எம்பி பேசுகிறார்: GOBIND SINGH DEO
அடுத்த தேர்தலுக்கான பிஎன் வேட்பாளர்கள் கறைபடியாதவர்கள் என்பதை உறுதிப்படுத்தவும் அதன் மூலமாக கட்சிக்கு ஒரு நல்ல தோற்றத்தை ஏற்படுத்தித் தரவும் பிஎன் வேட்பாளர்களின் பின்னணி அலசி ஆராயப்படும் என்று பிரதமர் அறிவித்துள்ளார்.
வேட்பாளர்கள் அப்பழுக்கில்லாதவர்கள் என்பதை உறுதிப்படுத்திக்கொள்வது அவசியம். அதே நேரத்தில் கட்சிக்கு நல்லதொரு தோற்றத்தை உருவாக்குவதும் அவசியமானதே. அதனால், தேர்தலில் தனது வாய்ப்புகள் பாதிக்கப்படாதிருக்க பிஎன் சந்தேகத்துக்கு அப்பாற்பட்டதாக இருப்பது முக்கியமாகும்.
அப்படியானால், பிரதமர் தாம் சொன்னதைத் தாமே செய்துகாட்ட வேண்டும். அவரே ஒரு முன்மாதிரியாக, அண்மையில் தீபக் ஜெய்கிஷன் அவர்மீது தெரிவித்துள்ள குற்றச்சாட்டுகளை விசாரிக்குமாறு கேட்டுக்கொள்ள வேண்டும். அந்த விசாரணைக்கு அவர் முழுமையாக ஒத்துழைக்கவும் வேண்டும்.
இங்கே இரட்டை நியாயம் கூடாது. வேட்பாளர்களை விசாரிக்க வேண்டும் என்று கூறும் பிரதமர் தம்மையும் விசாரணைக்கு உட்படுத்திக்கொள்வதே முறையாகும்.
பிரதமர் தாம் உபதேசிப்பதைத் தாமே கடைப்பிடிக்கத் தவறினால் கறைபடியாத வேட்பாளர்கள், நல்ல தோற்றத்தைக் கொண்ட கட்சி என்று சொல்வதெல்லாம் வெறும் அரசியல் நாடகம் என்றாகிவிடும்.
இதுவே நஜிப்புக்கு மிகப் பெரிய சோதனையாகும். என் சவாலுக்கு அவர் பதில் சொல்ல வேண்டும். நான் சொல்வதற்காக அல்லாமல், அவரே சொன்னது உண்மை என்பதை நிரூபிக்க இச்சோதனைக்குத் தம்மை அவர் உட்படுத்திக்கொள்வது அவசியம். எனவே, ஒரு பொது விசாரணை நடத்தும்படி அவரே முன்வந்து அறிப்பாரா?
=======================================================================================
GOBIND SINGH DEO பூச்சோங் எம்பி