இந்திய குத்தகையாளர்களுக்கு தமிழ்ப்பள்ளிகளை சீரமைப்பதற்கு குத்தகைகள் வழங்கியதற்கு பாராட்டையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்ளும் அதேவேளை, குத்தகையாளர்கள் தேர்வு செய்யப்பட்ட விதம் வருத்தத்திற்குரியது என மலேசிய இந்தியர் கட்டுமானம் மற்றும் குத்தகையாளர்கள் சங்கப் பொதுச் செயலாளர் சு. சிவா கூறினார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பத்திரிக்கை அறிக்கையில் கூறப்பட்டுள்தாவது;
கடந்த 21-ஆம் தேதி கல்வி அமைச்சின் 40 பள்ளிகளின் புதிய கட்டிடம் மற்றும் சீரமைப்புக்கு குத்தகையாளர்களை குலுக்கள் மூலம் தேர்வு செய்வதற்காக மொத்தம் 75 குத்தகையாளர்கள் அழைக்கப்பட்டனர். ஆனால் 56 பேர் தான் கலந்துக் கொண்டார்கள். கலந்துகொண்ட 56 குத்தகையாளருக்கும், 5 பள்ளிகளுக்கு குத்தகை மனு போடுவதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.
சராசரி ஒரு பள்ளிக்கு 7 பேர்கள் விதம் கொடுக்கும் குத்தகை மனுக்களுக்கு கட்டுமானத்திற்கான குத்தகைகள் வழங்கப்பட உள்ளது. இதன்படி 7 குத்தகையாளர்கள் 7 வடிவமைப்பை சமர்ப்பிக்க வேண்டும். ஒரு வடிவமைப்புக்கு (Designing consultant) சராசரி RM 50,000 செலவிட வேண்டியிருக்கும். இப்படி பார்த்தால் ஒவ்வொரு பள்ளிக்கும் இந்த அப்பாவி குத்தகையாளர்கள் RM 350,000.00 வெள்ளி செலவிட வேண்டிய அதேநேரம், நம் குத்தகையாளர்கள் 14 மில்லியன் செலவழிக்க வேண்டும்.
280 குத்தகை மனுக்கள் வழங்கப்பட்டு 40 குத்தகைகள் மட்டும்தான் தேர்ந்தெடுக்கப்படும். இந்த குத்தகைகளை பெறுவதற்கு எடுக்கப்படும் முயற்சிக்கு இந்த சமுதாயம் 12 மில்லியன் விரையமாக்க வேண்டும் இவ்வாறான அணுகுமுறை நேரடி பேச்சுவார்த்தை குத்தகைகளுக்கு மட்டும்தான் பொருந்தும். ஏனெனில், குத்தகையாளர் எவ்வளவு பணம் செலவழித்தாலும், குத்தகை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கு மாற்றாக பராமரிப்பு இலாகா (JKR) மூலம் வடிவமைக்கப்பட்டு, குத்தகை பாரம் மற்றும் குத்தகை விபரம் BILL OF QUANTITY (BQ) குறைந்த கட்டணத்தில் குத்தகையாளருக்கு வழங்கலாம். மேலும் ஒவ்வொரு குத்தகை வழங்குவதும் நேர்மையாக இருக்க வேண்டும் என்று மலேசிய இந்தியர் கட்டுமானம் மற்றும் குத்தகையாளர்கள் சங்கம் எதிர்ப்பார்க்கிறது. வெறும் கண்துடைப்புக்காக எங்களை ஒன்றுகூட்டி, குத்தகையாளர் தேர்வு குலுக்களின் வழி ஜனநாயக முறைப்படி நடத்தி விட்டோம் என்று கூறுவதைவிடுத்து, நேர்மையுடனும், பரிவுடனும் நடத்தப்படுவதை அரசாங்கம் உறுதிபடுத்த வேண்டும்.
நமது பிரதமர் அறிவித்த சிறப்பு சலுகைகள், முரண்பாடான அமலாக்குதல் மக்களது நம்பிக்கையை கேள்விக் குறியாக்கிவிடும். பிரதமரின் வாக்குறுதிகள் இந்த ஏழை சமுதாயத்திற்கு கண்டிப்பாக கிடைக்க வழிவகுக்க வேண்டும்.
மலேசிய இந்தியர் கட்டுமானம் மற்றும் குத்தகையாளர் சங்கம், இந்த அமலாக்க முறைக்கு தனது அதிருப்தியை அரசாங்கத்திற்கு தெரிவித்துக்கொள்வதோடு; சிறப்பு ஒதுக்கீடு மட்டும் இல்லாமல், குத்தகையாளர்கள் எதையும் பணயம் வைக்காமல் நேரடியாக அவர்களின் திறமைக்கு ஏற்ப குத்தகை வழங்குவதை பிரதமர் அவர்கள் உறுதி செய்ய வேண்டும் என சு.சிவா தன அறிக்கையின் வழியாக கேட்டுக்கொண்டார்.