பிகேஆர்: “எங்கள் விளம்பரப் பலகை விசயத்தில் ஏன் இந்தப் பாகுபாடு?”

தஞ்சோங் மாலிம் நில உரிமையாளர் ஒருவர், நெடுஞ்சாலை பராமரிப்பு நிறுவனமான புரோபெல் பெர்ஹாட் தமக்குச் சொந்தமான நிலத்துக்குள் அத்துமீறி நுழைந்து அங்கிருந்த மாற்றரசுக் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிமின் உருவப்படத்தைக் கொண்ட சாலையோர விளம்பரப் பலகையை இடித்துத் தள்ளியதாகக் குறைகூறியுள்ளார்.

அதன் தொடர்பில் போலீசில் புகார் செய்துள்ள ஷாபுடின் அப்துல் கத்தப், நவம்பர் 23-இல் இரவு 11 மணி வாக்கில் புரோபெல் நிறுவனத்தின் பணியாளர்கள் அந்த விளம்பரப் பலகையை இடித்துத் தள்ளினர் என்றார். அந்த விளம்பரப் பலகை வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையில் வடக்கு செல்லும் போக்குவரத்தைப் பார்த்தபடி வைக்கப்பட்டிருந்தது.

நேற்று பெட்டாலிங் ஜெயாவில் செய்தியாளர் கூட்டமொன்றில் பேசிய தஞ்சோங் மாலிம் நாடாளுமன்றத் தொகுதிக்கான பிகேஆர் தேர்தல் இயக்குனரான ஷாபுடின் (இடம்), பிகேஆர் விளம்பரப் பலகையை அடுத்து வணிக விளம்பரப் பலகை ஒன்று வைக்கப்பட்டிருந்தது ஆனால், அதை அவர்கள் தொடவில்லை.

விளம்பரப் பலகையை இடித்துத்தள்ளப்போவதாக முன்கூட்டி அறிவிக்கக்கூட இல்லை என்றாரவர்.

அந்த விளம்பரப் பலகைக்கு அனுமதி வாங்கவில்லை என்பதை ஒப்புக்கொண்ட அவர், அது தனியார் நிலத்தில் இருப்பதால் அனுமதி தேவையில்லை என்றார்.

சிலிம் ரிவரில் உள்ள புரோபெல் நிறுவனம் சென்று விசாரித்தற்கு அதன் அதிகாரி ஒருவர் பேராக் அரசின் உத்தரவின்பேரில் அவ்வாறு செய்யப்பட்டதாகக் கூறினார் என ஷாபுடின் தெரிவித்தார்.

அதன்பின் பெஹ்ராங் போலீஸ் நிலையம் சென்றபோது பேராக் மாநிலச் செயலாளர், தேசிய பாதுகாப்பு மன்றம், தஞ்சோங் மாலிம் மாவட்ட மன்றம் ஆகியவை அவ்விளம்பரப் பலகை பற்றி புகார் செய்திருப்பதாக அவரிடம் தெரிவிக்கப்பட்டது.

முறைப்படி நடந்துகொள்ளவில்லை

ஷாபுடின் தாமும் போலீசில் ஒரு புகாரைப் பதிவு செய்தார். விளம்பரப் பலகையை இடித்துத் தள்ளியவர்கள் அதற்காக இழப்பீடு கொடுக்க வேண்டும் கோரினார்.

பக்காத்தான் ரக்யாட் நாடு முழுவதும் சாலையோர விளம்பரப் பலகைகளை நிறுத்திவைத்து தனது  கொள்கைகளைக் கவனப்படுத்தும் இயக்கமொன்றை மேற்கொண்டுள்ளது. அப்படிப்பட்ட விளம்பரப் பலகைகளில் ஒன்றுதான் அது.

செய்தியாளர் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்த பேராக் பிகேஆர் உதவித் தலைவர் மஹ்டி ஹசன், தனியார் நிலத்துக்குள் அத்துமீறி நுழைந்தது ஒரு முக்கிய விவகாரம் என்றார். அத்துடன் அதிகாரிகள் முறைப்படியும் நடந்துகொள்ளவில்லை.

ஷாபுடின் சட்ட நடவடிக்கை எடுப்பது பற்றி ஆலோசித்து வருவதாகவும் அவர் சொன்னார்.

நெடுஞ்சாலையைப் பார்த்தபடி எத்தனையோ விளம்பரப் பலகைகள் தனியார் நிலங்களில், ஊராட்சி மன்றங்களின் அனுமதியின்றி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன என்றாரவர்.

பிகேஆர் விளம்பரப் பிரிவுத் தலைவர் முகம்மட் நூர் மனுடி, ஷாபுடின் நிலத்தில் நிகழ்ந்த அத்துமீறலைக் கண்டித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அச்சம்பவத்துக்கு அம்னோவும் பிஎன்னும்தான் பொறுப்பு என்றவர் குற்றம் சாட்டினார்.

“இந்த அத்துமீறலுக்கு எதிராக போலீஸ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிகேஆர் வலியுறுத்துகிறது”, என்று முகம்மட் கூறினார்.

TAGS: