பினாங்கில் இந்த வார இறுதியில் நிகழும் 16வது மூவாண்டு டிஏபி பேரவையில் செய்திகளைச் சேகரிக்க எல்லா ஊடகங்களும் -நாளேடுகள் மாற்று ஊடகங்கள்- அனுமதிக்கப்படும்.
கட்சியின் புதிய மத்திய நிர்வாகக் குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் உட்பட அனைத்து நிகழ்வுகள் பற்றி எந்த ஊடகமும் செய்திகளை சேகரிக்கலாம் என அதன் தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் கூறினார்.
“நாங்கள் எல்லா ஊடகங்களையும் அனுமதிப்போம். ஆனால் கேள்விகளுக்குப் பதில் அளிக்கும் போது நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்,” என அவர் நிருபர்களிடம் தெரிவித்தார்.
“ஊடகங்களுக்கு எந்த வரம்போ, கட்டுப்பாடோ இல்லை. ஆனால் நாங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதை புரிந்து கொள்ளுங்கள்,” என வலியுறுத்திய அவர் அவதூறு சொல்லும் நோக்கத்துடன் யாராவது அங்கு இருக்கக் கூடும் என்பதால் எச்சரிக்கை முக்கியமாகும் என்றார்.
AntaraPos என அழைக்கப்படும் மலாய் மொழி ஊடக அமைப்பு அந்த இரண்டு நாள் நிகழ்வில் செய்திகளைச் சேகரிக்க அனுமதிக்கப்படவில்லை எனக் கூறியிருப்பது பற்றி வினவப்பட்ட போது பினாங்கு முதலமைச்சர் அவ்வாறு பதில் அளித்தார்.
என்றாலும் டிஏபி சோஷலிச இளைஞர் பிரிவுத் தலைவர் அந்தோனி லோக்-உடன் ஆலோசனை நடத்திய பின்னர் AntaraPos-க்கு அனுமதி கிடைத்து விட்டதாகத் தெரிய வருகின்றது.
டிஏபி-க்கு இது முக்கியமான ஜனநாயக நடைமுறை என்பதால் துல்லிதமான செய்திகளை வெளியிடுமாறு லிம் ஊடகங்களைக் கேட்டுக் கொண்டார்.
“எடுத்துக்காட்டுக்கு மகளிர் தலைவிக்கான தேர்தலில் சிலாங்கூர் டிஏபி தலைவர் தெரெசா கோக், புக்கிட் மெர்டாஜாம் எம்பி சொங் எங்-கிடம் தோல்வி கண்டுள்ளதாக நியூ ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ் அண்மையில் முதல் பக்கத்தில் செய்தி வெளியிட்டிருந்தது.”
“மகளிர் தலைவி பதவிக்கு தெரெசா போட்டியிடாத வேளையில் அது எப்படி நிகழ்ந்திருக்க முடியும் ?”
“நிச்சயம் நான் சொல்வது தொலைக்காட்சியில் வெளியாகப் போவதில்லை. உங்கள் செய்திகளில் நீங்கள் எங்களைக் குறை கூறலாம். ஆனால் உண்மைகள் அடிப்படையில் அதனைச் செய்யுங்கள்,” என அவர் மேலும் சொன்னார்.
மத்திய நிர்வாகக் குழுவில் உள்ள 20 இடங்களுக்கு 60 பேர் போட்டியிடுகின்றனர்.
டிஏபி மொத்த உறுப்பினர் எண்ணிக்கை 150,000 ஆகும். 730 கிளைகள் உள்ளன. பேரவைக்கு 2,576 பேராளர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். கட்சியைச் சேர்ந்த 700 பார்வையாளர்களும் கலந்து கொள்கின்றனர்.
பக்காத்தான் ராக்யாட் தலைவர்கள், தூதரகப் பேராளர்கள் உட்பட 50 சிறப்பு விருந்தினர்களும் நாளை காலை 9 மணிக்குத் தொடங்கும் பேரவையின் தொடக்க விழாவில் கலந்து கொள்கின்றனர்.
பேராளர்கள் நண்பகல் 12 மணிக்கு வாக்களிப்பார்கள். புதிய மத்திய நிர்வாகக் குழுவுக்குத் தேர்வு பெற்றவர்களுடைய பெயர்கள் பெரும்பாலும் பிற்பகல் 2.00 மணி வாக்கில் அறிவிக்கப்படும்.
2008ம் ஆண்டு பொதுத் தேர்தலைத் தொடர்ந்து நான்கு மாநிலங்களை ஆட்சி செய்துள்ள பக்காத்தான் சாதனைகள் மீது பேராளர்கள் கவனம் செலுத்துவர் என்றும் லிம் நம்பிக்கை தெரிவித்தார்.
“நாம் முக்காலியைப் போன்றவர்கள். ஒரு கால் இல்லாவிட்டாலும் நாம் விழுந்து விடுவோம். கூட்டணியின் முக்கியமான தூணாக பாஸ், பிகேஆர் ஆகியவற்றுடன் டிஏபி-யும் திகழ்கின்றது. கூட்டரசு அதிகாரத்தை நாம் வெல்லும் போது டிஏபி-யும் பக்காத்தானும் என்ன செய்ய முடியும் என்பது மீது கவனம் செலுத்துவது முக்கியமாகும்.”
இந்த வார இறுதியில் நடப்பது மக்களுடைய தலைவிதியையும் நாட்டின் எதிர்காலத்தையும் ஒரு வழியில் நிர்ணயிக்கும் என்றும் லிம் சொன்னார்.
இவ்வாண்டுக்கான டிஏபி பேரவைக்குக் கருபொருள் ” மாற்றத்துக்கான அதிகாரம் உங்கள் கைகளில் உள்ளது” என்ற தகவலையும் அவர் அறிவித்தார்.
“இது டிஏபி உறுப்பினர்களுக்கான ஜனநாயகம் பற்றியது மட்டுமல்ல. மக்களுடைய வாழ்க்கையை நாங்கள் எப்படி செம்மைப்படுத்த விரும்புகிறோம் என்பதையும் காட்டுகின்றது,” என்றார் லிம்.