கேகே சூப்பர்மார்கெட் ஹொல்டிங்ஸ் பெர்ஹாட், ஆண்டுக்கு 134 குற்றவியல் சம்பவங்கள் தன் கடைகளில் நிகழ்வதாகவும் அவற்றில் பாதிக்கு மேற்பட்டவை கொள்ளைச்சம்பவங்கள் என்றும் தெரிவித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அடிக்கடி ஆயுதம்தாங்கிய கொள்ளையடிக்கப்பட்டால் யாருமே கலங்கிப் போவார்கள். ஆனால், கேகே சூப்பர்மார்கெட் பணியாளர் ஹசிம் மக்ரபலி (வலம்) அப்படியெல்லாம் கலங்கிப்போகின்றவர் அல்ல. கடந்த ஈராண்டுகளில் பத்துக் கொள்ளைச்சம்பவங்கள் நேரில் கண்டிருக்கும் அவருக்கு இது பழகிப் போய்விட்டது.
“நான் பயப்படவில்லை.எதற்காகப் பயப்பட வேண்டும்? என்றாவது ஒரு நாள் சாகத்தானே போகிறோம்?”, என்று செர்டாங், ஜாலான் புசாரில் 24-மணி நேரக் கடையில் பணிபுரியும் அவர் கூறினார்.அக்கடை பலமுறை கொள்ளை இடப்பட்டுள்ளது.
ஆனால், ஹனிபா விரே அப்படியல்ல. இரண்டு நாள்களுக்குமுன் நடந்த கொள்ளையை இன்னும் அவரால் மறக்க முடியவில்லை. நினைத்தாலே நடுங்கி விடுகிறார்.
“அதுதான் என் முதல் அனுபவம். இப்போதுகூட பணம் பெறுமிடத்தில் இருந்தால் பயம் வந்துவிடுகிறது”, என்றாரவர். அவர் வங்சா மாஜு, ஜாலான் மெட்ரோ வங்சாவில் உள்ள சூப்பர்மார்கெட்டில் மேற்பார்வையாளராக பணி புரிகிறார்.
ஒரு வாடிக்கையாளர் என்று நினைத்து அவன் கேட்ட பொருள்களை எல்லாம் எடுத்துக்கொடுத்த பிறகு, தனியாக வந்திருந்த அக்கொள்ளையன் ஒரு கத்தியை நீட்டியபடி அவரையும் அவரின் சகா ஒருவரையும் காசுப் பெட்டி உள்ள இடத்தை நோக்கிச் செல்லுமாறு பணித்தான்
“அவன் கத்தியை நீட்டியதும், ஆங், இது எதற்கு என்று கேட்டேன், சத்தம் போடாதே என்றான். அப்போதுதான் (அவன் கொள்ளையன் என்பதை) உணர்ந்தேன். உணர்ந்து அமைதியாக இருந்தேன்”, என்று அந்தப் பகல்-நேரக் கொள்ளைச்சம்பவத்தை நினைவு கூர்ந்தார்.
‘அவர்களை எதிர்த்து சண்டையிடக்கூடாது’
ஆனாலும் அந்த ஒருநாள் சம்பவத்தால் அந்த 21-வயது பெண் வேலையை விடப்போவதில்லை.
“அதற்கு அஞ்சி வேலையை விட மாட்டேன்….. இது ஒரு அனுபவம். அப்படித்தான் நினைக்கிறேன்”, என்றாரவர்.
போலீசார் என்னதான் நாட்டில் குற்றச்செயல்கள் குறைந்திருப்பதாகக் கூறினாலும், நாடு முழுவதுமுள்ள தனது கடைகள் கடந்த ஐந்தாண்டுகளில் 671 தடவை கொள்ளைச் சம்பவங்களுக்கும் திருட்டுச் சம்பவங்களுக்கும் இலக்காகியுள்ளன என்று கேகே சூப்பர்மார்கெட் கூறியது. இதனால் ரிம1 மில்லியனுக்கும் மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது.
திங்கள்கிழமை, தாமான் ஸ்ரீரம்பாய் சூப்பர்மார்கெட்டைக் கொள்ளையிட முயன்ற கத்தி ஏந்திய 19-வயது ஆடவனை போலீசார் சுட்டுகொன்றனர்.
அதைத் தொடர்ந்து அந்நிறுவனம் எல்லாக் கடைகளிலும் பாதுகாப்பை வலுப்படுத்தியுள்ளது.
கொள்ளையர்களைச் சமாளிக்கும் விசயத்தில் ஹசிம், ஹனிபா இருவரும் ஒரே கருத்துடையவர்களாக இருக்கிறார்கள்.
“அவர்கள் வந்தால், எதிர்க்காதீர்கள். உங்களைத் தாக்கினால் எதிர்த்து சண்டையிட வேண்டாம்.
“நான் வங்காள தேசி. நான் செத்துப்போனால், வங்காள தேசத்தில் உள்ள என் குடும்பம்தான் துன்பப்படும்”, என்று ஹசிம் கூறினார்.
அவர், சில கொள்ளையரிடம் கொள்ளையிடுவது நல்லதல்ல என்று அறிவுரை கூறியது உண்டு. ஆனால், அது எடுபடுவதில்லை.
“நான் ‘மலேசியாவில் வேலை நிறைய இருக்கிறது. உங்கள் கை, கால்கள் நன்றாக இருக்கின்றன. எதற்காக இதைச் செய்கிறீர்கள்?’ என்று சொன்னேன்”.
அதற்கு அவர்கள், “வாயை மூடு. பணத்தை எடு”, என்றார்கள்.