பிரதமர்: பிஎன் -னுக்கான சீனர் ஆதரவு நாட்டுக்கு மேலும் வெற்றியைக் கொண்டு வரும்

பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், தமது தலைமைத்துவத்தை விரும்பும் சீனச் சமூகம் தேசிய உருமாற்றத் திட்டங்கள் வழி இந்த நாட்டுக்கு மேலும் வெற்றிகளைக் கொண்டு வர அம்னோ. பிஎன் -னுக்கு வலுவான ஆதரவை வழங்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

அடுத்த வாரம் தொடங்கும் 66வது அம்னோ பொதுப் பேரவையை ஒட்டி வழங்கிய சிறப்புப் பேட்டியில் அவர் இவ்வாறு கூறினார்.

சீன சமூகத்தில் உள்ள சில தரப்புக்கள் நஜிப் தலைமைத்துவத்தை விரும்புகின்றன. ஆனால் அவரது கட்சியையும் பிஎன் -னையும் அல்ல. அந்தத் தரப்புக்கள் தங்கள் ஆதரவை வழங்குவதில் பிளவுபட்டுள்ளனர் என சில அரசியல் பார்வையாளர்கள் கூறியுள்ள கருத்துக்கள் பற்றி வினவப்பட்ட போது நஜிப் அவ்வாறு சொன்னார்.

2008-உடன் ஒப்பிடுகையில் அரசாங்கம் வழி நடத்தும் பாதை குறித்து மனநிறைவு அடைந்துள்ள சீன சமூகத்தினர் உட்பட எல்லாத் தரப்புக்களிடமிருந்தும் ஆதரவு அதிகரித்துள்ளதைத் தாம் காண்பதாக பெர்னாமாவுக்கும் உத்துசான் மலேசியாவுக்கும் அளித்த அந்தப் பேட்டியில் அம்னோ தலைவருமான நஜிப் சொன்னார்.

அரசாங்கத்துக்கான தங்கள் ஆதரவு குறித்து இன்னும் பிளவுபட்டிருக்கும் சீன சமூகத் தரப்புக்கள் பற்றி தொடர்ந்து குறிப்பிட்ட அவர்,” நாட்டுக்கு உருமாற்றங்களைக் கொண்டு வரக் கூடிய பிரதமர் என அந்தத் தரப்புக்கள் என்னை விரும்பினால் அவை எனக்கு ஆதரவு அளிக்க வேண்டும்,” என்றார்.

“வலுவான பிரதமர் என்பது முழுமையான ஆதரவைப் பெற்ற பிரதமர் எனப் பொருள்படும். அதனால் நாட்டுக்கு மேலும் வெற்றிகள் கிடைக்கும்,” என அவர் மேலும் சொன்னார்.

முழுமையான கட்டளையைப் பெறாத பிரதமர் பலவீனமாக இருப்பார். அவர் என்ன மாற்றங்களைக் கொண்டு வர விரும்பினாலும் எதிர்க்கப்படும் எனப் பிரதமர் குறிப்பிட்டார்.

“அரசியல் ஆதரவு இல்லாத தலைமைத்துவம் தார்மீக வலிமை இல்லாத தலைமைத்துவமாகும். ஒரு தலைவருக்கு தார்மீக ஆதரவு இல்லை என்றால் நாட்டுக்குப் பெரிய மாற்றங்களைக் கொண்டு வரும் எதிர்நோக்கும் சவால்களைச் சமாளிக்கச் சிரமப்படுவார்.”

2009ம் ஆண்டு தாம் பிரதமராகப் பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் பல விரிவான உருமாற்றத் திட்டங்களை அறிமுகம் செய்துள்ளார். அவற்றுள் அரசாங்க பட்டுவாடா முறை, அரசியல், பொருளாதாரம் ஆகியவையும் அடங்கும். அவர் சாதகமான விளைவுகளை அளிக்கத் தொடங்கியுள்ளன.

அம்னோ அல்லது பிஎன் -னிடம் பல பலவீனங்கள் இருந்த போதிலும் எதிர்த்தரப்புக் கூட்டணியுடன் ஒப்பிடுகையில் நாங்கள் எவ்வளவோ மேலானவர்கள் என்றும் நஜிப் சொன்னார்.

“அவை அம்னோ அல்லது பிஎன் -னை விரும்பவில்லை என்றாலும் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். ஒரே நோக்கத்துடன் ஒரே தொனியில் பேசிக் கொண்டிருக்கிறோம். ஆனால்  எதிர்க்கட்சிகளிடையே நிலைமை அப்படி இல்லை. அவை மோதிக் கொள்கின்றன. சித்தாந்தத்தில் கூட ஒற்றுமை இல்லை. அடுத்த பிரதமராக யார் பொறுப்பேற்பது என்பதில் கூட அவற்றிடையே இணக்கம் இல்லை,”

சீன வாக்காளர்களிடம் அரசாங்கம் பிரச்னைகளை எதிர்நோக்குவதை ஒப்புக் கொண்ட நஜிப், அரசாங்கம் அவர்களை ஒதுக்காது என்றும் அவர்களுடைய கோரிக்கைகளையும் தேவைகளையும் புரிந்து கொள்ள அவர்களுடன் கலந்துறவாடுவதைத் தீவிரப்படுத்தும் என்றும் தெரிவித்தார்.

நகரங்களில் வாழ்கின்ற சீனர்கள் அரசாங்கத்தை அதிகம் சார்ந்திருக்கவில்லை என்பதைத் தாம் உணருவதாக குறிப்பிட்ட நஜிப், தனிநபர் என்ற முறையிலும் சமூகம் என்ற முறையிலும் அவர்கள் அடைந்துள்ள வெற்றிக்கு  அரசாங்கக்  கொள்கைகளே காரணம் என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் பிரதமர் உத்துசான் மலேசியாவுக்கும் பெர்னாமாவுக்கும் அளித்த அந்தப் பேட்டியில் குறிப்பிட்டார்.

பெர்னாமா

TAGS: