ஜனநாயக செயல் கட்சியின் மகளிர் பேரவை மாநாடு தலை நகர் ஃபெடரல் தங்கும் விடுதியில் நேற்று (09,12.2012) நடைபெற்றது. மகளிர் பிரிவு கடந்த 40 ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்டது என்றாலும் தேர்தல் முறையில் உச்சமன்ற உறுப்பினர்களை தேர்வு செய்தது இதுவே முதல் முறையாகும்.
300-க்கும் மேற்பட்ட மகளிர் பேராளர்கள் கலந்து கொண்ட இந்மாநாட்டில், 15 நபர் கொண்ட உச்சமன்ற குழுவை தேர்வு செய்வதற்கான தேர்தலில் 27 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
இதில் பினாங்கு மாநிலத்தைச் சேர்ந்த திருமதி மங்களேஸ்வரி, பேராக் மாநிலத்தைச் சேர்ந்த திருமதி பவானி, பஹாங் மாநிலத்தைச் சேர்ந்த திருமதி காமாட்சி துரைராஜூ மற்றும் சிலாங்கூர் மாநிலத்தைச் சேர்ந்த திருமதி பிரேமா ஆகிய நான்கு இந்திய பெண்களும் போட்டியிட்டனர்.
கடும் போட்டிக்கிடையே நடைபெற்ற உச்சமன்ற உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தலில் காமாட்சி துரைராஜூ 124 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். மங்களேஸ்வரி 61 வாக்குகளையும், பவானி 60 வாக்குகளையும், பிரேமா 30 வாக்குகளையும் பெற்றனர். 124 வாக்குகள் பெற்ற காமாட்சி ஜசெக தேசிய மகளிர் அணியின் துணைச் செயளாலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த வெற்றியை நம் நாட்டு அனைத்து இந்திய பெண்களுக்கும் சமர்பிப்பதாக கூறிய காமாட்சி, தனக்கு வாக்களித்த அனைத்துப் பேராளர்களுக்கும் தனது இதயம் கனிந்த நன்றியைத் தெரிவித்து கொண்டார்.
மலேசிய அரசியலில் இந்திய பெண்களும் இடம் பெற வேண்டும். அரசியல் மாற்றத்திற்கும் சிந்தனை மாற்றத்திற்கும் இந்திய பெண்கள் முன்னோடியாக இருக்க வேண்டும். அரசியல் நீரோட்டத்தில் நம் பெண்கள் இன்னும் பின் தங்கியே இருக்கிறார்கள் என்று சொன்னால் அது மிகையாகாது. இந்த நிலை மாற அயராது உழைப்பேன். வாய்ப்புகள் நம்மை தேடி வருவதில்லை. வாய்ப்புகளை நாம்தான் தேடி போக வேண்டும். பட்டமும் பதவியும் வெறுமனே அழகு பார்ப்பதற்கு இல்லை மாறாக கிடைத்திருக்கும் இந்த வாய்ப்பை மிகவும் சிறந்த முறையில் பயன்படுத்தி பெண்களின் முன்னேற்றத்திற்கு பாடுபட போவதாக காமாட்சி துரைராஜூ கூறினார்.
“12 ஆவது பொது தேர்தலில் முதல் முறையாகப் போட்டியிட்ட போது நிறைய சோதனைகளை சந்திதேன். 145 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்த போது நான் அடைந்த வேதனைக்கு அளவே இல்லை. இருந்தாலும் அதை தோல்வியாக என்னால் எடுத்து கொள்ள முடியவில்லை. என்னை நம்பி வாக்களித்த காராக் மக்களுக்கு உண்மையாக இருக்க வேண்டும். முன் பின் அறிமுகமில்லாத எனக்கு அவர்கள் அளித்த ஆதரவை என்னால் குறைத்து மதிப்பிட முடியவில்லை.”
“2008-இல் காராக் நகரில் ஒரு மக்கள் சேவை மையம் திறந்தேன். இன்று வரை சேவை மையத்திலேயே தங்கி என்னால் முடிந்த உதவிகளைச் செய்து வருகிறேன். விருப்பு வெறுப்பு இல்லாமல் காராக் மக்களோடு நானும் ஒருத்தியாக இருப்பது மன மகிழ்வை தருகிறது. அவர்கள் எனக்கு தரும் ஆதரவும் அன்பும் இன்னும் எத்தனை சோதனைகள் வந்தாலும் அவற்றை சாதணையாக்கும் மன வலிமையை தந்துள்ளது” என்று காமாட்சி கூறினார்
காமாட்சியின் வெற்றி நம் நாட்டு இந்தியர்கள் பெருமை படக்கூடியது. நம் பெண்களும் அரசியலில் பீடு நடை போட முடியும் என்பதை சாதித்து காட்டியுள்ளார் காமாட்சி. அவர் இன்னும் பல வெற்றிகளைப் பெற்று சிறந்து விளங்கிட நாமும் வாழ்த்துவோம் என்கிறார் ஜனநாயக செயல் கட்சி ஆதரவாளர் வளர்மதி கூறினார்.