“இந்திய வம்சாவளியினரின் ரத்தம் ஓடுவதால் நான் பெருமை கொள்கிறேன்’, மகாதீர் முகமட்

அரசுக்கு இந்நாட்டில் உள்ள இந்திய முஸ்லிம்கள் அளித்து வரும் ஆதரவு பாராட்டத்தக்கதாகும் என்று முன்னாள் பிரதமர் புகழ்ந்துரைத்தார். மலேசியாவில் சிறுபான்மையினராக இந்திய முஸ்லிம்கள் இருந்தாலும் அவர்கள் எல்லா சமயங்களிலும் தங்களின் பிளவுபடாத ஆதரவை அரசாங்கத்திற்கு தெரிவித்து வந்துள்ளனர். இது உண்மையில் நன்றி பாராட்டத்தக்கதாகும் என்று அவர் குறிப்பிட்டார்.

mahathirஒவ்வொரு பொதுத் தேர்தலிலும் குறிப்பாக தற்போதைய அரசாங்கம் கூட்டணி கட்சியாக இருந்த சமயத்திலும், தேசிய முன்னணியாக இருக்கும் இக்காலகட்டத்திலும் அதன் வேட்பாளர்களின் வெற்றியை உறுதி செய்யக்கூடிய அல்லது அவர்களின் வெற்றியை நிர்ணயிக்கக்கூடிய சமூகத்தினராக இந்திய முஸ்லிம்கள் தங்களின் பிளவுபடாத ஆதரவை அரசாங்கத்திற்கு வழங்கி வந்துள்ளனர் என்று அவர் குறிப்பிட்டார்.

இந்நாட்டில் இந்திய முஸ்லிம்களின் எண்ணிக்கை மிக குறைவுதான். ஆனால், ஜனநாயக நடைமுறையில் ஒரு வாக்குகூட வெற்றியை நிர்ணயிக்கும் வல்லமை கொண்டுள்ளது. அந்த வகையில் இதுநாள் வரையில் தேசிய முன்னணி அரசாங்கத்திற்கு தங்களின் வற்றாத ஆதரவை வழங்கி வரும் இந்திய முஸ்லிம்களின் பங்களிப்பை முழு மனதுடன் பாராட்டுகிறோம். நன்றி கூற கடமைப்பட்டுள்ளோம் என்று துன் மகாதீர் குறிப்பிட்டார்.

நேற்று முன் தினம் இரவு இங்கு புத்ரா உலக வாணிப மையத்தில் இந்திய முஸ்லிம்கள் அமைப்புகளின் ஏற்பாட்டில் டாக்டர் மகாதீருக்காக நடத்தப்பட்ட “உங்களின் நற்சேவை என்றென்றும் நினைவுகூரப்படும்” எனும் நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகையில் டாக்டர் மகாதீர் மேற்கண்டவாறு கூறினார். தமிழ் பேசக்கூடிய முஸ்லிம்கள், மலையாளம் பேசக்கூடிய முஸ்லிம்கள் மற்றும் உருது மொழி பேசக்கூடிய முஸ்லிம்கள் என்ற அடிப்படையில் இந்திய முஸ்லிம்களின் அமைப்புகள் மற்றும் இந்திய முஸ்லிம்களின் அரசு சார்பற்ற அமைப்புகள் என்ற அளவில் ஜோகூர் மாநில மலபார் முஸ்லிம் ஜமாத் தலைமையில் 35 அமைப்புகள் இந்த மாபெரும் நிகழ்வுக்கு ஏற்பாடு செய்தன. நிகழ்ச்சி ஏற்பாட்டுக்குழுத் தலைவர் சமுதாய சுடர் டாக்டர் ஹாஜி தஸ்லிம் அவர்களின் தலைமையில்  நடைபெற்ற இந்த நிகழ்வில் இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, பிரிட்டன் ஆகிய நாடுகளைச் சேர்ந்த பேராளர்கள் உட்பட 1,400 பேர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

மலேசிய நாட்டை வளர்ச்சி அடைந்த நாட்டிற்கு நிகராக மேம்படுத்தியிருக்கும் துன் டாக்டர் மகாதீரின் சேவையை பாராட்டும் அதேவேளையில் அவரைக் கௌரவிக்கும் பொருட்டு இந்த மாபெரும் நிகழ்வுக்கு இந்திய முஸ்லிம்கள் அமைப்புகள் ஏற்பாடு செய்து இருந்தன. 

இந்நிகழ்வில் தமது துணைவியார் துன் டாக்டர் சித்தி ஹஸ்மா முகமட் அலியுடன் கலந்து கொண்ட துன் மகாதீர் தமது உரையில், இந்த நாட்டை மேம்படுத்தும் முயற்சியில் இந்திய முஸ்லிம்கள் இதர சமூகத்துடன் கூட்டாக இணைந்து எத்தகைய பங்களிப்பை வழங்கியுள்ளனர் என்பது குறித்தும் நினைவுகூர்ந்து பேசினார்.

ஓர் இந்திய முஸ்லிம் என்று தம்மை அடையாளம் கூறிக் கொள்வதில் தாம் என்றுமே வெட்கப்பட்டதில்லை என்று குறிப்பிட்ட துன் மகாதீர், இந்தியா, பாகிஸ்தான், வங்காளதேசம் போன்ற நாடுகளுக்கு பிரதமராக தாம் சென்றிருந்த போது, நிறைய பேர் தம்மை பார்த்து நீங்கள் ஓர் இந்திய முஸ்லிமா? உங்கள் உடலில் ஓடுவது இந்திய முஸ்லிம் ரத்தமா? என்று கேட்டு இருக்கிறார்கள் என்றார்.

இதில் வெட்கப்படுவதற்கு ஒன்றுமில்லை. மாறாக, பெருமை கொள்கிறேன். காரணம், இந்திய வம்சாவளியினரின் ரத்தம் ஓடுவதால் நான் பெருமை கொள்கிறேன். மலேசியாவை பொறுத்தவரையில் இயற்கையிலேயே மலாய் வம்சாவளியினரை கொண்ட மலாய்க்காரர்களை கண்டுபிடிப்பது என்பது மிகவும் அரிதாகும். மலேசியாவில் உள்ள அனைத்து பிரதமர்களையும் பார்த்தால் கூட அவர்கள் இயற்கையில் மலாய் வம்சத்தை கொண்டவர்கள் அல்ல. மாறாக, ரத்த கலப்பு உடையவர்கள்தான் என்று துன் மகாதீர் குறிப்பிட்டார்.

அடுத்து வரக்கூடிய 50 அல்லது 100 ஆண்டுகளில் இந்நாட்டில் ரத்த கலப்பு இல்லாத ஒருவர் யாரையும் காண முடியாது. காரணம், வேலை தேடி வெளிநாடுகளுக்கு செல்லும் சூழ்நிலை  எல்லாம் மிக சுலபமாக அமைந்து விடும். இந்நிலையில் அவர்கள் அங்கேயே தங்கி அங்குள்ள உள்நாட்டவர்களை திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையை அமைத்துக் கொள்ளக் கூடிய ஏற்படும் நிலையும் வரலாம். எனினும் மலேசியாவை பொறுத்தவரையில் பல்வேறு இனத்தவர்களாகவும், வம்சாவளியினராகவும், மாறுபட்ட பழக்கவழக்கங்களையும், கலாச்சாரங்களையும் கொண்டவர்களாக இருந்தாலும் நாடு தொடர்ந்து வெற்றி பெற்றுள்ளது. மக்கள் நிலைத்தன்மையுடன் சுபிட்சமாகவும் வாழ்கின்றனர். இதுதான் மலேசியாவின் தனித்துவமாகும். மலேசியாவின் வெற்றியின் ரகசியம் என்ன என்று பலர் என்னை கேட்பதுண்டு. அதற்கு இந்த தனித்துவம்தான் காரணம் என்று நான் பதில் கூறுவதுண்டு என்று துன் மகாதீர் தெரிவித்தார்.

நிகழ்ச்சி ஏற்பாட்டுகுழுத் தலைவர் ஹாஜி தஸ்லிம் முகமட் இப்ராகிமுடன் சேர்ந்து இந்த நிகழ்ச்சிக்குthasleem ஏற்பாடு செய்த தலைவர்களான ஜோகூர் மலபார் முஸ்லிம் ஜமாத்தின் தலைவர் ஹாஜி மைடீன் ஹூசேன், ஹாஜி ஜமருல் கான் காதீர், டத்தோ முகமட் இக்பால் மற்றும் கிம்மா தேசியத் தலைவர் ஹாஜி முகமட் ஹனிபா மற்றும் முஸ்லிம் அமைப்புகளை துன் மகாதீர் பாராட்டினார்.

இந்நிகழ்வில் 1,400 பேர் மட்டுமே அமர்வதற்கான வசதிகள் இருந்த போதிலும் அதிகமானோர் வருகை தந்ததால் கிட்டத்தட்ட 800 பேருக்கு இடம் கிடைக்கவில்லை என்று ஹாஜி தஸ்லிம் தெரிவித்தார்.

எனினும் இந்த நிகழ்வானது இந்நாட்டில் உள்ள இந்திய முஸ்லிம்கள் அனைவரும் இணைந்து துன் மகாதீருக்கு அளிக்கும் மாபெரும் கௌரவமாக கருத வேண்டும் என்று தமது உரையில் கேட்டுக் கொண்டார்.

-நன்றி. தமிழ் நேசன், ஜூன்14, 2005.

 

 

 

 

 

 

TAGS: