸ்லி பிள்ளையையும் சமயப் போதனைகளைப் பெறுமாறு கட்டாயப்படுத்தக் கூடாது என 1954ம் ஆண்டுக்கான பழங்குடி மக்கள் சட்டத்தின் 17வது பிரிவு கூறுகின்றது.
அதனை மீறுகின்ற யாருக்கும் 500 ரிங்கிட்டுக்கும் மேற்போகாத அபராதம் விதிக்கப்பட வேண்டும் என அதே சட்டத்தின் பிரிவு 17(3) தெரிவிக்கின்றது.
பிஹாய் தேசியப் பள்ளி ஒராங் அஸ்லி பிள்ளைகளுக்கான சிறப்புப் பள்ளிக்கூடமாகும்