IPCMC மகஜர் பினாங்கு டிஏபி இளைஞர்களுக்கு பிரச்னையைக் கொண்டு வந்துள்ளது

போலீஸ் புகார்கள், நன்னடைத்தை மீது சுயேச்சை ஆணையத்தை அமைக்குமாறு கேட்டுக் கொள்ளும் மகஜர் ஒன்றை சமர்பித்ததற்காக டிஏபி சோஷலிச இளைஞர் பிரிவு மீது போலீஸ் அதிகாரி ஒருவர் கொடுத்த புகாரைத் தொடர்ந்து நேற்று அந்தப் பிரிவு  புகார் செய்துள்ளது.

அடையாளம் தெரிவிக்கப்படாத போலீஸ் அதிகாரி ஒருவர் அந்தப் புகாரைச் சமர்பித்த பின்னர் டிஏபி சோஷலிச இளைஞர் பிரிவு உறுப்பினர்கள் அழைக்கப்பட்டு அவர்கள் அமைதியாக ஒன்று கூடும் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது என அந்தப் பிரிவின் பினாங்கு மாநிலக் குழுத் தலைவர் இங் வெய் எய்க் கூறினார்.

புகார் செய்த அதிகாரியின் அடையாளமும் விவரமும் தெரிவிக்கப்படாத வரையில் போலீசாருடன் ஒத்துழைப்பதில்லை என இங்-கும் அவரது குழுவினரும் முடிவு செய்துள்ளனர்.

“இது நமது அடிப்படை உரிமைகளை முற்றாக மீறிய செயலாகும். மலேசியாவில் மகஜர் ஒன்றைச் சமர்பிப்பது கூடக் குற்றமா ? ” என இங் வினவினார். இது பெரும்பாலும் நாட்டு வரலாற்றில் முதலாவதாக இருக்கும்.

“அந்தச் சட்டத்தின் கீழ் சட்ட விரோதமாகக் கூடியது நிரூபிக்கப்பட்டால் ஒருவருக்கு 10,000 ரிங்கிட் வரை அபராதம் விதிக்கப்படலாம். நான் தேர்ந்தெடுக்கப்பட்ட பேராளர் என்பதால் அந்தப் புகார் செய்யப்பட்டதா ?” என கொம்தார் சட்ட மன்ற உறுப்பினருமான இங் வினவினார்.

மகஜரைச் சமர்பிப்பதற்கு எல்லா உரிமையும் உண்டு

தேர்ந்தெடுக்கப்பட்ட பேராளர் ஒருவர் அந்தச் சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட்டு 2,000 ரிங்கிட்டுக்கும் மேற்பட்ட அபராதம் விதிக்கப்பட்டால் அவர் தமது இடத்தை இழப்பதோடு இரண்டு தவணைக் காலத்துக்கு ( அல்லது 8 முதல் 10 ஆண்டுகளுக்கு) தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து தடுக்கப்படலாம்.

“அத்தகைய மகஜர்களை சமர்பிப்பதற்கு மலேசியர்களுக்கு எல்லா உரிமையும் உண்டு. போலீசார் அதனை ஏன் கடுமையாக எடுத்துக் கொள்ள வேண்டும்,” என முதலமைச்சர் லிம் குவான் எங்-கின் அரசியல் செயலாளருமான அவர் வினவினார்.

அந்த விவகாரம் மீது சுஹாக்காம் என்ற மலேசிய மனித உரிமைன் ஆணையத்திடம் புகார் செய்யப் போவதாகவும் இங் தெரிவித்தார்.

அவருடன் மாநில டிஏபி சோஷலிசப் பிரிவு உதவித் தலைவர் லிம் திங், அதன் மாநிலச் செயலாளர் சூன் லிப் சீ, துணைச் செயலாளர் சத்தீஸ் முனியாண்டி, பிரிவின் மாநில பிரச்சாரச் செயலாளர் ஸ்டீவன் சிம் மற்றும் பலரும் சென்றிருந்தனர்.

கடந்த நவம்பர் 19ம் தேதி பிராய் போலீஸ் நிலையத்தில் இடைக்கால பொறுப்பதிகாரி முகமட் இலியாஸிடம் 10 பேர் கொண்ட குழு அந்த மகஜரை வழங்கியது.

அண்மைய காலமாக தடுப்புக் காவல் மரணங்களும் போலீஸ்காரர்கள் சம்பந்தப்பட்ட பாலியல் வல்லுறவு சம்பவங்களும் நிகழ்ந்துள்ளதால் IPCMC என்ற போலீஸ் புகார்கள், நன்னடைத்தை மீது சுயேச்சை ஆணையத்தை அமைக்க வேண்டும் என அந்த மகஜர் கேட்டுக் கொண்டது.

 

TAGS: