பாஸ் புத்ராஜெயாவைக் கைப்பற்ற பிஎன் குளறுபடிகளை நம்பியிருக்கவில்லை

hadiஅடுத்த பொதுத் தேர்தலில் புத்ராஜெயாவைக் கைப்பற்றுவதற்குப் போதுமான சொந்த வலிமையை பாஸ் கட்சி பெற்றுள்ளது. அது பிஎன் -னில் காணப்படும் பலவீனங்களையும் உட்பூசல்களையும் நம்பியிருக்கவில்லை என அதன் தலைவர் அப்துல் ஹாடி அவாங் கூறுகிறார்.

திரங்கானு, டுங்குனுக்கு அருகில் டாத்தாரான் பாக்கா-வில் பேரணி ஒன்றை பாஸ் ஆன்மீகத் தலைவர் நிக் அப்துல் அஜிஸ் நிக் மாட் தொடக்கி வைத்த பின்னர் அப்துல் ஹாடி நிருபர்களிடம் பேசினார்.

டுங்குனை அம்னோவிடமிருந்து பாஸ் மீண்டும் கைப்பற்ற முடியும் என திரங்கானு பாஸ் கட்சிக்கான ஆலோசகருமான அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

“இந்த முறை மக்கள் ஆதரவுடன் அந்த இடத்தை மீண்டும் திரும்பப் பெற முடியும் என நாங்கள் நம்புகிறோம்.”

“13வது பொதுத் தேர்தலில் திரங்கானுவில் 17 முதல் 18 இடங்களைக் கைப்பற்ற பாஸ் இலக்கு வைத்துள்ள போதிலும் 28 இடங்களையும் கைப்பற்றும் வலிமையும் கட்சிக்கு உள்ளது,” என்றும் அப்துல் ஹாடி சொன்னார்.

புத்ராஜெயாவை எதிர்க்கட்சிக் கூட்டணி கைப்பற்றும் வாய்ப்புக்களை அதிகரிப்பதற்காக டிஏபி தேசியத் தலைவர் கர்பால் சிங் நீக்கப்பட வேண்டும் என டிஏபி-க்குள் ஒரு தரப்பு கேட்டுக் கொண்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் பற்றியும் அவர் கருத்துரைத்தார்.

எதிர்க்கட்சிக் கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு இடையில் பிளவை ஏற்படுத்தும் தனது வியூகத்தில் பிஎன் அவிழ்த்து விட்டுள்ள அரசியம் தந்திரமே அது என அப்துல் ஹாடி வருணித்தார்.

நேற்று நிகழ்ந்த டிஏபி கட்சித் தேர்தலில் டிஏபி மூத்த தலைவர் லிம் கிட் சியாங், அவரது புதல்வரும் தலைமைச் செயலாளருமான லிம் குவான் எங் ஆகியோருக்கு அடுத்து மூன்றாவது நிலையில் கர்பால் அதிகமான வாக்குகளைப் பெற்றுள்ளார்.

-பெர்னாமா

TAGS: