இஸ்லாம் தொடர்பான சமய விவகாரங்கள் தொடர்பில் மலேசியாவில் சிவில், ஷாரியா நீதிமன்றங்களுக்கு இடையிலான அதிகாரங்கள் உணர்ச்சியைத் தூண்டும் தன்மைகளைப் பெற்றிருப்பதால் சமயப் பூசல்களைத் தீர்க்கும் பொறுப்பை சட்டமியற்றுகின்றவர்களிடம் விட்டு விடுவதே நல்லது என சட்டத் துறைப் பேராசிரியர் ஒருவர் கருதுகிறார்.
இஸ்லாத்திலிருந்து இன்னொரு சமயத்துக்கு மதம் மாறுவது அல்லது இன்னொரு சமயத்திலிருந்து இஸ்லாத்துக்கு மதம் மாறுவது போன்ற பூசல்களின் மூலம் எழுகின்ற விவகாரங்களுக்கு விளக்கமளிக்க சிவில் நீதிமன்றங்கள் விரும்பவில்லை எனத் தோன்றுவதாக பேராசிரியர் ஷாட் சலீம் பாருக்கி கூறினார்.
ஆகவே அதற்கு தீர்வு காணும் பொறுப்பை சட்டமியற்றும் பொறுப்பில் இருப்பவர்களிடம் விட்டு விடுவதே நல்லதாக இருக்கலாம் என அவர் சொன்னார்.
அவரது கருத்தை வழக்குரைஞர் மன்ற முன்னாள் தலைவர் ரகுநாத் கேசவனும் பகிர்ந்து கொண்டார். அந்த விவகாரத்துக்கு ‘ஒர் அரசியல் தீர்வு’ காணப்பட வேண்டும் என அவர் எண்ணுகிறார்.
“நீதித்துறை எதிர்ந்நோக்கும் இக்கட்டான சூழ்நிலை இது தான். அதனை விளக்கும் ‘பொறுப்பு’ நீதிபதிகளிடம் ஒப்படைக்கப்படும் போது முடிவு செய்வது எளிதாக இருக்காது. இளம் வயதினரை மதம் மாற்றுவது தவறு (எஸ் ஷாமாளா வழக்கில்) முடிவு செய்யப்பட்டால் முஸ்லிம்கள் ஆத்திரப்படுவர். தந்தைக்கு உரிமை கொடுக்கப்பட்டாலும் அதற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடைபெறும்.”
“ஆகவே ஒவ்வொருவரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய அரசியல் தீர்வு காணப்பட வேண்டும். சில வேளைகளில் ஒரு தரப்பு தோல்வி அடைந்து அடுத்த தரப்பு வெற்றி அடைவதால் ஒவ்வொரு நீதிமன்ற முடிவும் சாதகமாக இருக்க முடியாது. ஆனால் அரசியல் தீர்வில் இடைப்பட்ட தீர்வைக்(half-way)கொடுக்க முடியும்.”
மிகவும் சர்ச்சைக்குரிய விஷயங்களை (மத மாற்றம் போன்றவை) நீதிமன்றத்துக்கு வெளியில் நாடாளுமன்றம் அல்லது வேறு எந்த வழியிலாவது அரசியல் தீர்வைக் காண்பதே சிறந்தது. ஏனெனில் நீங்கள் நீதிமன்றத்துக்குச் சென்றால் ஒரு தரப்பு தோல்வி அடைகிறது. அடுத்த தரப்பு வெற்றி அடைகின்றது. எனவே அது நாட்டுக்கு எப்படிச் சிறந்த தீர்வாக முடியும். இல்லையா ?” என ரகுநாத் பின்னர் நிருபர்களிடம் கூறினார்.
ஷாட்-டும் ரகுநாத்-தும் ‘சட்ட ஆட்சியும் நீதித் துறை சுதந்திரமும்’ என்னும் தலைப்பில் நிகழ்ந்த கருத்தரங்கில் பேசினார்கள். நேர்மைக் கழகத்தில் அது நடைபெற்றது.
அந்த நிகழ்வில் முன்னாள் பிரதமர் அப்துல்லா அகமட் படாவி, நேர்மைக் கழகத்தின் தலைவர் முகமட் டேப் சாலே ஆகியோரும் கலந்து கொண்டனர்.
கூட்டரசு அரசமைப்பின் 121(1ஏ) பிரிவின் கீழ் ஷாரியா நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டு சமய விவகாரங்கள் மீது சமமான நீதி அதிகாரம் வழங்கப்பட்ட பின்னர் பல இன மலேசியாவில் உணர்வுகளைத் தூண்டக் கூடிய இஸ்லாம் சம்பந்தப்பட்ட, சமய நம்பிக்கையை கைவிட்ட பல வழக்குகளில் சிக்கலான பிரச்னைகள் எழுந்துள்ளன.