பக்காத்தான்: குற்றச்சாட்டுகள் தொடர்பில் நஜிப் தொடர்ந்து மெளனமாக இருக்கக்கூடாது

najibபிரதமர் நஜிப் அப்துல் ரசாக், வணிகரான தீபக் ஜெய்கிஷன் சுமத்தும் குற்றச்சாட்டுகளுக்குத் தக்க பதில் அளித்து தம் பெயருக்கு ஏற்பட்டுள்ள களங்கத்தைப் போக்கிக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

najib 1பிரதமர், மலிவான அரசியல் விளம்பரம் தேடும் முயற்சிகளைக் கைவிட்டு பொதுமக்களின் கேள்விகளுக்குப் பொறுப்புடன் பதில் சொல்ல வேண்டும் என்று பிகேஆர் இளைஞர் பகுதி தகவல் தலைவர் லீ காய் லூன் (வலம்) இன்று ஓர் அறிக்கையில் கூறியிருந்தார்.

“நஜிப் பிரதமர் ஆகி குறுகிய காலம் ஆனாலும் மற்ற பிரதமர்களுடன் ஒப்பிடும்போது இவரே அதிக ஊழல்களில் சிக்கிக்கொண்டவர் என பிகேஆர் இளைஞர்கள் கருதுகிறார்கள்.

“நஜிப்புக்கு எதிராக பல குற்றச்சாட்டுகள் கூறப்பட்டிருந்தாலும் ஒன்றுக்குக்கூட விளக்கமோ பதிலோ அளிக்கப்பட்டதில்லை”, என்று லீ கூறினார்.

அதற்குப் பதிலாக பிரதமர் தம் அதிகாரத்தைப் பயன்படுத்தி தகவல் அளிப்பவர்களையும் என்ஜிஓ-களையும் ஒடுக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார் என்றவர் கூறினார்.

ரோஸ்மா-அல்டான்துயா தொடர்பு

தீபக் சுமத்திய பல குற்றச்சாட்டுகளில் நஜிப்பின் துணைவியார் ரோஸ்மா மன்சூருக்கும்  மங்கோலிய பெண் அல்டான்துயா ஷரீபுவின் கொலைக்கும் தொடர்புண்டு என்பதும் ஒன்று. அதற்குப் பதில் தேவை என்று பிகேஆர் இளைஞர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

அல்டான்துயா கொலை விவகாரத்தில் நஜிப்பைத் தொடர்புப்படுத்தி முதலில் செய்த சத்திய பிரமாணத்தை மறுத்து இரண்டாவதாக ஒரு சத்திய பிரமாணம் செய்வதற்கு தனி துப்பறிவாளர் பி.பாலசுப்ரமணியத்துக்கு நஜிப்பின் தம்பி முகமட் நஜிம் அப்துல் ரசாக் பணம் கொடுத்தார் என்றும் தீபக் கூறியுள்ளார்.

najib gobinஇதனிடையே, பூச்சோங் டிஏபி எம்பி கோபிந்த் சிங்கும்(இடம்) ஓர் அறிக்கையில், அல்டான்துயா விவகாரம் மீது நஜிப்பும் சட்டத்துறை தலைவரும் (ஏஜி) மெளனமாக இருக்கக்கூடாது என்றும் அதில் மேல்விசாரணை தேவை என்றும் கேட்டுக்கொண்டிக்கிறார்.

“சத்திய பிரமாணம் செய்யப்பட்டதன் தொடர்பில் தீபக் ஜெய்கிஷன் அண்மையில்  தெரிவித்தவை அணைக்க முடியாதபடி எரியும்  நெருப்பில் மேலும் எண்ணெய் ஊற்றியதுபோல் ஆகிவிட்டது.

“அல்டான்துயா வழக்கில் ‘நீதி நிலைநிறுத்தப்படவில்லை’ என்று தீபக் கூறியிருப்பதற்கு சட்டத்துறை தலைவர் அப்துல் கனி பட்டேய்ல் பதில் கூறியாக வேண்டும்”, என்று கோபிந்த் அவரது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

“இதற்குமுன்பு சந்தேகத்துக்கிடமான மரணங்கள் சம்பந்தப்பட்ட விவகாரங்களில், இறந்தவர்களின் குடும்பங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதால் ‘உண்மையைக் கண்டறியும் முயற்சியில்’ எதையும் விட்டு வைக்கக்கூடாது என்று பிரதமர் கூறியுள்ளார்.

“அப்படியிருக்க அல்டான்துயா விவகாரத்தில் மட்டும் ஏன் வேறு மாதிரியாக நடந்துகொள்ள வேண்டும்?

“கொலை செய்யப்பட்ட விதத்தை வைத்து உண்மையில் நடந்தது என்ன என்பதைத் தெரிந்துகொள்ள அரசாங்கத் தலைவர் என்ற முறையில் பிரதமருக்கு ஆர்வமில்லையா?

“அவ்விவகாரம் மீது ஒரு முழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று பிரதமரைக் கேட்டுக்கொள்கிறேன். நமக்கு உண்மை தெரிய வேண்டும். உண்மை நிலைநிறுத்தப்பட வேண்டும்”

 

TAGS: