‘சிலாங்கூரில் 20 மில்லியன் ரிங்கிட் பெறும் நிலங்களை பிஎன் அபகரித்துக் கொண்டது’

சிலாங்கூரில் பாரிசான் நேசனல் நிலங்களை அபகரித்துக் கொண்டது என செக்கிஞ்சாங் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் இங் ஸ்வீ லிம் குற்றம் சாட்டியுள்ளார்.

“அது 20 துண்டு நிலங்களை அதன் சந்தை மதிப்பு மொத்தம் 20 மில்லியன் ரிங்கிட்டாக இருந்த போதிலும் ஒரு சதுர அடி ஒரு ரிங்கிட் என்ற விலையில் கையகப்படுத்திக் கொண்டது,” என அவர் கூறிக் கொண்டார்.

சிலாங்கூரில் உள்ள 9 மாவட்டங்களில் ஏழு மாவட்டங்களில் உள்ள அந்த நிலங்களின் மொத்த பரப்பளவு 33.5 ஏக்கர் அல்லது 1,459,260 சதுர அடியாகும்.

“அந்த நிலங்கள் அனைத்தும் அதிக மதிப்புள்ள நிலங்களாகும். அவை வர்த்தக நிலங்கள். அம்னோ, மசீச, மஇகா, கெரக்கான் ஆகியவை அந்த நிலங்களைப் பெற்ற பின்னர் மேம்படுத்தப்படுவதற்காக உடனடியாக அவை கூட்டுத் திட்டங்களாக மாறின அல்லது பத்தாயிரக்கணக்கான அல்லது மில்லியன் கணக்கான ரிங்கிட் ஆதாயத்துக்கு விற்கப்பட்டன,” என்று சிலாங்கூர் மாநிலச் சட்டமன்றக் கட்டிட வளாகத்தில் அவர் நிருபர்களிடம் கூறிக் கொண்டார்.

அந்த நில அபகரிப்பில் பல வகையான அரசியல் கட்சிகள் சம்பந்தப்பட்டுள்ளதை குறிப்பிட்ட அவர் அதனை “Sapu Tanah 1Malaysia” ( ஒரே மலேசியா நில அபகரிப்பு) எனக் கிண்டலாகக் கூறினார். கூட்டரசு அரசாங்கத்தின் ஒரே மலேசியா இயக்கத்தையே இங் குறிப்பிடுகிறார் என்பது தெளிவாகும்.

அந்த மொத்தம் 24 நிலங்களில் அம்னோவுக்கு 15ம் மசீச, மஇகா, கெரக்கான் ஆகியவை முறையே ஐந்து, மூன்று, ஒன்று என மிகவும்  குறைந்த விலையில் கொடுக்கப்பட்டன என்றார் அவர்.

“அவை கட்சிப் பெயர்களில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலங்களாகும். தனிநபர்களுடைய பெயர்களில் பதிவான நிலங்கள் பற்றி நமக்கு எதுவும் தெரியாது,” என்றும் இங் சொன்னார்.

அந்த நிலங்கள் மதிப்பீடு செய்யப்படும்

அந்த நிலங்களில் மிகப் பெரியது கிள்ளானில் PT125400 என்ற நிலப்பட்டா எண்ணைக் கொண்ட 7 ஏக்கர்நிலமாகும். அதில் 4 ஏக்கர் கோத்தா ராஜா அம்னோ தொகுதிக்குச் சொந்தமானதாகும். எஞ்சிய நிலம் ஷா அலாம் மாநகராட்சி மன்றத்துக்கு சொந்தமானது.

இங் அம்பலப்படுத்தியுள்ள இன்னொரு நிலம் உலு லங்காட்டில்  PT4545 என்ற பட்டா எண்ணைக் கொண்டதாகும். அதன் பரப்பளவு 2,310 சதுர மீட்டர். அது இப்போது அம்னோ கையில் உள்ளது.

“அம்னோவின் முன்னாள் செம்பாகா சட்டமன்ற உறுப்பினரான மாட் அரிஸ் மாட் யூசோப், முன்னாள் அம்பாங் சட்டமன்ற உறுப்பினர் முப்தி சூய்ப் ( காலமாகி விட்டார்) ஆகியோர் அந்த நிலத்துக்கு அம்னோ அறங்காவலர்கள் ஆவர்.”

“லிம் தெரிவித்த இன்னொரு நிலம் கோலா சிலாங்கூரில்  PT190 என்ற பட்டா எண்ணைக் கொண்ட நிலமாகும். அது தற்போது மஇகா வசம் உள்ளது. அதற்கு இதர பலருடன் முன்னாள் மஇகா தலைவர் எஸ் சாமிவேலுவும் அறங்காவலர் என இங் கூறிக் கொண்டார்.”

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திடமும் போலீசிடமும் விரைவில் புகார் செய்யப்படும் என்றும் அந்த சம்பந்தப்பட்ட நிலங்களை மாநில அரசாங்கம் மதிப்பீடு செய்யும் என்றும் அவர் சொன்னார்.

அந்தத் தகவல்கள் மாவட்ட அலுவலக ஆவணங்களை அடிப்படையாகக் கொண்டவை என ஸ்ரீ மூடா சட்டமன்ற உறுப்பினர் ஷுஹாய்மி ஷாபியி தெரிவித்தார்.

“அவை உண்மை நிலைகளை அடிப்படையாகக் கொண்டவை. அந்த நிலங்களை சிலாங்கூர் மக்களிடம் மீண்டும் ஒப்படைக்குமாறு நான் பிஎன் -னுக்குச் சவால் விடுக்கிறேன்,” என்றார் அவர்.

 

 

TAGS: