கிளந்தான் தடை: முஸ்லிம் அல்லாதாருக்கு கருணை காட்டுங்கள் என்கிறார் ஆட்சி மன்ற உறுப்பினர் ஒருவர்

முடிதிருத்தும் தொழிலில் ஈடுபட்டுள்ள பெண்கள் ஆண்களுக்கு முடி திருத்துவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை அமலாக்கும் போது கோத்தா பாரு நகராட்சி மன்றம் சம்பந்தப்பட்ட இரு தரப்புக்களும் முஸ்லிம் அல்லாதவர்களாக இருந்தால் கருணை காட்ட வேண்டும் என கிளந்தான் மாநில முதுநிலை ஆட்சி மன்ற உறுப்பினர் அனுவார் தான் அப்துல்லா கூறுகிறார்.

என்றாலும் அந்த விவகாரம் மீது தமக்கு அதிகாரம் இல்லை என வலியுறுத்திய அவர் அந்தத் தடையை நகராட்சி மன்றம் அமலாக்குவதில் தாம் தலையிடப் போவதில்லை என்றார்.

“கிளந்தான் மாநில அரசாங்கக் கொள்கை தெளிவானது, எளிமையானது- முடிதிருத்தும் தொழிலில் ஈடுபட்டுள்ள பெண்கள் ஆண்களுக்கு முடி திருத்தும் சேவையை வழங்கக் கூடாது,” என சுற்றுப்பயணம், பண்பாடு, சமூக ஒற்றுமை ஆகியவற்றுக்குப் பொறுப்பான ஆட்சி மன்ற உறுப்பினரான அனுவார் கூறினார்.

கருணை என்பதை “100 விழுக்காடு சுதந்திரமாக” முடி திருத்தும் நிலைய உரிமையாளர்கள் கருதக் கூடாது என்றும் அவர் சொன்னார்.

அந்தத் தடைக்கும் இனத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என விளக்கிய அவர், ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையில் அணுக்கம் இருக்கக் கூடாது என்பதில் அது கவனம் செலுத்துகிறது என்றார்.

கடந்த செவ்வாய்க்கிழமை இரவு கேபி கடைத் தொகுதியில் இயங்கும் E-Life hair salon முடி திருத்தும் நிலையத்தைச் சேர்ந்த முடி திருத்தும் ஊழியர் ஒருவருக்கு ஆண் வாடிக்கையாளருடைய முடியை திருத்தம் செய்ததற்காக சாதாரண உடையில் இருந்த நகராட்சி மன்ற  அமலாக்க அதிகாரி ஒருவர் குற்றப்பதிவை (சம்மன்) வழங்கினார்.

முஸ்லிம் அல்லாதவர் மீது இஸ்லாமியக் கட்டுப்பாடுகளை விதிக்கும் பாஸ் முயற்சியின் ஒரு பகுதி அந்த நடவடிக்கை என மசீச தலைவர்கள் கண்டித்துள்ளனர்.