பேராசிரியர்: பிஎன் 120 இடங்களை வெல்லும், உறுதியில்லாத தொகுதிகள் 24

தேர்தல் இன்று நடைபெற்றால் பிஎன் 120 நாடாளுமன்ற இடங்களிலும் பக்காத்தான் ராக்யாட் 70 இடங்களிலும்  வெல்லும். 24 தொகுதிகள் உறுதியற்றவை என பேராசிரியர் சம்சுல் அம்ரி பஹாருதின் கூறினார்.

மலேசியாவின் மொத்த நாடாளுமன்றத் தொகுதிகள் 222. அவற்றுக்கு அடுத்த ஜுன் மாதத்திற்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

சாதாரண பெரும்பான்மையான 112 இடங்களுடன் அரசாங்கத்தை அமைப்பதற்கு 120 இடங்கள் அல்லது அதற்குச் சற்று கூடுதலாக பிஎன் பெறும் என சம்சுல் சினார் ஹரியானிடம் கூறினார்.

“பிஎன் குறைந்த பட்சம் 120 இடங்களைப் பிடிக்கும். அந்த எண்ணிக்கை கூடக் கூடிய சாத்தியமும் உண்டு. ஆனால் அது 120க்குக் குறையாது என மலேசிய தேசியப் பல்கலைக்கழகத்தில் இன வம்சாவளி ஆய்வியல் மய்ய இயக்குநரான அவர் சொன்னார்.

தமது ஆய்வு செப்டம்பர் மாதம் மேற்கொள்ளப்பட்ட ஒர் ஆய்வின் அடிப்படையில் அமைந்தது என்றும் 2013ம் ஆண்டு வரவு செலவுத் திட்டம் தாக்கல் செய்யப்பட்டதால் ஏற்பட்ட தாக்கத்தை அறிந்து கொள்வதற்காக அடுத்த மாதம் இன்னொரு ஆய்வை மேற்கொள்ளப் போவதாக அவர் சொன்னார்.

2013 வரவு செலவுத் திட்டத்தின் Bantuan Rakyat 1Malaysia நிதிகள் ஜனவரி பிப்ரவரி மாதங்களில் விநியோகம் செய்யப்படும். அத்துடன் அரசாங்க ஊழியர்களுக்கு ஒன்றரை மாத போனஸ் வழங்கப்படும். அவை நடப்பு 120 இடங்களை பிஎன் மேலும் அதிகரிப்பதற்கு உதவும் என சம்சுல் எதிர்பார்க்கிறார்.

அரசியல் வடிவமைப்பு மாற்றத்தை நோக்கிச் செல்கிறது

தற்போது பிஎன் -னுக்கு 137 இடங்கள் உள்ளன. பிகேஆர் (23), டிஏபி (29), பாஸ் (22), மலேசிய சோஷலிசக் கட்சி (1), சுயேச்சை (8), Parti Kesejahteraan Insan Tanah Air (1).

தித்திவாங்சா எம்பி டாக்டர் லோ லோ கசாலி காலமானதைத் தொடர்ந்து ஒரிடம் காலியாக உள்ளது.

நடப்பு நாடாளுமன்றத்தின் தவணைக் காலம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் 28ம் தேதி நிறைவடைகின்றது.

அதற்கு பின்னர் 60 நாட்களுக்குள் தேர்தல் ஆணையம் தேர்தல்களை நடத்த வேண்டும். வரும் தேர்தல் மிகவும் கடுமையானதாக இருக்கும் எனக் கருதப்படுகின்றது. 2008ம் ஆண்டு தேர்தலில் பிஎன் எதிர்பாராத தோல்விகளைச் சந்தித்தது. அதன் பாரம்பரிய மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை பறி போனது.

13வது பொதுத் தேர்தல் முடிவுகள் எந்த வழியிலும் போகக் கூடும் என டிஏபி நாடாளுமன்றக் குழுத் தலைவர் லிம் கிட் சியாங் கூறியுள்ளார்.

தான் 109 இடங்களை வெல்ல இயலும் என எதிர்த்தரப்புக் கூட்டணியான பக்காத்தான் ராக்யாட் நம்புவதாக சம்சுல் சொன்னார். பாரம்பரிய பிஎன் கோட்டையான ஜோகூரில் அதற்கு கூடுதல் இடங்கள் கிடைக்கும் எனக் கருதப்படுகின்றது.

“ஆனால் சாதாரணப் பெரும்பான்மையுடன் அரசாங்கத்தை அமைக்க 112 இடங்கள் தேவைப்படும் என்பதால் பக்காத்தான் அரசாங்கத்தை அமைப்பதற்கு அது போதுமானது அல்ல.”

“ஆகவே குறைந்த பெரும்பான்மையுடன் பிஎன் அரசாங்கத்தைத் தக்க வைத்துக் கொள்ளும் என எதிர்பார்க்கலாம்,” என்றார் அவர்.

 

TAGS: