கிளந்தான் ஆண்-பெண் பிரிவினை விஷயம் தொடர்பான துணைச் சட்டம் மீது பாஸ் கட்சி நிலையை அதன் தலைவர் அப்துல் ஹாடி அவாங் பகிரங்கமாக தெளிவுபடுத்த வேண்டும் என டிஏபி தலைவர் கர்பால் சிங் கேட்டுக் கொண்டுள்ளார்.
கோத்தா பாருவில் முஸ்லிம் அல்லாத பெண்கள் முஸ்லிம் அல்லாத ஆண்களுடைய முடியைத் திருத்துவதற்கும் முஸ்லிம் அல்லாத ஆண்கள் முஸ்லிம் அல்லாத பெண்களுடைய முடியைத் திருத்துவதற்கும்தடை விதிக்கும் ஆண்-பெண் பிரிவினை மீதான துணைச் சட்டத்தை மறு ஆய்வு செய்வது மீது கிளந்தான் ஆட்சி மன்றம் ஆழ்ந்த மௌனம் அனுசரிப்பது பொறுப்புள்ள அரசாங்கத்துக்கு நல்லதல்ல என புக்கிட் குளுகோர் எம்பி-யுமான கர்பால் சொன்னார்.
“மௌனமாக இருப்பது பிரச்னையைத் தீர்ப்பதற்கு வழி அல்ல, அது நிலமையை மேலும் மோசமாக்கும் என்பதை பாஸ் தலைவர்கள் உணர வேண்டும். அந்தத் துணைச் சட்டம் எந்தச் சர்ச்சையும் இல்லாமல் நீக்கப்பட வேண்டும்,” என அவர் விடுத்த அறிக்கை கூறியது.
ஆண்-பெண் பிரிவினை மீதான துணைச் சட்டத்தை கோத்தா பாரு நகராட்சி மன்றம் அமலாக்கியது நியாயமானது என ஊராட்சி மன்றங்கள், பண்பாடு, சுற்றுப்பயண விவகாரங்களுக்குப் பொறுப்பான ஆட்சி மன்ற உறுப்பினர் தாக்கியுடின் ஹசான் நவம்பர் 24ம் தேதி தெரிவித்ததாக கார்பால் மேலும் கூறினார்.
“அவரைப் பொறுத்த மட்டில் அது ஒரு பிரச்னையே அல்ல. ‘இஸ்லாத்துடன் உயருவோம்’ என்ற மாநில அரசாங்க சுலோகத்துடன் 1991ம் ஆண்டு அந்தத் துணைச் சட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. அது முஸ்லிம்களுக்கும் முஸ்லிம் அல்லாதவருக்கும் பொருந்தும்.1999ம் ஆண்டு கோத்தா பாரு நகராட்சி மன்றம் மேலும் கடுமையான நிபந்தனைகளை விதித்தது,” என கர்பால் தெரிவித்தார்.
என்றாலும் தாக்கியுடின் தெரிவித்த நியாயம் முஸ்லிம் அல்லாதவர்கள் மீது இஸ்லாமியச் சட்டத்தை அமலாக்குவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றனவா என்ற அச்சத்தை முஸ்லிம் அல்லாதவர்களிடையே தூண்டி விட்டுள்ளதாக கர்பால் சொன்னார். அந்த முயற்சிகள் இறுதியில் முஸ்லிம் அல்லாதவர்கள் மீது ஹுடுட் சட்டத்தை அறிமுகம் செய்வதற்கு வழி வகுத்து விடும் என்றும் முஸ்லிம் அல்லாதவர்கள் அஞ்சுகின்றனர் என்றார் அவர்.
அந்தத் துணைச் சட்டத்துக்கு வெளிப்படையாக தாக்கியுடின் நியாயம் கற்பித்தது அந்தத் துணைச் சட்டத்தை மறு ஆய்வு செய்வது மீது கிளந்தான் மாநில ஆட்சி மன்றம் மௌனமாக இருப்பதற்கு காரணம் என்பது மட்டும் நிச்சயம் என கர்பால் குறிப்பிட்டார்.
வரும் தேர்தலில் புத்ராஜெயாவைக் கைப்பற்ற எதிர்த்தரப்புக் கூட்டணி மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு இடையூறு செய்ய டிஏபி விரும்பவில்லை என அவர் சொன்னார்.
“என்றாலும் அரசியல் விரைவுக்காக கொள்கைகளை தியாகம் செய்யவும் கூடாது, அவ்வாறு அர்த்தம் கொள்ளவும் கூடாது. முஸ்லிம் அல்லாதவர்கள் மீது நேரடியாகவோ மறைமுகமாகவோ இஸ்லாமியச் சட்டங்களை விரிவு செய்யும் எந்த முயற்சிகளையும் எதிர்ப்பது என டிஏபி உறுதி பூண்டுள்ளது,” என்றார் கர்பால்.
தேர்தல்கள் நெருங்கி வருவதால் பாஸ் அந்தப் பிரசனைக்கு விரைவாக தீர்வு காண வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
பெர்னாமா