ஏஇஎஸ், வேக கேமிராக்கள் மீதான புகார்களை பிஏசி ஆராய வேண்டும்

பாஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், தானியக்க அமலாக்க முறை (ஏஇஎஸ்) வேக கேமிராக்கள் ஆகியவை தொடர்பில் தாம் சேகரித்துள்ள புகார்களை  நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழு(பிஏசி)விடம் ஒப்படைத்துள்ளார்.

பொக்கோக் சேனா எம்பி மாபுஸ் ஒமாஸ், ஏஇஎஸ் குத்தகை ஒப்பந்தத்தையும் குத்தகையாளர், வேக கேமிராக்களின் கொள்முதல் முதலியவற்றையும் பிஏசி ஆராய வேண்டும் என வலியுறுத்தினார்.

“இவ்விவகாரத்தை விசாரித்து பொதுநலன் கருதி தேவையான நடவடிக்கை எடுக்கும் பொறுப்பை பிஏசி தலைவர் அஸ்மி காலிட்டிடம்(படத்தில் வலம் இருப்பவர்) ஒப்படைக்கிறேன்”, என்று நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர் கூட்டமொன்றில் அவர் கூறினார்.

பாஸ் கட்சியின் அஞ்சல்வழி சம்மன்-எதிர்ப்பு இயக்கத்துக்குத் தலைமையேற்கும் மாபுஸ், உள்துறை அமைச்சு வேக கேமிராக்களை வாங்குவதற்குச் சந்தை விலையைவிட 10மடங்கு அதிகமாகச் செலவிட்டிருக்கிறது என்று அண்மையில் குற்றம் சாட்டியிருந்தார்.

செய்தியாளர் கூட்டத்தில் இருந்த அஸ்மி, இவ்விவகாரம் டிசம்பர் 5-இல் நடைபெறும் பிஏசி-இன் அடுத்த கூட்டத்துக்குக் கொண்டு செல்லப்படும் என்று மட்டும் கூறினார். வேறு எதுவும் கூற மறுத்தார்.

இதன் தொடர்பில்,  தலைமைக் கணக்காய்வாளரைச் சந்தித்து ஒரு மகஜர் கொடுக்கப்போவதாகவும் மாபுஸ் கூறினார்.

 

 

 

 

 

TAGS: