அமைச்சர் பதிலளிக்க மறுத்ததால் பாடுங்கான் பிரதிநிதி ஆத்திரம்

பாடுங்கான் டிஏபி சட்டமன்ற உறுப்பினர் வோங் கிங் வை, டாயாக் இனச் சிறார்களுக்கு வலுக்கட்டாயமாக இஸ்லாமிய கல்வி போதிக்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டுக்கு மாநில சமூகநலன். மகளிர், குடும்ப மேம்பாட்டு அமைச்சர் பாத்திமா அப்துல்லா பதிலளிக்க மறுத்ததால் ஆத்திரமடைந்துள்ளார்.

“அப்படிக் கூறப்படுவது உண்மையா என்று கேட்டிருந்தேன்”, என்று வோங் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

“பள்ளிக்கு முந்திய கெமாஸ் பாலர் பள்ளிகளில் இஸ்லாமியக் கல்வி ஒரு கட்டாயப் பாடம் என்று எனக்குத் தெரிவிக்கப்பட்டது. அது உண்மையா என்று அமைச்சரிடம் கேட்டேன். அமைச்சர் பதிலளிக்கவில்லை.

“டாயாக் இனத்தையும் கிறிஸ்துவ சமயத்தையும் சேர்ந்தவர்ளான பெரும்பாலான மாணவர்களுக்குப் பள்ளிக்கு முந்திய வகுப்புகளில் இஸ்லாமியக் கல்வியைக் கட்டாயமாக்கும் முயற்சி எங்களுக்குக் கவலை அளிக்கிறது”, என்றாரவர்.

கிராமப்புறங்களில் அப்படிப்பட்ட பள்ளிக்கு-முந்திய வகுப்புகளுக்குச் செல்லும் மாணவர்களில் 95 விழுக்காட்டினர் டாயாக்குகள் என்றும் அவர்களில் பெரும்பாலோர் கிறிஸ்துவர்கள் என்றும் வோங் (வலம்) கூறினார்.

“மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு மாநில அரசும் துணை போவது கவலை அளிக்கிறது.

“மாநிலத்தில் இப்படிப்பட்ட பள்ளிக்கு-முந்திய வகுப்புகள் நிறைய உருவாக்கப்பட்டுள்ளன.

“இதுவரை 21,208 பேர் அதில் பதிவு செய்து கொண்டிருக்கிறார்கள்”, என்றாரவர்.

அவற்றில் இஸ்லாமிய போதனையைக் கட்டாய பாடமாக்கும் முயற்சியைத் தடுத்து நிறுத்துமாறு வோங் மாநில அரசைக் கேட்டுக்கொண்டார்.

முஸ்லிம்-அல்லாதாருக்கு இஸ்லாமிய கல்வி போதிக்கப்படுவதில்லை

இதனிடையே, செய்தியாளர் கூட்டமொன்றில் பேசிய பாத்திமா (வலம்), முஸ்லிம் ஆசிரியர்கள் பாலர் பள்ளிகளில் முஸ்லிம்-அல்லாத பிள்ளைகளுக்கு இஸ்லாமிய போதனைகளை எப்போதுமே செய்ததில்லை என்றார்.

“மே மாத சட்டமன்றக் கூட்டத்தில் (பா’ கிலலான் உறுப்பினர்) பாரு பியான் அப்படிப்பட்ட சம்பவங்கள் நிகழ்திருப்பதாகக் கூறியதை அடுத்து என் அமைச்சு அதை விசாரித்தது.

“கெமாஸ் பள்ளிகளில் முஸ்லிம்-அல்லாத மாணவர்களிடம் இஸ்லாமிய போதனைகள் செய்யப்படுவதில்லை.அத்துடன்  முஸ்லிம்கள் தொழுகை செய்யும்போது அதில் கலந்துகொள்ளுமாறு அவர்களைக் கட்டாயப்படுத்துவதுமில்லை”, என டேவான் உண்டாங்கான் நெகிரியின் இரண்டாம் நாள் கூட்டத்துக்குப்பின் செய்தியாளர்களிடம் கூறினார்.

இஸ்லாமிய போதனைகளை ஏற்றுக்கொள்ளுமாறு முஸ்லிம்-அல்லாத மாணவர்களைக் கட்டாயப்படுத்துவது நாட்டின் கல்விக் கொள்கை அல்ல என்று பாத்திமா சுட்டிக்காட்டினார்.

சமயக்கல்வி தொடர்பில் ஆசிரியர்கள் வரம்புமீறி நடந்துகொள்ளாதிருப்பதை உறுதிப்படுத்த அரசாங்கம் கெமாஸ் வகுப்புகளை அணுக்கமாகக் கண்காணித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

TAGS: