டிஏபி, மாற்றரசுக் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிமைத் தன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள முடியும் என்று நினைக்கிறது அதனாலேயே அவரை ஆதரிக்கிறது என்று முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் கூறியுள்ளார்.
முன்னாள் பேராக் மந்திரி புசாரை ஓர் எடுத்துக்காட்டாகக் குறிப்பிட்ட மகாதிர், மாநிலச் சட்டமன்றத்தில் கூடுதல் இடங்களைப் பெற்றிருந்த டிஏபி அவரைப் பயன்படுத்திக்கொண்டது என்றார். மந்திரி புசாரும் அக்கட்சி விரும்பியபடி (புதுக் கிராமங்களின்) நிலக் குத்தகையை 99 ஆண்டுகளுக்குமேலாக காலவரையின்றி நீட்டித்தார் என்றார்.
“டிஏபி அன்வாரை ஆதரிக்கிறது என்றால் மலாய் ஆதரவைப் பெறத்தான் அவ்வாறு செய்கிறது”, என்றவர் சொன்னார்.
“ஏன் பாஸின் அப்துல் ஹாடி(ஆவாங்) அல்லது மகா கனம் கர்ப்பால் சிங்கை ஆதரிக்ககூடாது? அவரும் (கர்பால்) நீண்ட காலமாக போராடி வருகிறவர், அவர் பிரதமர் ஆகலாமே”.
ஹாடியைப் பிரதமராக்கும் பாஸின் முயற்சி அவர்களுக்குள் (பக்காத்தான் ரக்யாட்) உள்சண்டை நிலவுவதைக் காண்பிக்கிறது என்றும் மகாதிர் கூறினார்.
அண்மையில் நடந்து முடிந்த பாஸ் மாநாட்டில் பாஸின் உலாமா பகுதி அப்துல் ஹாடியையே பிரதமராக்க வேண்டும் என்று முன்மொழிந்திருப்பது பற்றிக் கருத்துக் கேட்கப்பட்டதற்கு மகாதிர் இவ்வாறு பதிலளித்தார்.
பாஸ் விடுத்த கோரிக்கைக்கு அடக்கமாக பதில் அளித்திருக்கிறார் ஹாடி. இஸ்மாமிய போதனைகள் பதவிமீது நாட்டம் கொள்வதைத் தடுக்கிறது என்றாரவர்.
“அது பெரும் பொறுப்புள்ள பதவி…. முதலில் புத்ராஜெயாவைக் கைப்பற்றுவோம், அதுதான் முக்கியம்”, என்று பாஸ் தலைவரான ஹாடி கூறினார்.
இதனிடையே அன்வார் நேற்று அது பற்றிக் கருத்துரைத்தபோது, அப்துல் ஹாடி பிரதமராவதில் தமக்கு எந்தப் பிரச்னையும் இல்லை என்று சொன்னார்.
ஆனால், டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங், அன்வார்தான் பிரதமராக வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருப்பதாய் அறிவிக்கப்பட்டுள்ளது.
மகாதிர், இஸ்ரேலின் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ள காசா பகுதி மக்களுக்கு உதவியாக ஒரு நிதியைத் தொடக்கிவைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். இஸ்ரேலியர் தாக்குதலில் காசா பகுதியில் நூற்றுக்கு மேற்பட்ட பொதுமக்கள் பலியானார்கள்.