ஹிம்புனான் ஹிஜாவ் இன்றிரவு டாட்டாரான் மெர்டேகாவில் முகாமிடத் திட்டமிட்டிருந்தது. ஆனால், டாட்டாரானைச் சுற்றிலும் தடுப்புகள் போடப்பட்டிருப்பதால் அத்தடுப்புகளைத் தாண்டிச்செல்வதில்லை என அது முடிவு செய்துள்ளது.
கோம்பாக், தாமான் மெலாவாரில் பாஸின் முன்னாள் தலைமையகத்தில் சுமார் 2,000 ஆதரவாளரிடையே பேசிய ஹிம்புனான் ஹிஜாவ் தலைவர் வொங் தாக், சட்டத்தைப் பின்பற்ற வேண்டும் என அக்கூட்டத்தாரிடம் வலியுறுத்தினார்.
தடுப்புகளைத் தள்ளி விடாதீர்கள்… அமைதியாக நடந்துகொள்ளுங்கள்.. இன்றைய இரவு அமைதியான இரவாக இருக்கட்டும்”, என்று நகர மையத்தை நோக்கி நடைப்பயணத்தைத் தொடரும் முன்னர் அவர் கூறினார்.
டாட்டாரான் மெர்டேகா நடைப்பயணத்தின் இலக்கு அல்ல என்று கூறிய அவர், தெரிவிக்க வேண்டிய செய்தியை . நடைப்பயணத்தின் மூலமாக தெரிவித்தாகிவிட்டது என்றார்.
பகாங், கெபெங்கில் லைனாஸ் அரியமண் சுத்திகரிப்பு ஆலைக்கு எதிர்ப்புத் தெரிவிக்க ஹிம்புனான் ஹிஜாவ் குவாந்தானிலிருந்து கோலாலலும்பூருக்கு மேற்கொண்ட 300கிமீ நடைப்பயணம் இப்போது இறுதிக்கட்டத்தில் உள்ளது.
நவம்பர் 13-இல், அந்நடைப்பயணம் தொடங்கியது.சிலருடன் தொடங்கிய அந்நடைப்பயணத்தில் நாளாக நாளாக பலரும் வந்து சேர்ந்துகொண்டார்கள்.
இன்றிரவு டாட்டாரான் மெர்டேகாவில் தங்கிவிட்டு நாளை அங்கு வரும் எம்பிகள் குழு ஒன்றிடம் தங்களை எதிர்ப்பை எடுத்துச் சோல்ல அவர்கள் முதலில் திட்டமிட்டிருந்தனர்.
ஆனால், கோலாலும்பூர் மாநகராண்மைக் கழகம்(டிபிகேஎல்) டாட்டாரான் மெர்டேகாவில் “எல்லாவித நடவடிக்கைகளுக்கும்” தடை விதித்துள்ளது.