மலேசியாவிலுள்ள தேசியப்பள்ளி, சீனமொழிப்பள்ளி, தமிழ்ப்பள்ளி மற்றும் சமய அமைப்புகள் நடத்தும் பள்ளி ஆகியவை எவ்வித பாகுபாடுமின்றி சரிசமமாக நடத்தப்படுகின்றன என்று பிரதமர் நஜிப் கூறியதாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
நஜிப்பின் கூட்டணி அரசாங்கம் “இந்நாட்டிலுள்ள அனைத்து வகை பள்ளிகளுக்கும் எவ்வித பாகுபாடுமின்றி சரிசமமான சலுகைகளையே வழங்கி வருகிறது”, என்று கூறும் பிரதமரின் உரையை பினாங்கு ஹான் சியாங் கல்லூரியில் “தங்க அடைவு நிலை விருது” நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்த தகவல் தொடர்பு மற்றும் பாரம்பரிய அமைச்சர் டாக்டர் ராய்ஸ் யாத்திம் வாசித்தார்.
பிரதமர் நஜிப்பின் தலைமையிலான கூட்டணி அரசாங்கம் நாட்டின் அனைத்து வகை பள்ளிக்களுக்கிடையில் பாகுபாடு காட்டுவதில்லை, சரிசமமான சலுகைகளையே வழங்கிறது என்பது உண்மையானால், தேசியப்பள்ளியின் மேம்பாட்டிற்கான அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீடும் இதர தாய்மொழிப்பள்ளிகள் மற்றும் சமய அமைப்புகளின் பள்ளிகள் ஆகியவற்றுக்கான அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீடுகளும் சரிசமமானவையா?
இந்நாட்டிலுள்ள அனைத்து பள்ளிகளும் சரிசமமான நிதி ஒதுக்கீடுகளைப் பெறுகின்றன என்பது உண்மையானால், சீன மற்றும் தமிழ்ப்பள்ளிகள் ஏன் நிதி திரட்டல் என்ற பிச்சை எடுக்கின்றன? பிஎன்னுக்கு வாக்களியுங்கள் சீனமொழிப்பள்ளி மேம்பாட்டிற்கு ரிம3 மில்லியன் தருகிறேன் என்று பிரதமர் நஜிப் உலுசிலாங்கூர் நாடாளுமன்ற இடைத்தேர்தலின் போது அத்தொகுதி சீன வாக்காளர்களுடன் ஏன் பேரம் பேச வேண்டும்?
தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டிற்கு அள்ளித்தராவிட்டாலும் கிள்ளியாவது தாருங்கள் என்றும், தமிழ்ப்பள்ளிகளை தத்தெடுங்கள் என்றும் நஜிப்பின் கூட்டணி உறுப்பினரான மஇகா ஏன் கெஞ்ச வேண்டும்?
அதே வேளையில், தேசியப்பள்ளியின் வளர்ச்சிக்காக வாரிக் கொடுங்கள் என்றோ, தத்தெடுங்கள் என்றோ எந்த அம்னோ தலைவர்களும் கெஞ்சுவதில்லையே. ஏன்?
தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பளம் தருகிறோம், கட்டடம் கட்டித் தருகிறோம், நிலத்தை அவர்கள் (இந்தியர்கள்) வாங்கிக்கொள்ள முடியாதா என்று கல்வி அமைச்சர் முகைதின் யாசின் கேட்டார். ஏன் அந்தக் கேள்வி?
தேசியப்பள்ளிக்கு ஆசிரியர்கள், அவர்களின் சம்பளம் மற்றும் கட்டடங்களும் தருகிறோம். அவற்றுக்கான நிலங்களை அவர்கள் வாங்கிக்கொள்ள முடியாதா என்று ஏன் கல்வி அமைச்சர் கேட்கவில்லை?
அனைத்து வகை பள்ளிகளும் பாகுபாடின்றி சரிசமமாக, பாரபட்சமில்லாமல் நடத்தப்படுகின்றன என்று நஜிப் கூறுவது உண்மையானால், ஏன் இந்த பாரபட்சமான கேள்வி?
மலேசிய ஐந்து ஆண்டு திட்டங்களில் பள்ளிகளின் மேம்பாட்டிற்கு அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீடுகள் பாரபட்சமின்றி, பாகுபாடின்றி, சரிசமமாக இருக்கின்றனவா?
இதனைச் சற்று கவனியுங்கள். மலாய், சீன, தமிழ் தொடக்கப்பள்ளிகளுக்கு ஆறாவது ஐந்தாண்டு திட்டத்திலிருந்து அளிக்கப்பட்ட மேம்பாட்டு நிதி ஒதுக்கீடுகள்:
6 ஆவது திட்டம் (1991-1995)-மலாய்ப்பள்ளி 89.72%; சீனப்பள்ளி 8.14%; தமிழ்ப்பள்ளி 2.14%.
7 ஆவது திட்டம் (1996-2000)-மலாய்ப்பள்ளி 96.54%; சீனப்பள்ளி 2.44%; தமிழ்ப்பள்ளி 1.02%.
8 ஆவது திட்டம் (2001-2005)-மலாய்ப்பள்ளி 96.10%; சீனப்பள்ளி 2.73%; தமிழ்ப்பள்ளி 1.17%.
9 ஆவது திட்டம் (2006-2010)-மலாய்ôÀள்ளி 95.06%; சீனப்பள்ளி 3.60%; தமிழ்ப்பள்ளி 1.34%.
இந்த மேம்பாட்டு நிதி ஒதுக்கீட்டை ஒரு மாணவனுக்கு ஒரு மாதத்திற்கு என்று கணக்கிடும்போது 9வது மலேசிய திட்டத்தில் மலாய்ப்பள்ளி மாணவனுக்கு ரிம33.30 காசும், தமிழ்ப்பள்ளி மாணவனுக்கு ரிம10.55 காசும் சீனப்பள்ளி மாணவனுக்கு ரிம4.50 காசும் ஒதுக்கப்பட்டுள்ளன.
இந்தப் புள்ளிவிபரங்கள் அரசாங்கத்தின் சரிசமமான நிதி ஒதுக்கீட்டைக் காட்டுகின்றனவா? இவற்றில் பாகுபாடில்லையா? பாரபட்சம் இல்லையா?
10 ஆவது மலேசிய திட்டத்தில் பள்ளிகளின் மேம்பாட்டிற்கான நிதி ஒதுக்கீடுகள் பற்றிய துல்லியமான புள்ளிவிபரம் இன்னும் கிடைக்கவில்லை. ஆனால் பாகுபாட்டிலும், பாரபட்சத்திலும் மாற்றமில்லை என்று ஓரிரு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூறியுள்ளனர்.
மேற்கூறப்பட்டுள்ள விபரங்கள் அனைத்தும் தாம் பிரதமர் ஆவதற்கு முன்னால் செய்யப்பட்ட நிதி ஒதுக்கீடுகள். 10ஆவது திட்டத்தில் “அனைத்து வகை பள்ளிகளுக்கும் எவ்வித பாகுபாடுமின்றி சரிசமான சலுகைகளையே வழங்கி” உள்ளதாக நஜிப் நிரூபிக்கத் தயாரா? அவர் நிரூபித்தால் அதனை உண்மை என்று ஏற்றுக்கொள்ளலாம்.
பிரதமர் நஜிப் நாட்டு மக்களின் பிரதம ஊழியர். பேரரசரின் முதன்மை அமைச்சர். அவர் நாட்டு மக்களிடம் கூறுவது உண்மையைத் தவிர வேறு எதுவாகவும் இருக்கக்கூடாது.
பிரதமர் கூறுவது உண்மை என்றால், அவரின் கூட்டாளிகளான மசீசவினரும், மஇகாவினரும் ஏன் அள்ளவும் கிள்ளவும் அலைகின்றனர்?