-ஜே.சிம்மாதிரி, பாகாங் மாநில ஜ.செ.க துணைத் தலைவர், நவம்பர் 22, 2012.
மக்கள் கூட்டணி எதிர்வரும் பொதுத்தேர்தலில் மத்திய அரசை கைப்பற்றிவிடும் என முழு மனதோடு நம்பிக்கை வைத்து ஜ.செ.க-த் தலைவர் கர்ப்பால் சிங் பிரதமராக வர வாய்ப்புத் தர வேண்டும் என்கிறார் முன்னாள் அம்னோ தலைவரும் முன்னாள் பிரதமருமான டாக்டர் மகாதீர்.
மக்கள் கூட்டணியின் ஒரு அங்கமான ஜ.செ.க-வின் தலைவர் கர்ப்பால் சிங், நீண்ட காலப் போராட்டவாதி. அவர், பிரதமராவதற்கு எல்லாத் தகுதிகளும் பெற்றிருக்கிறார். ஆனால் ஜ.செ.க-வை விட நாடாளுமன்றத்தில் கூடுதல் இடங்களை பெறும் பாஸ் அல்லது கெஅடிலான் கட்சிகளைச் சேர்ந்த ஒருவரே பிரதமராக வருவது விவேகமான ஒன்று.
அவ்வகையில் கெஅடிலானின் தலைவர் அன்வார் இப்ராஹிமே அப்பதவிற்குப் பொருத்தமானவர் என்பதை ஏற்கனவே நாங்கள் செய்துவிட்ட முடிவு.
ஆகையால், டாக்டர் மகாதீர் தாம் பெரும் அறிவாளி, புத்திசாலி என நினைத்துக்கொண்டு மூளைக்கு எட்டாத விஷயங்களைக் கூறி மக்களை குழப்ப வேண்டாம்.
டாக்டர் மகாதீர் கூற்றுப்படி மக்கள் கூட்டணி மத்திய அரசை கைப்பற்றுமேயானால் எதிர்க்கட்சித் கொறடா யார்? அம்னோவா? ம.இ.கா-வா? ம.சீ.ச-வா? இம்மூன்றில் அதிக இடங்களைப் பெற்றிடும் அம்னோதான் என சந்தேகத்திற்கு இடமில்லாமல் தெரிய வருகிறது. அப்படியென்றால் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் யார்? நஜிப்பா? முகதீன் யாசினா? முக்ரிஸா? அல்லது கைரி ஜமாலுதீனா?
இதற்கு சரியான பதிலைத் தரக் கூடியவர் வேறு யாருமில்லை, நமது முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் அவர்களேதான். எங்கே, மூளைக்கு வேலை கொடுங்கள் பார்க்கலாம்…