தீவகற்ப மலேசியாவில் கிழக்குக் கரை மாநிலங்களுக்கு பெட்ரோலிய வருமானத்திலிருந்து ரொக்கத் தொகையை வழங்குவது மீது நியாயமான, வெளிப்படையான ஆய்வை மேற்கொள்வதற்குச் சிறப்புக் குழு ஒன்றை அமைக்க கூட்டரசு அரசாங்கம் ஒப்புக் கொண்டுள்ளது.
பிரதமர் அலுவலகம் இன்று விடுத்த அறிக்கை அந்தத் தகவலை வெளியிட்டது.
அந்தக் குழுவுக்கு முன்னாள் தலைமை நீதிபதி அப்துல் ஹமீட் முகமட் தலைமை தாங்குவார். அனைத்துலக, உள் நாட்டுச் சட்டங்களில் நிபுணத்துவம் பெற்றவர்களும் திரங்கானு, கிளந்தான், பாகாங் ஆகிய அரசாங்கங்களின் பேராளர்கள் அந்த மாநில சுல்தான்களின் ஒப்புதலுடன் குழுவில் அங்கம் பெற்றிருப்பர்.
கிழக்குக் கரை மாநிலங்கள் எழுப்பியுள்ள எல்லா அம்சங்களையும் கருத்தில் கொண்டு ரொக்கத் தொகையை வழங்குவது தொடர்பில் விரிவான ஆய்வை மேற்கொள்வதற்காக அந்தக் குழு அமைக்கப்படுகின்றது.
“அந்தக் குழு தான் தோற்றுவிக்கப்பட்ட தேதியிலிருந்து ஆறு மாதங்களுக்குள் பணியை முடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.’
கிளந்தான், பாகாங் பேராளர்களுடைய பெயர்கள் கூட்டரசு அரசாங்கத்துக்குக் கிடைத்துள்ளதாகவும் திரங்கானு இன்னும் தனது பேராளரைப் பரிசீலித்துக் கொண்டிருப்பதாகவும் அந்த அறிக்கை தெரிவித்தது.
கிளந்தான் அரசாங்கம் பெட்ரோலிய எரி வாயு வருமானத்திலிருந்து 10.4 பில்லியன் ரிங்கிட் கோரிக்கையை விடுத்துள்ளதாகக் கூறும் ஊடகச் செய்திகளையும் அந்த அறிக்கை மேற்கோள் காட்டியுள்ளது.
“அந்தக் குழு அமைவதற்கு கிளந்தான் ஒப்புக் கொண்டு தனது பேராளர் பெயரை குறிப்பிட்டுள்ளதால் முழு விவகாரமும் அதன் கோரிக்கையும் குழுவிடம் தெரிவிக்கப்படுதே பொருத்தமானது,” என அது மேலும் தெரிவித்தது.
-பெர்னாமா