ஜெலபாங் தொகுதி மீது பக்காத்தான்-பிஎஸ்எம் கருத்து வேறுபாடு

பேராக் ஜெலபாங் தொகுதியில் யார் போட்டியிடுவது என்பது மீது பக்காத்தான் ராக்யாட்டுக்கும் அதன் தோழமைக் கட்சியான பிஎஸ்எம் என்ற மலேசிய சோஷலிசக் கட்சிக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.

அந்தத் தொகுதியில் பிஎன் -உடன் நேரடிப் போட்டியில் இறங்க பிஎஸ்எம் விரும்பும் வேளையில் அந்த இடத்தைத் தக்க வைத்துக் கொள்வதில் டிஏபி உறுதியாக இருக்கிறது.

“நாங்கள் கடைசி நேரத்தில் இடங்களை மாற்றிக் கொள்ள முடியாது. அது தான் பிஎஸ்எம் பிரச்னை. ஒரு வேட்பாளரை நிறுத்துவதற்கு முன்னர் நான்கு முதல் ஐந்து ஆண்டுகளுக்கு அங்கு வேலை செய்ய வேண்டும் என்பது எங்களுடைய உள் தேவைகளில் ஒன்றாகும்,” என அந்தக் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினரான டாக்டர் மைக்கல் ஜெயகுமார் தேவராஜ் கூறினார்.

“இப்போது பக்காத்தான் ராக்யாட் பேராக்கில் பல மாநிலச் சட்டமன்றத் தொகுதிகளைக் கொடுக்க முன் வந்துள்ளது. ஆனால் நாங்கள் அங்கு செல்வது மிகவும் சிரமமாக இருக்கும்.”

அடுத்த பொதுத் தேர்தலில் பிஎஸ்எம்-மின் நோக்கங்கள் இரு வகையானவை என அவர் மலேசியாகினி தொடர்பு கொண்ட போது தெரிவித்தார்.

சிறந்த வெற்றியை பக்காத்தான் பெறுவதற்கு உதவுவது, தேசிய அரசியலில் தனது நிலையைத் தக்க வைத்துக் கொள்வது ஆகியவையே அவை என்றார் அவர்.

2008 பொதுத் தேர்தலில் பிஎஸ்எம் ஒரு நாடாளுமன்றத் தொகுதியிலும் மூன்று சட்டமன்றத் தொகுதிகளிலும் போட்டியிட்டது. ஜெலபாங் உட்பட அந்தத் தொகுதிகளில் மீண்டும் போட்டியிட அது எண்ணம் கொண்டுள்ளது.

பிஎஸ்எம் உறுப்பினர்கள் அந்தத் தொகுதியில் அடித்தள வேலைகளை நல்ல முறையில் செய்துள்ளதால் எங்கள் கோரிக்கை நியாயமானது என ஜெயகுமார் சொன்னார்.

இதுகாறும் பக்காத்தான் ராக்யாட்டும் பிஎஸ்எம் -மும் இணக்கமாக செயல்பட்டு வருவதாகவும் ஒரே பக்கத்தில் இருப்பதாகவும் பிஎன் -னைத் தோற்கடிக்கும் பொதுவான இலட்சியத்தில் இணைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.