சாமி மேடை உடைக்கப்பட்டது மீது மௌனம் சாதிக்கும் மந்திரி புசார் குறை கூறப்பட்டார்

கடந்த மாதம் செப்பாங்கில் சாமி மேடை ஒன்று உடைக்கப்பட்ட விவகாரம் மீது மௌனம் சாதிக்கும் சிலாங்கூர் மந்திரி புசார் அப்துல் காலித் இப்ராஹிமை பூச்சோங் எம்பி கோபிந்த் சிங் டியோ சாடியுள்ளார்.

“நிலவரம் கடுமையாக இருந்தும் அரசியல் களத்தில் இரு தரப்பையும் சேர்ந்தவர்கள் கண்டித்திருந்தும் அப்துல் காலித் இது நாள் வரை மௌனமாக இருக்கிறார்.”

“இது போன்ற சூழ்நிலைகளில் மௌனத்தை நான் ஏற்றுக் கொள்ள முடியாது,” என அவர் விடுத்த அறிக்கை தெரிவித்தது.

இந்து குடியிருப்பாளர் ஒருவருடைய வீட்டு வளாகத்திற்குள் சாமி மேடையை நவம்பர் 20ம் தேதி செப்பாங் நகராட்சி மன்ற அமலாக்க அதிகாரிகள் உடைத்த பின்னர் அது சதித் திட்டம் என மாநில ஆட்சி மன்ற உறுப்பினர் சேவியர் ஜெயகுமார் கூறியிருந்தார்.

செப்பாங் நகராட்சி மன்றத்தைச் சேர்ந்த 30 அமலாக்க அதிகாரிகள் கடந்த நவம்பர் மாதம் 30ம் தேதி செப்பாங் பண்டார் பாரு சாலாக் திங்கியில் உள்ள உமா தேவியின் வீட்டு வளாகத்துக்குள் நுழைந்து அங்கிருந்த சிறிய சாமி மேடையை உடைத்தனர்.

2008ம் ஆண்டுக்கு முன்னதாக அமைக்கப்பட்ட எந்த ஒரு வழிபாட்டு இடங்களையும் உடைக்க வேண்டாம் என எல்லா ஊராட்சி மன்றங்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் சேவியர் தெரிவித்தார்.

‘மந்திரி புசார் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’

செப்பாங் நகராட்சி மன்ற அதிகாரிகள் மாநில அரசாங்கம் பிறப்பித்துள்ள ஆணைகளை எப்படி நேரடியாக மீறி செயல்பட முடியும் என்பதை அறிந்து கொள்ள விரும்புவதாகவும் கோபிந்த் கூறினார்.

“அவர்கள் ஏன் அதனைச் செய்தார்கள் ? அப்துல் காலித் தாம் தீவிரமாக இருப்பதைக் காட்டுவதோடு கீழ்ப்படியாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் வேண்டும்,” என்றார் அவர்.

இது போன்ற பல சாத்தியமான உடைப்புக்கள் குறித்துத் தமக்குத் தகவல் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறிய கோபிந்த் அப்துல் காலித் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

“மந்திரி புசார் இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அவர் வேகமாகச் செயல்பட வேண்டும். அவர் எல்லா ஊராட்சி மன்றத் தலைவர்களையும் நில அலுவலக அதிகாரிகளையும் சந்தித்து ஆணைகளைப் பின்பற்றுமாறு அவர்களுக்குக் கூற வேண்டும்.”

“இது மிகவும் கடுமையான விஷயமாகும். மந்திரி புசார் அதனைக் கடுமையாகக் கருத வேண்டும். அந்தப் பிர்சனையைச் சமாளிப்பதற்கு தமது அரசாங்கம் தீவிரமாகவும் உண்மையாகவும் முயலுகிறது என்பதைக் காட்டும் வகையில் அவர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.”

 

TAGS: