பினாங்கில் நிகழும் டிஏபி-யின் 16வது பேரவையில் கட்சியின் மத்திய நிர்வாகக் குழுவுக்கான தேர்தலிலிருந்து ஐந்து வேட்பாளர்கள் விலகிக் கொண்டனர். மொத்தம் 1,823 பேராளர்கள் வாக்களித்தனர்.
சூங் சியூ ஒன், ஜெயபாலன் வள்ளியப்பன், தியோ கோக் சியோங், வயலட் யோங் வூய் வூய், எர் தெக் ஹுவா ஆகியோர் அந்த ஐவர் ஆவர்.
தியோ டிஏபி சோஷலிச இளைஞர் பிரிவுக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தலைவர் ஆவார். கட்சியை வலுப்படுத்தும் பொருட்டு தாம் தேர்தலிலிருந்து விலகுவதாக அவர் அறிவித்தார். மற்ற நால்வர் விலகிக் கொண்டதற்கான காரணம் தெரியவில்லை.
தேர்தல் அதிகாரிகள் பிற்பகல் ஒரு மணி வாக்கில் பேராளர்களுக்கு விளக்கமளித்தார்கள். வாக்களிக்க மொத்தம் 20 முகப்புக்கள் அமைக்கப்பட்டிருந்தன.
விலகிக் கொண்டவர்களைத் தவிர மொத்தம் 63 பேர் மத்திய நிர்வாகக் குழுவில் உள்ள 20 இடங்களுக்கு போட்டியிடுகின்றனர். நடப்பு உறுப்பினர்களுடைய பதவிக் காலம் இன்றுடன் நிறைவடைகின்றது.
புதிய நிர்வாக குழு பின்னர் மேலும் 10 பேரை நியமிக்கும். அந்தக் குழு 2013-2015ம் ஆண்டு வரை பணியாற்றும்.
அதற்கு முன்னதாக வேட்பாளர்களுடைய படங்கள் பெரிய திரையில் காட்டப்பட்டு அவர்கள் அறிமுகம் செய்யப்பட்டனர்.
அழியாத மையைப் பயன்படுத்தி தங்கள் வாக்குகளைச் செலுத்துமாறு கிளைகள் வாரியாக பேராளர்கள் அழைக்கப்பட்டனர்.