கடந்த சனிக்கிழமையன்று நிகழ்ந்த மசீச இளைஞர் ஆண்டுப் பொதுக் கூட்டத்தில் மிகவும் கவர்ச்சியாகத் தோற்றமளித்த ஏழு இளம் பெண்கள் காணப்பட்டனர்.
அவர்கள் பல பேராளர்களுடைய கவனத்தை ஈர்த்தனர் என்றால் மிகையில்லை.
அடுத்த நாள் பல நாளேடுகளில் அந்த எழுவருடைய படங்களும் வெளியிடப்பட்டிருந்தன.
ஆண்டுப் பொதுக் கூட்டத் தலைவர் அறிவிப்புச் செய்ததும் பெண்கள் குழு ஒன்றை அந்த எழுவரும் முன்னின்று வழி நடத்திச் சென்றார்கள்.
மசீச இளைஞர் பிரிவு அடுத்த ஆண்டு தனது கதவுகளை பெண் உறுப்பினர்களுக்கும் திறந்து விடுவதை காட்டும் வகையில் அந்த நிகழ்வு நடத்தப்பட்டதாகக் கூறப்பட்டது.
ஊடகங்களுடைய படப்பிடிப்பாளர்கள் அந்த எழுவரையும் படம் பிடித்த போது அந்த எழுவரும் மிக அமைதியாகக் காணப்பட்டனர். ஆனால் அவர்கள் பேட்டி காணப்படாததும் அந்த நிகழ்வு ஏற்கனவே தயாரிக்கப்பட்ட காட்சிகளுக்கு ஏற்ப அரங்கேறியதும் பல கேள்விகளை எழுப்பி விட்டது. அவர்கள் “கவர்ச்சி பதுமைகளாக” பயன்படுத்தப்பட்டனரா என்ற கேள்வியும் அதில் ஒன்றாகும்.
அந்த ஏழுவரின் படங்கள் இணையத்தில் குறிப்பாக பேஸ் புக் என்ற சமூக இணையத் தளத்தில் பரவலாக சேர்க்கப்பட்டன.
விரிவான விளம்பர வியூகத்தின் ஒரு பகுதியாக அந்தப் பெண்கள் கொண்டு வரப்பட்டனரா என்ற கேள்வியையும் சிலர் எழுப்பினர்.
பெலியாவானிஸ் (Beliawanis): அவர்கள் உண்மையான உறுப்பினர்கள்
அந்த எழுவரும் உண்மையான உறுப்பினர்கள் அல்ல என்று கூறப்படுவதை மசீச பெலியாவானிஸ் தலைவி தீ ஹுய் லிங் தொடர்பு கொள்ளப்பட்ட போது வன்மையாக மறுத்தார்.
“அது உண்மையல்ல. அவர்கள் அனைவரும் உறுப்பினர்கள். அவர்களில் சிலர் சுபாங் தொகுதியைச் சேர்ந்தவர்கள் என நான் நினைக்கிறேன். அத்தகைய குற்றச்சாட்டுக்களை சிலர் எப்படிக் கூறமுடியும் என்பது எனக்குத் தெரியவில்லை”, என அவர் வருத்தமுடன் கூறினார்.
அந்தப் பெண்கள் மிக அழகாக இருந்ததால் அவர்களுடைய உறுப்பியம் குறித்து இணைய மக்கள் கேள்வி எழுப்பியிருப்பது “மிகவும் வெறுப்பாக” இருக்கிறது”, என்றும் தீ சொன்னார்.
அடுத்த ஆண்டு மசீச இளைஞர் பிரிவு பெண் உறுப்பினர்களையும் அதிகாரப்பூர்வமாக சேர்த்துக் கொள்ளவிருப்பதை ஒட்டி இளைஞர் பிரிவு விடுத்த அழைப்புக்கு இணங்க பெலியாவானிஸ் உறுப்பினர்கள் அங்கு வந்ததாக அவர் தெரிவித்தார்.
“ஆண்டுப் பொதுக் கூட்டத்தில் மத்தியப் பேராளர்கள் மட்டுமே கலந்து கொள்ள முடியும். பல தொகுதிகளைச் சேர்ந்த பெலியாவானிஸ் உறுப்பினர்கள் அந்த ஆண்டுப் பொதுக் கூட்டத்துக்கு பார்வையாளர்களாக அழைக்கப்பட்டனர்.
நாட்டின் முக்கியமான பத்திரிக்கைகளில் வெளியிடப்பட்ட படங்களில் உள்ள பெலியாவானிஸ் உறுப்பினர்கள் “மிகவும் புதிய” உறுப்பினர்கள் ஆவர். பெண் உறுப்பினர்களை இணைத்துக் கொள்ளும்
கொள்கை அதிகாரப்பூர்வமாக நடப்புக்கு வரும் முன்னரே மசீச இளைஞர் பிரிவு பெண் உறுப்பினர்களை சேர்த்துக் கொள்ளலாம் என்றும் தீ குறிப்பிட்டார்.
பெலியாவானிஸ், மசீச மகளிர் அமைப்பின் ஒரு பகுதியாகும். அதில் 18 வயதுக்கும் 35 வயதுக்கும் இடைப்பட்ட பெண்கள் உறுப்பினர்களாக இயலும்.