தேர்தல் சீரமைப்பு மீது ஆர்சிஐ அமைக்க முன்னாள் இசி தலைவர் ஆதரவு

1ab rashidநாடாளுமன்ற தேர்வுக் குழு(பிஎஸ்சி) பரிந்துரைத்த தேர்தல் சீரமைப்புகள் முழுமையானவை அல்ல என்று பெர்சே 2.0 கூறுவதை விசாரிக்க அரச விசாரணை ஆணையம் (ஆர்சிஐ) அமைக்கப்படுவது அவசியம் என்கிறார் தேர்தல் ஆணைய(இசி) முன்னாள் தலைவர் அப்துல் ரஷிட் அப்துல் ரஹ்மான்.

1ab rashid1இசி செயலாளராக 17 ஆண்டுகளும் அதன் தலைவராக 10 ஆண்டுகளும் பணிபுரிந்துள்ள அப்துல் ரஷிட் (இடம்), பெர்சே 2.0, பிஎஸ்சி ஆகிய இரண்டுமே  தேர்தல் முறையில் உள்ள அடிப்படை பிரச்னைகளுக்குத் தீர்வு கூறவில்லை என்று  கூறினார்.

“(முழுமையான சீரமைப்பு என்றால்) எல்லா சட்டங்களையும் ஆராய வேண்டும். ஒன்றிரண்டை ஆராய்வது மட்டும் போதாது. இது அவ்வப்போது காரின் பெட்டரியை, இயந்திர எண்ணெயை மாற்றுவது போன்றது. இது தற்காலிக தீர்வுதான். இதனால் பிறகு பெரிய பிரச்னைகள் வரலாம். இதனால் அடிப்படைக் கொள்கைகள் மாறுவதில்லை”, என்றவர் மலாய் நாளேடான சினார் ஹரியானுக்கு வழங்கிய நேர்காணலில் கூறினார்.

அடுத்த தேர்தலில் அடையாள மை பயன்படுத்தப்படுத்தல் போன்றவை “சிறு விசயங்கள்”. அதனால் “கரங்கள்தான் அழுக்காகும்” மற்றபடி அது மலேசியாவில் ஜனநாயகத்தை வலுப்படுத்தப்போவதில்லை என்றார்.

“ஆனால், அதை நான் எதிர்க்கவில்லை. நானும் (2008-இல்) செய்ய நினைத்தேன். அரசாங்கம்தான் ஒத்துக்கொள்ளவில்லை.  ஏன் என்று எனக்குத் தெரியாது. நான் பணியில் இருந்தபோது அரசாங்கம் அதற்கு இணங்கவில்லை. இப்போது இணங்கி வந்திருக்கிறார்கள். ஒரு வேளை அழுத்தம் அதிமாகி விட்டதுபோலும்”.

2008-இல் அழியா மை பயன்படுத்த ஒப்புகொண்ட அரசாங்கம் பொதுத் தேர்தல் நடக்க நான்கு நாள் இருந்தபோது திடீர் பல்டி அடித்து பிஎன், மாற்றரசுக் கட்சிகள் ஆகிய இரு தரப்புகளிடமிருந்தும் நன்றாக வாங்கிக் கொண்டது.

பிஎஸ்சி-இன் விசாரணை வீச்சளவின் எல்லை குறுகலானது

தேர்தல் சீரமைப்பை ஆராய ஆர்சிஐ அமைக்க வேண்டும் என்ற பெர்சேயின் கோரிக்கையைத் தாமும் ஏற்பதாக அப்துல் ரஷிட் கூறினார்.

“அது தேவைதான். பிஎஸ்சி தற்காலிகமானதே. அதன் விசாரணை வரம்பும் குறுகலானது. அந்த வரம்பைமீறி அதனால் செயல்பட முடியாது.

“பிஎஸ்சி அதற்குக் கொடுக்கப்பட்ட பணியைச் செய்துமுடித்து விட்டது. அதற்காக அதைப் பாராட்டுவோம். ஆனால் அவர்கள் (பிஎஸ்சி உறுப்பினர்கள்) எல்லாரும் எம்பிகள்; அரசியல்வாதிகள். என்ன நடக்கிறது என்பதை அறிவார்கள். ஆனால், (சில விவகாரங்களைத்) தொட மாட்டார்கள்.

“இது, காரின் இயந்திரம், பிளக், இயந்திர எண்ணெய் போன்றவற்றை மாற்றுவதுபோலத்தான்”, என்றாரவர்.

தேர்தல் முறையில் உள்ள அடிப்படை பிரச்னைகள் தீர்க்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்ட அப்துல் ரஷிட் அவை என்னவென்பதை விவரிக்கவில்லை.

2008 பொதுத் தேர்தல் முடிந்தவுடனேயே  தேர்தல் சீரமைப்பை ஆராய ஒரு தனிக்குழுவை அமைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டவர் அப்துல் ரஷிட்.

இவ்வாண்டு ஜனவரியில், பிஎஸ்சியின் பரிந்துரைகள் நடைமுறை மாற்றங்கள்தாம் என்றும் ஒரு வாரத்தில் அவற்றை அமல்படுத்திவிட முடியும் என்று அப்துல் ரஷிட் கருத்துரைத்திருந்தார்.

 

TAGS: