சிலாங்கூரில் கடந்த கால பாரிசான் நேசனல் வெற்றிகளில் சவாரி செய்யாமல் கடந்த நான்கு ஆண்டுகளில் தான் ஏற்படுத்தியுள்ள சாதனைகளை வெளியிடுமாறு பக்காத்தான் ராக்யாட் வழி நடத்தும் மாநில அரசாங்கத்துக்கு முன்னாள் மஇகா தலைவர் எஸ் சாமிவேலு சவால் விடுத்துள்ளார். [காணொளியை பார்வையிட இங்கே அழுத்தவும்]
“கடந்த நான்கு ஆண்டுகளாக சிலாங்கூரை பக்காத்தான் ஆட்சி புரிந்து வருகின்றது. ஆனால் ஒவ்வொருவர் மனதிலும் ஒடும் எண்ணம் இது தான், அது இது நாள் வரையில் என்ன செய்துள்ளது ?” என அவர் வினவினார்.
மாநில அரசாங்கத்திடம் பெருந்திட்டம் எதுவும் கிடையாது. மாநிலத் தலைநகரமான ஷா அலாம் 2008 ம் ஆண்டு அரசாங்க மாற்றம் நிகழ்ந்த போது எப்படி இருந்ததோ அப்படியே இன்னும் இருக்கிறது என இந்தியா, தெற்கு ஆசியாவுக்கான மலேசியச் சிறப்புத் தூதருமான (அடிப்படை வசதிகள்) சாமிவேலு கூறினார்.
“பேசுவதற்கு அவர்களிடம் சாதனைகள் ஏதுமில்லை. மலேசியர்கள் 2008ம் ஆண்டைக் காட்டிலும் நடைமுறைக்கு ஏற்ற சிந்தனைகளைக் கொண்டுள்ளனர்,” என்றார் அவர்.
மலேசியாவை மேலும் உன்னதமான நிலைக்குக் கொண்டு செல்ல நஜிப் கொண்டுள்ள உறுதியையும் துடிப்பையும் 2012ம் ஆண்டுக்கான அம்னோ பொதுப் பேரவையைத் தொடக்கி வைத்து பிரதமரும் அம்னோ தலைவருமான நஜிப் அப்துல் ரசாக் ஆற்றிய உரை பிரதிபலிக்கிறது என சாமிவேலு வருணித்தார்.
அரசியல் நிலைத்தன்மை, பொருளாதார முன்னேற்றம், சமூக நல்வாழ்வு ஆகியவற்றின் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை பிஎன் மட்டுமே உயர்த்த முடியும் என்றும் அவர் சொன்னார்.
“சுதந்திரத்துக்குப் பின்னர் நவீன மயம், அடிப்படை வசதிகள் மேம்பாடு, பெருவாரியான பொருளாதார வாய்ப்புக்கள் வழி மலேசியர்களுக்குச் சேவையாற்ற பிஎன் ஒரு போதும் தவறியதில்லை என்பதை ஒவ்வொரு பிரஜையும் புரிந்து கொள்ளவும் அவரது உரை உதவியுள்ளது.”
புதிய பொருளாதார வடிவம், பொருளாதார உருமாற்றத் திட்டம், அரசாங்க உருமாற்றத் திட்டம் ஆகியவற்றின் வழி மலேசியாவை உயர்ந்த வருமானத்தைக் கொண்ட நாடாக எப்படிச் சிறந்த முறையில் மாற்ற முடியும் என்பதும் நஜிப்புக்குத் தெரிந்துள்ளது என்றார் சாமிவேலு.
இன்னும் ஏழு ஆண்டுகளில் அல்லது அதற்கு முன்னரே மலேசியா 15,000 அமெரிக்க டாலர் (45,682 ரிங்கிட்) என்ற தனி நபர் வருமான விகிதத்தை அடையும் ஆற்றலைப் பெற்றுள்ளதாக நஜிப் தெரிவித்துள்ளார்.
2008 பொதுத் தேர்தலுக்கு முன்னதாக பக்காத்தான் ராக்யாட் வழங்கிய வாக்குறுதிகளில் பெரும்பகுதி இன்னும் அப்படியே இருப்பதாகவும் சாமிவேலு தெரிவித்தார்.
-பெர்னாமா