‘தீபக் வெளியிட்ட தகவல்கள் மீது ஏன் ஆழ்ந்த மௌனம் ?’

deepak“இது பிஎன் அரசாங்கத்தையே கேலிக் கூத்தாக்குகிறது. மற்ற நாடுகளில் இது போன்ற தகவல்கள் வெளியானால் விரிவான விசாரணைகள் தொடங்கப்பட்டிருக்கும்”

பாலாவுக்கான ரொக்கத்தை பிரதமரது சகோதரர் கொடுத்தார் என தீபக் கூறிக் கொள்கிறார்

மஹாஷித்லா: அந்த மங்கோலிய மாது அல்தான்துயா ஷாரிபு ஸ்கார்ப்பின் ஊழலில் தமக்குச் சேர வேண்டிய நியாயமான தரகுப் பணத்தைத் தான் கேட்டார். ஆனால் சி4 ரக வெடி மருந்துகளால் தகர்க்கப்பட்டார்.

இரண்டாவது சத்தியப் பிரமாணத்துக்காக தனிப்பட்ட துப்பறிவாளர் பி பாலசுப்ரமணியத்துக்கு 5 மில்லியன் ரிங்கிட் வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால் 750,000 ரிங்கிட் மட்டுமே கொடுக்கப்பட்டது. இது வாக்குறுதி நிறைவேற்றப்படாத துரோகமாகும்.

தீபக் ஜெய்கிஷன் ஒரு வணிகர், பிரதமரது மனைவி ரோஸ்மா மான்சோருக்கு அணுக்கமான நண்பர். பாலாவின் இரண்டாவது சத்தியப் பிரமாணத்துக்கு உதவுமாறு அவர் கேட்டுக் கொள்ளப்பட்டார். இப்போது வர்த்தக உறவுகள் கசப்பாகி விட்டன. தாம் அச்சுறுத்தப்பட்டதாகவும் மிரட்டப்பட்டதாகவும் சிறுமைப்படுத்தப்பட்டதாகவும் மூலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும் இப்போது தீபக் எண்ணுகிறார்.

நஜிப் அவர்களே, அந்த மூவரும் உங்களுடனும் உங்கள் குடும்பத்துடனும் தொடர்பு உடையவர்கள். நீங்கள் எங்கள் பிரதமர். மிகவும் கடுமையான அந்தக் குற்றச்சாட்டுக்களை நீங்கள் மறுக்காமல் இருப்பது எங்களுக்கு மிகவும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. அச்சத்தையும் மூட்டியுள்ளது.

தமது எதிரிகளைக் கொடூரமாக நடத்துவதில் பேர் போன முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் உங்களையும் ரோஸ்மாவை வலுவாகவும் இப்போது ஆதரிக்கிறார். நாங்கள் உண்மையில் மிக மிக அச்சமடைந்துள்ளோம்.

அடையாளம் இல்லாதவன்_3ec6: நஜிப் தமது முகத்தை எப்படி பொது மக்களிடம் காட்டப் போகிறார் ? அடக்கடவுளே ! அவர் இப்போது அனுபவிக்கின்ற மன உளைச்சலை என்னால் கற்பனை செய்யக் கூட முடியவில்லை.

நஜிப்பும் அவரது குடும்பமும் இது வரை மறுக்காத அந்தக் குற்றச்சாட்டுக்களுடன் அவர் எப்படி இந்த நாட்டை நிர்வகிக்கப் போகிறார் ?

சிங்க அரசன்: இத்தகைய தகவல்கள் வெளியாகியுள்ள வேளையில் அரசாங்கம் எவ்வாறு மௌனமாக இருக்க முடியும் ? இது பிஎன் அரசாங்கத்தையே கேலிக் கூத்தாக்குகிறது. மற்ற நாடுகளில் இது போன்ற தகவல்கள் வெளியானால் விரிவான விசாரணைகள் தொடங்கப்பட்டிருக்கும்.

நாட்டின் தோற்றத்துக்கு களங்கத்தை ஏற்படுத்தியுள்ள அந்தக் குற்றச்சாட்டுக்கள் மீது நாம் மௌனமாக இருக்கக் கூடாது. பிஎன் அரசாங்கம் இந்த நாட்டுக்கு இவ்வளவு அவமானத்தைக் கொண்டு வந்துள்ளது மிகவும் வருத்தமாக இருக்கிறது. அவற்றின் மீது நடவடிக்கை எடுக்காமல் அது அமைதியாகவும் இருக்க முடியாது.

உண்மையோ பொய்யோ அரச விசாரணை ஆணையம் அமைக்கப்பட வேண்டும்.

உண்மை: தீபக்-கிற்கு பின்புலம் யார் ? ரோஸ்மாவுக்கு எதிராக வலுவாக நிற்கக் கூடிய வலிமையைக் கொண்ட ஒருவர் ஆதரவு இல்லாமல் தீபக்-கிற்கு இவ்வளவு துணிச்சல் வந்திருக்காது. அத்தகைய வலிமை பக்காத்தான் ராக்யாட்டுக்கோ அன்வார் இப்ராஹிமுக்கோ இல்லை.

ஆகவே ‘கட்சிக்குள்’ உள்ள ஒருவரே அவராக இருக்க வேண்டும். முன்னாள் போலீஸ் படைத் தலைவர் மூசா ஹசானின் ஆவேசத்தையும் நீங்கள் கருத்தில் கொண்டால் அது ஒருங்கிணைக்கப்பட்ட தாக்குதலாகத் தோன்றுகிறது. இது ஆர்வத்தைத் தூண்டுகின்றது. பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உண்மையில் மனுஷனை மனுஷன் சாப்பிடுகிற உலகமடா இது !

ஜிம்மி இங்: தீபக், நீங்கள் திருந்தியது உங்களுக்கு நல்லது. இல்லை என்றால் அல்தான்துயா ஆவி உங்களை அமைதியாக இருக்க விடாது. சரியானதைச் செய்யுங்கள்.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் அமைதியாக இருப்பது தான் கவலை அளிக்கிறது. அவர்கள் தங்கள் கௌரவத்தைக் காக்க இன்னேரம் ‘துப்பாக்கிச் சூடுகளை’ கிளப்பியிருக்க வேண்டும்.

நியாயமானவன்: அந்த துர்நாற்றத்தை புத்ராஜெயாவிலிருந்து திசை திருப்புவதற்கு இன்னேரம் அம்னோ ஏஜண்டுகள் தீபக்-கையும் எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிமையும் இணைப்பதற்கு வேலை செய்து கொண்டிருப்பார்கள்.

அந்த நாடகத்திற்கு தொடர் அத்தியாயங்களை வழங்க டத்தோ டி மூவர் வேகமாக வேலை செய்து கொண்டிருக்கலாம். இந்த அம்னோ மலேசியாவில் நீங்கள் பார்ப்பது உங்களுக்குக் கிடைக்காது.

முஷிரோ: அந்தக் குற்றச்சாட்டுக்களை ஏன் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமும் போலீஸும் புலனாய்வு செய்யவில்லை ? முக்கிய நாளேடுகள் ஏன் அந்தத் தகவல்களை வெளியிடவில்லை ?

மகாதீர் ஏன் கருத்துக் கூறவில்லை ? அந்த எல்லாத் தரப்புக்களும் நஜிப்பையும் ரோஸ்மாவையும் காப்பாற்றப் போராடுவதையே அது காட்டுகின்றது.

தீபக் தகவல்களை வெளியிட்டுள்ளதற்குப் பின்னணியில் மகாதீர் இருப்பதால் அவர் அது பற்றி கருத்துத் தெரிவிக்கவில்லை. மிக வலுவான அரசியல் ஆதரவு இல்லாவிட்டால் இது போன்ற தகவல்களை வெளியிடும் துணிச்சல் யாருக்கும் வராது.

எங்களுக்கு நீதி வேண்டும்: உத்துசான் மலேசியா, பெரித்தா ஹரியான், தி ஸ்டார், டிவி3, என்டிவி7, ஆர்டிஎம்1, ஆர்டிஎம்2 ஆகியவற்றில் இது பற்றி ஏன் எந்தச் செய்தியும் இல்லை ?

ஆனால் பிகேஆர், பாஸ், டிஏபி பற்றி ஏதும் இருந்தால் ஏன் அது பொய்யாக இருந்தால் கூட அவற்றின் முன் பக்கங்களில் வெளியிடப்படும். தொலைக்காட்சிகளில் தலைப்புச் செய்திகளாக இடம் பெறும்.

நாய்கள் தங்கள் எஜமானர்களை சொல்வதை மட்டுமே கேட்கும் என அவை சொல்கின்றன. இந்த விஷயத்தைப் பெரிதுபடுத்த வேண்டாம் என அவற்றின் எஜமானர்கள் ஆணையிட்டிருக்க வேண்டும்.

வாங் மலேசியா: இது போன்ற வசனங்களையும் காட்சிகளையும் தொலைக்காட்சி நாடகங்களில் மட்டுமே பார்க்க முடியும். மலேசியர்கள் அவற்றை ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

அவை அனைத்தும் உண்மை என்றால் நாட்டின் பிரதமர் என்ற முறையில் நஜிப்பின் நிலை பொருத்தமற்றது.

அவர் இப்போது தேர்தல்களை நடத்துவதோடு மட்டுமின்றி அவர் பதவி துறந்து எல்லாக் குற்றச்சாட்டுக்களிலிருந்து தம்மை விடுவித்துக் கொள்வதற்கு விசாரணைக்கு உட்படவும் வேண்டும்.

 

TAGS: