அம்னோவின் கோட்டைக்குள் பக்காத்தான் ஊடுருவல்

ஜோகூர், பிஎன்னின் அசைக்கமுடியாத கோட்டையாகவும் அங்குள்ளவர்களின் வாக்குகள் அதன் ‘வைப்புத் தொகையாகவும்’ நெடுகிலும் கருதப்பட்டு வந்திருக்கிறது. ஆனால், பாஸ் ஆராய்ச்சி மையம் (பிபிபி) மேற்கொண்ட ஆய்வு ஒன்றில் அந்தத் தெற்கத்தி மாநில வாக்காளரிடையே மாற்றம் ஏற்பட்டு வருவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன.

அங்குள்ள இளம், நடுத்தர-வருமானம் பெறும் வாக்காளரிடையே குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டிருப்பதாக அம்மையம் கூறியது. இது, எதிர்வரும் தேர்தலில் பக்காத்தானுக்கு அங்கு நல்ல வரவேற்பு இருக்கும் என்ற நம்பிக்கையைத் தோற்றுவித்துள்ளது.

பக்காத்தான் ஜோகூரைக் கைப்பற்றும் வாய்ப்பு “மிகப் பிரகாசமாகவுள்ளது” என்றுகூட பிபிபி நடவடிக்கை இயக்குனர் ஸுக்டி மர்ஸுகி,   கூறுகிறார்.

26 நாடாளுமன்ற தொகுதிகளில் 13இல்- செகாமாட், லாபிஸ், லெடாங், பக்ரி, மூவார், பத்து பஹாட், குளுவாங், கேலாங் பாத்தா, தெப்ராவ், பாசிர் கூடாங், ஜோகூர் பாரு, பூலாய், கூலாய் ஆகியவற்றில்- நடத்தப்பட்ட ஆய்வில் பிஎன்னுக்கு வாக்காளரின் ஆதரவு 50விழுக்காட்டுக்கும் குறைவாக இருப்பது தெரிய வந்துள்ளது.

அவை பல இனங்கள் கலந்துவாழும் தொகுதிகள். பெரும்பாலான தொகுதிகளில் மலாய்க்காரர், மலாய்க்காரர்-அல்லாதார் எண்ணிக்கை ஏறத்தாழ சமமாகவே உள்ளது.

இதைப் பற்றிக் கருத்துரைத்த பாஸ் உதவித் தலைவர் சலாஹுடின் ஆயுப், அரசாங்கப் பல்கலைக்கழகம் ஒன்றின் அரசியல் ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஓர் ஆய்வையும் சுட்டிக்காட்டினார். அது ஜோகூரின் மலாய் வாக்காளரிடையே பக்காத்தானுக்கான ஆதரவு மூன்றிலிருந்து ஐந்து விழுக்காடுவரை உயர்ந்திருப்பதைக் காண்பித்தது.

ஆனால், பிபிபி-இன் ஆய்வு மலாய்க்காரரிடையே பக்காத்தானுக்குள்ள ஆதரவு இரண்டிலிருந்து மூன்று விழுக்காடுவரை உயர்ந்திருக்கலாம் என்கிறது.

மசீச வசமுள்ள தொகுதிகள் கவிழலாம்

மலாய்க்காரர்களின் ஆதரவும் சீனர்களின் ஆதரவும் சேர்வதால் அங்கு ஏழுக்கு மேற்பட்ட தொகுதிகள் பக்காத்தான் கைகளுக்கு வரலாம் என்கிறார் ஸுக்டி.

இப்போதைக்கு ஜோகூரில் 25 நாடாளுமன்ற தொகுதிகள் பிஎன் வசமுள்ளன. பக்காத்தானிடம் ஒன்றே ஒன்று. பக்ரி மட்டும் டிஏபி வசமுள்ளது. பிஎன்னைப் பொறுத்தவரை அம்னோவிடம் 16 தொகுதிகளும் மசீசவிடம் ஏழும், மஇகாவிடம் ஒன்றும் கெராக்கானிடம் ஒன்றும் உள்ளன.

ஜோகூரின் 56 சட்டமன்ற இடங்களில் 26மட்டுமே பிஎன்னுக்கு முழுமையான ஆதரவுள்ள “வெள்ளைத் தொகுதிகள்” என பிபிபி-இன் ஆய்வு மேலும் கூறுகிறது. மற்ற தொகுதிகளில் யாருக்கு ஆதரவு என்பது தெளிவில்லாமல் இருக்கிறது. இப்போது ஆறு சட்டமன்ற இடங்கள்தான் பக்காத்தானிடம் உள்ளன. டிஏபி 4, பாஸ் 2.

அந்த ஆய்வில், பூலோ காசாப், கெமேலா, புக்கிட் செராம்பாங், ஜோராக் செரோம், புக்கிட் நன்னிங், சுங்கை பாலாங், செமேரா, ஸ்ரீ மேடான், செமாராங், பாரிட் ராஜா, பெங்காராம், செங்காராங் மக்கோட்டா,, கஹாங், பாண்டி, பாசிர் ராஜா, செடிலி, ஜோகூர் லாமா, பெனாவார், தஞ்சோங் சூராட்,, திராம், பெனுட், பூலாய் செபாத்தாங், குகுப் ஆகியவை மட்டுமே பிஎன்னுக்குப் பாதுகாப்பான இடங்களாக தெரிகின்றன.

ஆய்வில் சர்ச்சைக்குரிய ரபிட் எண்ணெய் சுத்திகரிப்பு திட்டம் கருத்தில் கொள்ளப்படவில்லை என ஸுக்டி தெரிவித்தார். அத்திட்டம் பெங்கேராங் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ளது. அத்தொகுதி பெனாவார், தஞ்சோங் சுராட் ஆகிய சட்டமன்ற இடங்களை உள்ளடக்கியது.

ஆக, ரபிட் விவகாரம், பெல்டா விவகாரங்கள், இஸ்கந்தர் திட்டம், “தூய்மையான” தலைமைத்துவம் தேவை என்ற மக்களின் கோரிக்கை ஆகியவற்றை எல்லாம் வைத்துப் பார்க்கும்போது மாற்றரசுக் கட்சி அம்னோவின் கோட்டையைக் கைப்பற்ற நல்ல வாய்ப்பு  இருப்பதாக அவர் சொன்னார்.

சலாஹுடின் ஜோகூர் எம்பி ஆவதற்கு ஆதரவு

இன்னொரு ஆய்வின் முடிவும் பிபிபி-இன் நம்பிக்கையைக் கூட்டியுள்ளது. தேசிய பேராசிரியர் மன்றம் (எம்பிஎன்) மேற்கொண்ட ஆய்வில் இப்போதுள்ள மந்திரி புசார் அம்னோவின் அப்துல் கனி ஒத்மானைவிட சலாஹுடின் (வலம்) மந்திரி புசாராக வருவதையே ஜோகூரில் உள்ளவர்கள் விரும்புவது தெரிய வந்துள்ளது.

அந்த ஆய்வில் சலாஹுடினுக்கு முதலிடமும் பாஸ் மத்திய செயலவை உறுப்பினர் மஸ்லான் அலிமானுக்கு இரண்டாவது இடமும் கிடைத்தன. கனிக்கு மூன்றாவது இடம்தான்.

“மலாய்க்காரர் ஒருவரைப் பக்காத்தான் மந்திரி புசாராக நியமிக்கும் என்று அறிவித்திருப்பது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி, குறிப்பாக இளம் வாக்காளரிடையேயும் நடுத்தர வருமானம் பெறுவோரிடையேயும் பக்காத்தானுக்கு ஆதரவு கூடுவதற்கு உதவியுள்ளது”, என்று ஸுக்தி கூறினார்.

TAGS: