வோங்: டெம்ப்ளர் பங்களா உரிமையாளர்களில் அம்னோ தலைவர்களும் அடங்குவர்

சிலாங்கூர் மாநிலச் சட்ட மன்றக் கூட்டத்தில் அம்னோ உறுப்பினர்கள் நேற்று எழுப்பிய டெம்ப்ளர் பார்க் என்ற சர்ச்சைக்குரிய திட்டத்தில் உள்ள பங்களா உரிமையாளர்களில் பல அம்னோ தலைவர்களும் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

அந்தப் பங்களா உரிமையாளர்களில் முன்னாள் அமைச்சர் ஒருவர், எம்பி ஒருவர், பல முன்னாள் மாநிலச் சட்ட மன்ற உறுப்பினர்கள் ஆகியோரும் அடங்கியுள்ளதைக் கண்டு தாம் அதிர்ச்சி அடைந்ததாக ஆட்சி மன்ற உறுப்பினரான எலிசபத் வோங் கூறினார்.

“ஆடம்பர வீடுகளைக் கட்டுவதற்கு நிலத்தை பெற்றவர்களில் அவர்களும் அடங்குவர்,” என அவர் சொன்னார்.

அவர் யாரையும் பெயர் குறிப்பிடவில்லை என அந்தச் செய்தியை வெளியிட்ட மாநில அரசாங்க இணையத் தளமான Selangorku.comல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெம்ப்ளர் பார்க்கில் தரம் 3 தரம் 4 என வகைப்படுத்தப்பட்டுள்ள செங்குத்தான மலைச்சாரலில் ஆடம்பர பங்களாக்களைக் கட்டுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக நேற்று தி ஸ்டார் என்ற ஆங்கில நாளேடு செய்தி வெளியிட்டிருந்தது.

12.41 ஹெக்டர் பரப்புள்ள அந்தத் திட்டத்தில் 60 பங்களாக்கள் சம்பந்தப்பட்டுள்ளதாகவும் அதன் தொடக்க விலை ஒரு பங்களாவுக்கு 4 மில்லியன் ரிங்கிட் என்றும் தி ஸ்டார் மேலும் கூறியது.

அதிகாரிகள் நிர்ணயம் செய்துள்ள நிபந்தனைகளையும் வழிமுறைகளையும் திட்ட மேம்பாட்டாளர் பூர்த்தி செய்துள்ளதாக செலாயாங் நகராட்சி மன்றம் சொன்னதாகவும் அந்தச் செய்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருபது ஆண்டு கால கதை

தி ஸ்டார் ஏட்டில் வெளியான தகவல்கள், தாமான் டெம்ப்ளரை டெம்ப்ளர் காட்டு ஒதுக்கீட்டுப் பகுதியையும் இணைத்து குழப்பிக் கொண்டுள்ளதாகத் தோன்றுகிறது என்றும் வோங் சட்ட மன்றத்தில் தெரிவித்தார்.

1987ம் ஆண்டு மாநில அரசாங்கம் அந்த காட்டு ஒதுக்கீட்டுப் பகுதியில் ஒரு பகுதியை கோல்ப் திடல் கட்டுவதற்காக தனியார் நிறுவனம் ஒன்றுக்கு விற்றது என அவர் விளக்கினார்.

“அந்தத் திட்டத்தை 1999ம் ஆண்டு ஜுலை மாதம் 17ம் தேதி மாநில அரசாங்கம் அங்கீகரித்தது. அது 20 ஆண்டு காலத்துக்கு முந்திய கதை. தாமான் டெம்ப்ளர் இப்போது காட்டு ஒதுக்கீட்டுப் பகுதி அல்ல.’

“காட்டு ஒதுக்கீட்டுப் பகுதியை பக்காத்தான் கைப்பற்ற முயலுகிறது என்ற கூறிக் கொள்வதின் வழி பொது மக்களுடைய கண்களை மறைக்க அம்னோ பிஎன் முயலுகிறதா ? நாங்கள் அதனை ஒரு போதும் செய்ததில்லை.”

“853.30 ஹெக்டர் பரப்புள்ள டெம்ப்ளர் காட்டு ஒதுக்கீட்டுப் பகுதி இன்னும் பத்திரமாக இருக்கின்றது. 2008ம் ஆண்டுக்குப் பின்னர் அதனைத் தொடவே இல்லை. அதனை எந்த ஒரு மேம்பாட்டாளருக்கும் அதனை விற்பதில்லை என்பதில்லை என்பதில் மாநில அரசாங்கம் உறுதியாக இருக்கிறது,” என்றும் வோங் சொன்னார்.