லைனாஸ் எதிர்ப்புக் குழு: நஜிப் அவர்களே, எங்கள் அறிக்கையை நீங்கள் படிக்கவே இல்லையா ?

அரிய மண் தொழில் கூடம் தீங்கை ஏற்படுத்தக் கூடியது என்பதற்கு அறிவியல் ஆதாரங்கள் இருந்தால் மட்டுமே தாம் லைனாஸ் தொழில் கூடத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப் போவதாக பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கூறியுள்ளதை ஹிம்புனான் ஹிஜாவ் தலைவர் வோங் தாக் நிராகரித்துள்ளார்.

அந்த விவகாரம் மீது லைனாஸ் எதிர்ப்பு இயக்கம் சமர்பித்த அறிக்கையை நஜிப் வாசிக்கவே இல்லை என வோங் கூறிக் கொண்டார்.

“அந்த நிலைமை வருத்தமளிக்கிறது. பிப்ரவரி 26ம் தேதி ஹிம்புனான் ஹிஜாவ் பேரணிக்குப் பின்னர் அவர் அத்தகைய அறிக்கையை விடுத்துள்ளார்,” என வோங் நேற்றிரவு கூறினார்.

“அவர் எங்கள் அறிக்கையைப் படிக்கவே இல்லை. அதற்கு அறிவியல், தொழில்நுட்ப, புத்தாக்க அமைச்சர் மாக்ஸிமுஸ் ஒங்கிலி பொறுப்பேற்றுக் கொண்டு உடனடியாகப் பதவி துறக்க வேண்டும். ஏனெனில் அவர் பிரதமருக்கு புள்ளி விவரங்களை வழங்கியிருக்க வேண்டும்.”

“நஜிப் ‘எப்படி உயிர் பிழைப்பது என்பதிலேயே தீவிரக் கவனம் செலுத்துகிறார்’ என அவர் மேலும் குறிப்பிட்டார்.

குவாந்தான் கெபெங்கில் அமையும் லைனாஸ் தொழில் கூடம் பற்றியும் அதன் நடவடிக்கைகள் பற்றியும் பொது மக்கள் தெரிவித்த ஆட்சேபத்தை அரசாங்கம் அலட்சியம் செய்து விட்டதாகக் கூறப்படுவதை நஜிப், சின் சியூ நாளேட்டுக்கு வழங்கிய சிறப்புப் பேட்டியில் கூறியுள்ளார்.

அந்தப் பேட்டி நேற்று அந்த ஏட்டின் மாலைப் பதிப்பில் வெளியிடப்பட்டுள்ளது.

மக்கள் தம்மை நம்ப வேண்டும் எனக் குறிப்பிட்ட பிரதமர், மக்களுக்கு தீங்கைத் தரக் கூடிய எதனையும் பிரதமர் என்ற முறையில் தாம் எதனையும் செய்யப் போவதில்லை என்றார்.

“லைனாஸ் தீங்கக் கொண்டு வரும் என்பதை நிரூபிப்பதற்கான அறிவியல் ஆதாரங்களைக் காட்டுங்கள். அந்தப் பிரச்னையின் முக்கிய அம்சமே அது தான். அது மலேசியர்களுடைய நலன்களைப் பாதிக்கும் என்பதை நம்புவதற்கு போதுமான அறிவியல் ஆதாரங்கள் இருந்தால் மட்டுமே நான் நடவடிக்கை எடுப்பேன்.,” என அவர் சொன்னதாகவும் அந்த நாளேடு கூறியது.

“அது என்னுடைய வாக்குறுதி. மக்களுக்கு அது தீங்கைக் கொண்டு வரும் என ஆதாரங்கள் காட்டினால் நான் நடவடிக்கை எடுப்பேன்.”

லைனாஸ் எதிர்ப்பு போக்கு கடுமையாக இருப்பது பற்றிக் குறிப்பிட்ட நஜிப், அறிவியல் ஆதாரங்களைக் காட்டிலும் உணர்வுகளுக்கு அடிமையானதால் சிந்திப்பதை நிறுத்திக் கொண்டு அளவுக்கு அதிகமாகச் செயல்படுகின்றனர் என நஜிப் சொன்னார்.

அது மிகவும் வருத்தத்தைத் தருகிறது. அந்த விஷயத்தில் 800க்கும் மேற்பட்ட லைனாஸ் ஊழியர்களுடைய வாழ்வு ஆதாரமும் மலேசியாவின் தோற்றமும் இதில் சம்பந்தப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் கூறினார்.

அத்தகைய விவகாரங்களைக் கையாளும் போது அரசாங்கம் அடிக்கடி மாறுபடுகிறது என்ற தோற்றத்தை ஏற்படுத்தக் கூடாது என்றும் நஜிப் சொன்னார்.

அது குறித்து கருத்துரைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்ட போது வோங் இவ்வாறு பதில் அளித்தார், “அது தான் வரலாறு.”

TAGS: