முடி திருத்துவோர் சர்ச்சை பக்காத்தானிலிருந்து டிஏபி விலக வேண்டும் என்ற கோரிக்கையை எழுப்பியுள்ளது

சீனர் மற்றும் முஸ்லிம் அல்லாதவருடைய ‘கௌரவத்தைக் காப்பாற்றும் பொருட்டு’ பாஸ் ‘திரும்பத் திரும்ப அத்துமீறல்களில்’ ஈடுபடுவதால் டிஏபி பக்காத்தான் ராக்யாட்டிலிருந்து விலக வேண்டும் என மசீச கேட்டுக் கொண்டுள்ளது.

“சீனர் மற்றும் முஸ்லிம் அல்லாதவருடைய கௌரவத்துக்கு பங்கம் ஏற்படும் வகையில் பாஸ் தொடர்ந்து அத்துமீறல்களிலும் ஒடுக்குமுறையிலும் ஈடுபடுவதை தடுக்கும் வலிமை டிஏபி-யிடம் இல்லை. அதனால் டிஏபி பக்காத்தானிலிருந்து வெளியேற வேண்டும் என நான் கேட்டுக் கொள்கிறேன்,” என மசீச மத்தியக் குழு உறுப்பினர் லோ செங் கோக் ஒர் அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.

கோத்தா பாருவில் முஸ்லிம் அல்லாத முடிதிருத்தும் பெண் ஒருவர் ஆண் வாடிக்கையாளருடைய முடியை திருத்தம் செய்ததற்காக நகராட்சி மன்றம் குற்றப்பதிவு ஆணையை வெளியிட்டுள்ளதாக கூறும் ஊடகத் தகவல்கள் பற்றி அவர் இவ்வாறு குறிப்பிடுவதாகத் தெரிகிறது.

“பாஸ் கட்சியின் தீவிரவாதக் கொள்கைகள் முஸ்லிம் அல்லாதாருடைய பண்பாட்டு நடைமுறைகளுக்கு மருட்டலாக இருக்காது என லிம் குவான் எங் கூறிக் கொண்ட போதிலும் சீனர் மற்றும் முஸ்லிம் அல்லாதவருடைய உரிமைகளை அடகு வைக்க டிஏபி விரும்பவில்லை என்றால் டிஏபி பக்காத்தானிலிருந்து  விலகிக் கொண்டு பாஸ் ஹுடுட் சட்டங்கள் தங்கள் மீது ஏற்படுத்தக் கூடிய பாதிப்புக்கள் பற்றிய சீனர் மற்றும் முஸ்லிம் அல்லாதவருடைய கவலையைப் போக்குவதற்கு தான் பாஸ் கட்சியின் ஹுடுட் சட்டங்களை ஆதரிக்கவில்லை எனப் பிரகடனம் செய்ய வேண்டும்,” என்றும் லோ சொன்னார்.

நேற்று ஊடகங்களில் அந்தத் தகவல் வெளியானதும் மசீச மகளிர் பிரிவுத் தலைமைச் செயலாளர் சியூ லீ ஜியோக் அதனை ஹுடுட் விவகாரத்துடன் பிணைத்து 13வது பொதுத் தேர்தலில் எதிர்க்கட்சிகளுக்கு எதிரான மசீச போராட்டத்தின் முக்கியமான போர் வியூகம்  என அறிவித்தார்.

அதனைத் தொடர்ந்து லோ அறிக்கை வெளியாகியுள்ளது.

TAGS: