லிம் குவான் எங்: மக்களவை பதில் ‘குளறுபடி’ உண்மையான பிஎன் நிறத்தைக் காட்டி விட்டது

சுயேச்சை சீனப் பள்ளிகள் விவகாரம் மீது வழங்கப்பட்ட நாடாளுமன்ற பதிலைத் திருத்துவதற்குக் கல்வி அமைச்சு எடுத்துள்ள அவமானத்தை தரும் நடவடிக்கை பிஎன் கூட்டரசு அரசாங்கத்தின் உண்மையான நிறத்தை அம்பலப்படுத்து விட்டது என டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் கூறியிருக்கிறார்.

“நாடாளுமன்றத்தில் கல்வி அமைச்சர் முஹைடின் யாசின் இறுதியில் உண்மையை சொல்லி விட்டார். நாட்டில் இப்போது இயங்கும் 60 சுயேச்சை சீனப் பள்ளிகள் 1961ம் ஆண்டுக்கான கல்விச் சட்டத்தின் கீழ் தேசியப் பாடத் திட்டத்தைப் பின்பற்றவில்லை என அவர் கூறியுள்ளார்.’

“ஆகவே புதிய சுயேச்சை சீன உயர் நிலைப் பள்ளிகளை அமைப்பதற்கு அரசாங்கம் அனுமதிக்காது. அதனை வேறு வகையாகச் சொன்னால் புதிய சுயேச்சை சீன உயர் நிலைப் பள்ளிகளை அமைப்பது முடியாத காரியம் ,” என லிம் இன்று விடுத்த அறிக்கை தெரிவித்தது.

பிஎன் பாண்டான் எம்பி ஒங் தீ கியாட் தொடுத்த கேள்விக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு நாடாளுமன்றத்தில் எழுத்துப்பூர்வமாகப் பதில் அளிக்கப்பட்டது. ஆனால் நேற்று அமைச்சு அந்தப் பதிலை மீட்டுக் கொண்டு அதற்கு பதில் திருத்தப்பட்ட பதிலை வழங்கியது. சீன வாக்காளர்களுடைய எதிர்ப்பைத் தவிர்ப்பதற்காக அவ்வாறு செய்யப்பட்டதாகக் கருதப்படுகின்றது.

சுயேச்சை சீனப் பள்ளிகளுக்கான விண்ணப்பங்கள் இனிமேல் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது எனக் கூறும் வாசகம் திருத்தப்பட்ட பதிலில் காணப்படவில்லை. அதற்குப் பதில் அவற்றின் நடப்புத் தகுதி தொடரும் என்று மட்டும் அது தெரிவித்தது.

‘புதிய சுயேச்சை சீன உயர் நிலைப்பள்ளிகளைக் கட்டுவதற்கான விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது” என்ற வாசகம் திருத்தப்பட்ட பதிலில் இடம் பெறவில்லை என்றாலும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படும் என புதிய பதிலில் கூறப்படவில்லை என்றும் லிம் விடுத்த அறிக்கை குறிப்பிட்டது.

இதனிடையே முஹைடினின் நாடாளுமன்றப் பதிலை கண்டிக்கும் அறிக்கையை டோங் ஜோங் என சீனக் கல்விப் போராட்ட அமைப்பும் வெளியிட்டுள்ளது.

சுயேச்சை சீன உயர் நிலைப் பள்ளிகள் தேசியப் பாடத் திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு அமெரிக்கா, பிரிட்டன், சீனா, தைவான், சிங்கப்பூர் ஆகியவற்றிலிருந்து பெறப்பட்ட அம்சங்களையும் இணைத்து  இயங்குவதாக அது கூறியது.

“பிரதமரும் துணைப் பிரதமரும் வெவ்வேறு அரங்குகளில் சுயேச்சை சீன உயர் நிலைப் பள்ளி மாணவர்களுடைய திறமையையும் நாட்டு நிர்மாணிப்புக்கு அவர்கள் ஆற்றும் பங்கையும் வெளிப்படையாக அங்கீகரித்துள்ளனர்.”

“சுயேச்சை சீன உயர் நிலைப் பள்ளிகளை அங்கீகரிக்கும் பிரதமருக்கும் அவரது அறிக்கைகளுக்கு முரண்பாடாக முஹைடினின் நவம்பர் 22 நாடாளுமன்றப் பதில் அமைந்துள்ளது,” என்றும் அது கூறியது.

ஆகவே 2013-2025 தேசியக் கல்விப் பெருந்திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்க பெட்டாலிங் ஜெயாவில் நடத்தப்படும் மாபெரும் பேரணியில் கலந்து கொள்ளுமாறு டோங் ஜோங் மக்களைக் கேட்டுக் கொண்டது.

அந்த கல்விப் பெருந்திட்டம் மலாய் மொழியைப் போதானா மொழியாகக் கொண்ட ஒரே கல்வி முறைக்கு வழி வகுத்து விடும் என்றும் அது கூறிக் கொண்டுள்ளது.

TAGS: