டாக்டர் மகாதீர்: நாங்கள் சீர்திருத்தம் செய்து விட்டோம், உங்களுக்கு இன்னும் வேறு என்ன வேண்டும் ?

சீர்திருத்தங்களில் தான் ஈடுபாடு கொண்டுள்ளதை நிரூபிப்பதற்கு அம்னோ வழி நடத்தும் பாரிசான் நேசனல் அரசாங்கம் நிறையச் செய்துள்ளது என முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் கூறுகிறார்.

புத்ரா உலக வாணிக வளாகத்தில் பூசல்கள், சமரசம் மீதான அனைத்துலகக் கருத்தரங்கில் கலந்து கொண்டுள்ள அவர் அதனூடோ நிருபர்களிடம் பேசினார்.

அந்தச் சீர்திருத்தங்கள் நீண்ட கால விளைவுகளைக் கொண்டவை. அம்னோ இது வரை செய்திராத அளவுக்கு மேலாக அவை சென்றுள்ளன என்றார் அவர்.

“என்ன சீர்திருத்தங்கள் ? இசா என்ற உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டம் அகற்றப்பட்டுள்ளது. நாங்கள் முன்பு ஆதரிக்காத பல வகையான விஷயங்களுக்கு ஆதரவு அளிக்குமாறு நாங்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளோம். நாங்கள் அவற்றைச் செய்துள்ளோம்.”

“ஒரு காலத்தில் நீங்கள் சிங்க நடனத்தையும் கடல் நாக நடனத்தையும் நடத்த முடியாது. அவை அனுமதிக்கப்படவில்லை. இப்போது நாங்கள் தேவாலயங்களுக்குக் கூட பணம் கொடுக்கிறோம். உங்களுக்கு மேலும் என்ன சீர்திருத்தங்கள் வேண்டும் ?” என அவர் வினவினார்.

சீர்திருத்தங்கள் விரைவு செய்யப்பட வேண்டிய அவசியம் உள்ளதா என அவரிடம் இதற்கு முன்னர் வினவப்பட்டது.

இன்னும் அதிகமான சீர்திருத்தங்களை மக்கள் விரும்பினால் தாம் அதனை “பிரதமரிடம் தெரிவிப்பதாகவும் அவர் அதனை உடனடியாகச் செய்வார் என்றும் மகாதீர் புன்னகையுடன் கூறினார்.

அந்தக் கருத்தரங்கில் உரையாற்றிய பின்னர் நிருபர்களைச் சந்தித்த மகாதீரிடம் நாளை தொடங்கும் அம்னோ ஆண்டுப் பொதுக் கூட்டம் தொடர்பில் கேள்விகள் தொடுக்கப்பட்டன.

‘போதுமான அரவணைப்பு’

அம்னோ பல இதர கட்சிகளை ஏற்றுக் கொண்டுள்ளதால் அது இதை விட மேலாக அரவணைக்கும் போக்கை பின்பற்ற முடியாது என்றும் நீண்ட காலம் அம்னோ தலைவராக இருந்துள்ள அவர் சொன்னார்.

“நாங்கள் மசீச, மஇகா, சபா சரவாக் கட்சிகள், கெரக்கான், பார்ட்டி பெசாக்கா பூமிபுத்ரா ((PBB), பாஸ் ஆகியவற்றை ஏற்றுக் கொண்டோம். சேர்ந்து கொள்ளுமாறு நாங்கள் டிஏபி-யைக் கூட கேட்டோம். ஆனால் அது ‘முடியாது’ நாங்கள் முடியாது, நாங்கள் எதிர்க்கட்சி எனச் சொல்லி விட்டது. ஆகவே இனியும் எந்த அளவுக்கு நாங்கள் அரவணைத்துக் கொள்ள முடியும் ?” என அவர் வினவினார்.

இதனிடையே இளம் வாக்காளர்களிடம் குறிப்பாக மலாய்க்காரர் அல்லாதாரிடையே காணப்படும் வெறுப்பு பற்றிக் குறிப்பிட்ட மகாதீர், இளைஞர்களுக்கு ஒர் இலட்சியத்தின் மீது பிடிப்பு இருப்பது இயல்பு ஆனால் மலேசிய அரசாங்கம் இளைஞர்களை ஏற்றுக் கொள்வதில் ‘மற்ற நாடுகளைக் காட்டிலும்’ நிறையச் செய்துள்ளது எனச் சொன்னார்.

அரபு எழுச்சி நிகழ்ந்த நாடுகளில் எதிர்கால வாய்ப்புக்கள் மங்கலாக இருந்ததால் கல்வி கற்ற இளைஞர்கள் சாலைகளில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆனால் மலேசிய இளைஞர்களுக்கு எல்லா வகையான பயிற்சிகளும் வாய்ப்புக்களும் கொடுக்கப்பட்டன.

மலாய்க்காரர் அல்லாத இளைஞர்கள் ஒதுக்கப்படவில்லை. ஆனால் அவர்கள் பங்கேற்க விரும்பவில்லை. நாங்கள் எதையாவது செய்யும் போது அவர்கள் சேர விரும்பவில்லை,” என்றார் அவர்.

 

TAGS: