டிஏபி மத்திய நிர்வாகக் குழுவுக்கு மலாய் வேட்பாளர்கள் யாரும் தேர்வு செய்யப்படாததால் அந்தக் கட்சி மலாய் எதிர்ப்புக் கட்சி அல்ல என அதன் தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் கூறுகிறார்.
டிஏபி அனைத்து இனங்களுக்கும் திறந்துள்ளது என்றார் அவர்.
கடந்த சனிக் கிழமை அந்தக் கட்சியின் தேசியப் பேரவை நிகழ்ந்த போது நடந்த தேர்தலில் போட்டியிட்ட எட்டு மலாய் வேட்பாளர்களில் யாரும் மத்திய நிர்வாகக் குழுவுக்கு தெரிவு செய்யப்படவில்லை. என்றாலும் அவர்களில் செனட்டர் அரிபின் ஒமார், ஜைரில் கிர் ஜொஹாரி ஆகிய இருவரும் பின்னர் மத்திய நிர்வாகக் குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர்.
டிஏபி மீது மக்களுக்கு வெறுப்பைத் தூண்டக் கூடிய செய்திகளை வெளியிடுவதை நிறுத்திக் கொள்ளுமாறு பினாங்கு முதலமைச்சருமான லிம் ஊடகங்களைக் கேட்டுக் கொண்டார்.
“பேராளர்கள் யாரைத் தேர்வு செய்ய வேண்டும் என நாங்கள் கட்டுப்படுத்துவதில்லை. நாங்கள் தேர்தல் முடிவுகளை ஏற்றுக் கொள்கிறோம், அது தான் ஜனநாயகம்.”
“என்றாலும் டிஏபி-யைக் குறை கூறுகின்ற தரப்புக்களும் இருக்கின்றன. காரணம் நாங்கள் இரண்டு மலாய் உறுப்பினர்களை மத்திய நிர்வாகக் குழுவுக்கு நியமித்ததாகும். தேசியப் பேரவையில் பேராளர்கள் எடுத்த முடிவுகளை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம்,” என அவர் இன்று ஜார்ஜ் டவுனில் நிருபர்களிடம் கூறினார்.
பெர்னாமா