தன்னை ஒரு பல்லினக் கட்சி என்று கூறிக்கொள்ளும் டிஏபி, அதை நிரூபிக்க, வார இறுதியில் நடக்கும் கட்சித் தேர்தலில் மத்திய செயலவைக்குப் போட்டியிடும் எட்டு மலாய்க்காரர்களில் ஐவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டிருகிறது.
“அது அலங்காரத்துக்காக சொல்லப்படுவதல்ல என்று நினைக்கிறோம்.அதை நிரூபியுங்கள்”, என்று பினாங்கு மலாய் காங்கிரஸ் தலைவர் ரஹ்மாட் இஷாக் கூறினார்.
அந்த என்ஜிஓ பினாங்கு மாநிலத்தில் மலாய்க்காரர்களைப் பிரதிநிதிக்கிறது என்று கூறிய இஷாக்(இடம்), தம் அமைப்பைச் சேர்ந்தவர்கள் டிஏபி-இன் 16-வது தேசிய காங்கிரஸை அணுக்கமாகக் கவனித்து வருவர் என்றார்.
“30-பேரைக் கொண்ட மத்திய செயலவைக்குப் போட்டியிடும் எண்மரில் ஐவர் தேர்ந்தெடுக்கப்பட்டால் அது (மலாய்) சமூகத்தில் டிஏபி வலுவாகக் காலூன்ற வழி ஏற்படுத்திக்கொடுக்கும் ஒரு புதிய தொடக்கமாக அமையும்.
“அதன் பின்னர், அந்த மலாய்த் தலைவர்களின் நிலையை உறுதிப்படுத்த அவர்களை 13வது பொதுத் தேர்தலில் வேட்பாளர்களாகவும் களமிறக்க வேண்டும்”, என்று செய்தியாளர் கூட்டமொன்றில் ரஹ்மாட் வலியுறுத்தினார்.
20 மத்திய செயலவை இடங்களுக்கு 65 பேர் போட்டி
இன்றுவரை, 20 மத்திய செயலவை இடங்களுக்கு 65 வேட்பாளர்கள் போட்டியிட விண்ணப்பம் செய்துள்ளனர்.
அவர்களில் எண்மர் மலாய்க்காரர்கள். அஹ்மட் டோன், அரிபின் எஸ்.எம்.ஒமார், ஹருன் அஹ்மட், சுலைமான் சைட் இப்ராகிம், தெங்கு சுல்புரி ஷா ராஜா புஜி, ஜைரில் கீர் ஜொஹாரி, சுல்கிப்ளி முகம்மட் நூர், ரேஸ்லி அப்துல் கனி ஆகியோரே எந்த எண்மருவாவர்.
சுமார் 2,500 பேராளர்கள் அந்த 20பேரையும் ஆண்டுக்கூட்டத்தில் தேர்ந்தெடுப்பார்கள். பின்னர் அவர்களே, மேலும் பதின்ரைத் தெரிந்தெடுப்பர்.
இதனிடையே, ரஹ்மாட் இரண்டு மலாய்த் தலைவர்களின்-அஹ்மட், சுல்கிப்ளி ஆகியோரின் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் அவர்கள் தொடர்ந்து சேவையாற்ற இடமளிக்க வேண்டும் என்று டிஏபியைக் கேட்டுக்கொண்டார். அவர்கள் 25 ஆண்டுகளாகக் அக்கட்சிக்கு நிறையவே சேவை செய்தவர்கள் என்றாரவர்.
பொதுத் தேர்தலில் மலாய் வேட்பாளர்கள் களமிறக்கப்பட வேண்டும் என்பதை பிஎம்சி நெடுகிலும் வலியுறுத்தி வந்துள்ளது. அவர்களுக்காக பிகேஆர் 2008-இல் அது தோல்வியுற்ற இடங்களை விட்டுக்கொடுக்க வேண்டும் என்று கூட அது வலியுறுத்தியுள்ளது.
கட்சித் தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் ஆண்டுக்கூட்டத்தில் உரையாற்றும்போது எதிர்வரும் பொதுத் தேர்தலில் எத்தனை மலாய் வேட்பாளர் நிறுத்தப்படுவார்கள் என்பதை அறிவிக்க வேண்டும் என்றும் ரஹ்மாட் குறிப்பிட்டார்.
“வேட்பாளர்களின் பெயர்களைச் சொல்ல வேண்டாம், தொகுதிகளையும் சொல்ல வேண்டாம். டிஏபி, மலாய்க்காரர்களுக்கு எதிரி என்றும் ஒரு மலாய்க்காரரைக்கூட அது வேட்பாளாக நிறுத்தாது என்றும் நினைப்போருக்காக அவ்வாறு அறிவிக்க வேண்டும்”, என்றவர் கூறினார்.