பினாங்கில் நாளை தொடங்கும் டிஏபி தேசியப் பேரவையில் மத்திய நிர்வாகக் குழு உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கு நடத்தப்படும் வாக்களிப்பில் கலந்து கொள்ளும் பேராளர்கள் அழியாத மை பற்றி நேரடி அனுபவத்தைப் பெறுவார்கள்.
அடுத்த ஆண்டு ஜுன் மாதத்திற்குள் நடத்தப்பட வேண்டிய 13வது பொதுத் தேர்தலுக்கு கட்சி உறுப்பினர்களை தயார் செய்வதற்கான ஒர் ‘ஏற்பாடாக’ அழியாத மை நுட்பம் பயன்படுத்தப்படுகின்றது என பினாங்கு டிஏபி தலைவர் சாவ் கோன் இயாவ் கூறினார்.
“அழியாத மையுடன் வாக்களிக்க முடியும் என்பதை நாங்கள் காட்ட விரும்புகிறோம்,” என்று மாநில ஆட்சி மன்ற உறுப்பினருமான சாவ் இன்று நிருபர்களிடம் தெரிவித்தார்.
அடுத்த பொதுத் தேர்தலில் அழியாத மை பயன்படுத்தப்படும் என பிப்ரவரி 13ம் தேதி அரசாங்கத் தகவல் ஏட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் கீழ் வாக்குச் சாவடிகளில் இடது ஆள் காட்டி விரலில் மை போடப்படும்.
சாவ்-உடன் முதலமைச்சர் லிம் குவான் எங், டிஏபி அமைப்புச் செயலாளர் தெரெசா கோக், பினாங்கு மாநில டிஏபி செயலாளரும் கொம்தார் சட்டமன்ற உறுப்பினருமான இங் வெய் எய்க், பெட்டாலிங் ஜெயா உத்தாரா எம்பி டோனி புவா, புக்கிட் பெண்டேரா எம்பி லியூ சின் தொங் ஆகியோரும் இருந்தார்கள்.
இரண்டு நாள் டிஏபி பேரவை நிகழும் பினாங்கு அனைத்துலக விளையாட்டு அரங்கத்தை டிஏபி தலைவர்கள் நிருபர்களுக்குச் சுற்றிக் காண்பித்தனர்.
அந்த அரங்கில் மூவாயிரம் பேர் அமர முடியும்.