பினாங்கு மாநில அரசாங்க நிதி உதவியுடன் மாதம் இரு முறை வெளியிடப்படும் புல்லட்டின் முத்தியாரா (Buletin Mutiara) என்ற சஞ்சிகையில் இந்திய சமூகத்துக்கு மாநில அரசாங்கம் செய்துள்ள நன்மைகள் பற்றி போதுமான அளவுக்குச் செய்திகள் இடம் பெறவில்லை என மாநில டிஏபி சோஷலிச இளைஞர் பிரிவு உதவித் தலைவர் சத்தீஸ் முனியாண்டி புகார் செய்திருக்கிறார்.
“அந்தச் சஞ்சிகையில் மஇகா தலைவர் ஒருவருக்குக் கூட இடம் அளிக்கப்பட்டுள்ளது. இது போன்ற இடத்தை நமக்கு உத்துசான் மலேசியா வழங்குமா ?” என அவர் வினவினார்.
“நான் இந்தக் கேள்வியை எழுப்பும் போது எல்லாம் நான் இனவாதி என என்னிடம் கூறப்பட்டது. என் கேள்விகளுக்குப் பதில் கிடைப்பதே இல்லை.”
தாமான் சுப்ரீம் கிளைப் பேராளரான சத்தீஸ் நேற்று மாநில அளவிலான டிஏபி மாநாட்டில் பேசினார்.
புல்லட்டின் முத்தியாரா-வின் தமிழ்ப் பதிப்பை நேரடியாகவே சுட்டிக் காட்டிய அவர், இந்திய சமூகத்துக்கு கட்சி அல்லது மாநில அரசாங்கம் செய்துள்ள வேலைகள் பற்றி எந்தச் செய்தியுமே இடம் பெறுவதில்லை எனக் குறிப்பிட்டார்.
நாடற்ற மலேசிய இந்தியர்கள் பிரச்னையில் அது தெளிவாகத் தெரிந்தது. அந்தப் பிரச்னை மீது கட்சி ஒரு குழுவை அமைத்துள்ளது. அது குறித்து புல்லட்டின் முத்தியாரா சஞ்சிகையில் எந்தச் செய்தியுமே இல்லை என சத்தீஸ் மேலும் கூறினார்.
ஆனால் முக்கியமில்லாத விஷயங்களுக்கு பல பக்கங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன,” என அவர் வருத்தத்துடன் குறிப்பிட்டார்.
அதற்குப் பின்னர் மாநில டிஏபி முன்மொழிந்த 9 தீர்மானங்கள் ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டன.
இந்தியர்களுக்கு முதலாவது துணை முதலமைச்சர் பதவி
மலேசிய இந்தியர் ஒருவரை துணை முதலமைச்சராக நியமித்த பினாங்கு பக்காத்தான் ராக்யாட் அரசாங்கத்தை பரமேஸ்வரன் என அறியப்படும் இன்னொரு தாமான் சுப்ரீம் பேராளர் பாராட்டினார்.
“டிஏபி இந்தியர்களுக்கு நன்றி பாராட்டவில்லை என யார் சொன்னது ? அந்த அங்கீகாரம் வேறு எந்த மாநிலத்திலும் கிடையாது,” என அவர் சொன்னார்.
அந்த டிஏபி மாநாட்டில் 307 பேராளர்களும் 118 பார்வையாளர்களும் கலந்து கொண்டனர்.
இந்தியர் பிரச்னைகளுக்கு புல்லட்டின் முத்தியாராவில் ஆதரவு அளிப்பது மீது மாநில டிஏபி குழுவில் விவாதிக்கப்பட்டதாக இரண்டாவது துணை முதலமைச்சரும் பினாங்கு இந்து அற வாரியத் தலைவருமான பி ராமசாமி கூறினார்.
புல்லட்டின் முத்தியாரா சஞ்சிகையின் வியூகத்தை ஆய்வு செய்வதற்கு சத்தீஸ் போன்ற உறுப்பினர்கள் தங்கள் புகார் மீது கூடுதல் தகவல்களைத் தர வேண்டும் என்றும் ராமசாமி கேட்டுக் கொண்டார்.
“நாடற்றவர்கள் பிரச்னை கூட்டரசு அரசாங்கத்தின் பொறுப்பு என்றாலும் மாநில நிலையில் நாங்கள் அந்த விவகாரம் குறித்து பெரிதும் கவலைப்படுகின்றோம். அது இந்தியர் பிரச்னை மட்டுமல்ல. சீனர்களும் மலாய்க்காரர்களும் கூட பாதிக்கப்பட்டுள்ளனர்,” என்றார் அவர்.