டிஏபி: தாயிப்பை ஆய்வு செய்ய பிரதமர் தயாராக இருக்கிறாரா ?

taibபிஎன் தேர்தல் வேட்பாளர்களை ஊழல் தொடர்பில் ஆய்வு செய்ய வேண்டும் என்பதில் பிரதமர் தீவிரமாக இருந்தால் அந்த நடவடிக்கைக்கு  முக்கியமான நபர் சரவாக் முதலமைச்சர் அப்துல் தாயிப் மாஹ்முட் என டிஏபி  சொல்கிறது.

தாயிப்பிடம் உள்ள பெருவாரியான சொத்துக்கள் மீது ஸ்விட்சர்லாந்தைத் தளமாகக் கொண்ட அரசு சாரா  அமைப்பான புருனோ மான்செர் நிதி அமைப்பு விவரமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளதாக டிஏபி   நாடாளுமன்ற உறுப்பினர் தியோ நி சிங் கூறினார்.

“தாயிப் குடும்பத்தைச் சேர்ந்த 20 உறுப்பினர்களுக்கும் மலேசியா, ஆஸ்திரேலியா, கனடா, பிரிட்டன், கனடா,  அமெரிக்கா ஆகியவற்றில் உள்ள தனிப்பட்ட சொத்துக்களையும் வர்த்தக நடவடிக்கைகளையும் அந்த அமைப்பின் முதலாவது அறிக்கை விவரமாக வெளியிட்டுள்ளது.”

“என்றாலும் 31 ஆண்டுகளாக சரவாக் முதலமைச்சராக இருக்கும் தாயிப் முகமட் பில்லியன் கணக்கான ரிங்கிட்  பெறும் சொத்துக்களைச் சேர்த்துள்ளதாக கூறும் குற்றச்சாட்டுக்களை நமது பிரதமர் நிராகரித்துள்ளார்.

இவ்வாண்டு செப்டம்பர் மாதம் அவர் விடுத்த பொறுப்பற்ற அறிக்கை இதுவாகும்: “எல்லா வகையான குற்றச்சாட்டுக்களும் சுமத்தப்பட்டுள்ளன. நாம் அவற்றை பொருட்படுத்த வேண்டாம்.”

“ஆகவே பிரதமரும் பிஎன் தலைவருமான நஜிப் தமது எண்ணத்தை மாற்றிக் கொண்டுள்ளாரா – ஊழல் நடவடிக்கைகளுக்காக எல்லா பிஎன் வேட்பாளர்களும் ஆய்வு செய்யப்பட வேண்டும் என அவர்  விரும்புகிறாரா ?” செர்டாங் எம்பி-யுமான தியோ ஒர் அறிக்கையில் கூறினார்.

எல்லா அரசியல் கட்சிகளும் தங்கள் வேட்பாளர்கள் ‘தூய்மையானவர்களாக’ இருப்பதை உறுதி செய்யவும் விரும்பத்தகாத குற்றச்சாட்டுக்களைத் தவிர்க்கவும் வேட்பாளர் பட்டியலை ஆய்வு செய்வதற்கு மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திடம் சமர்பிக்க வேண்டும் என அண்மையில் அந்த ஆணையத்தின் கலந்தாய்வு ஊழல் தடுப்புக் குழுத் தலைவர் ஜோஹான் ஜபார் யோசனை கூறியிருந்தார்.

 

TAGS: