அனாக் ஆரஞ்சு வாகன அணியை பிஎன் ஆதரவுக் கும்பல்கள் தாக்கின

Anak's Orangeநெகிரி செம்பிலானில் நேற்றுக் காலை அனாக் அமைப்பின் வாகன அணி மீது பிஎன் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்திய போது அந்த அமைப்பைச் சேர்ந்த இரு போராளிகள் காயமடைந்தனர்.

பெல்டாவைக் காப்பாற்றுங்கள் என்னும் கருப்பொருளைக் கொண்ட அனாக் அமைப்பின் 30 வாகனங்களைக் கொண்ட அணி, தம்பினுக்கு அருகில் உள்ள பெல்டா புக்கிட் ரோத்தான் உத்தாரா-வில் நுழைய விடாமல் தடுக்கப்பட்ட போது அந்த தாக்குதல் நடைபெற்றது.

கொடிகளை ஏந்தியிருந்த 100 பிஎன் இளைஞர்கள், பெல்டா ஊழியர்கள், போலீஸ்காரர்கள் ஆகியோர் அந்த வாகன அணியை நுழைய விடாமல் தடுத்தது.

வாகன அணியில் இருந்த நாராஸா மூடாவுக்கு தலையில் காயங்களும் ரசாலில் ரஷாட் என்பவருக்கு கண் புருவத்தில் காயமும் ஏற்பட்டதாக அனாக் தலைவரும் பாஸ் மத்தியக் குழு உறுப்பினருமான மஸ்லான் அலிமான் கூறினார்.

கை கலப்பின் போது அவர்கள் இருவரும் காயமடைந்தனர் என்றும் வாகனம் ஒன்றின் முன் கண்ணாடியை ஒரு கும்பல் நொறுக்கியது என்றும் அவர் சொன்னார்.

mobஅந்த இருவரும் தாக்குதலுக்கு இலக்கான போது வாகனத்தில் இல்லை என நெகிரி செம்பிலான் பிகேஆர் துணைத் தலைமைச் செயலாளர் டி குமார் கூறினார்.

“தாக்குதலை நடத்திய கும்பலில் இருந்தவர்கள் பள்ளிப் பிள்ளைகளைப் போன்று இருந்தார்கள். பெல்டா குடியேற்றக்காரர்கள் அல்ல. பெல்டா நிலக் குடியேற்றப் பகுதிக்குள் நுழைய எங்கள் ஆட்கள் பேச்சு நடத்திக் கொண்டிருந்த போது வாகனத்தின் முன் கண்ணாடி நொறுங்கியது,” என குமார் தொடர்பு கொள்ளப்பட்ட போது தெரிவித்தார்.

அன்றைய தினம் காலையில்  மேலும் இரண்டு நிலக் குடியேற்றத் திட்டங்களில் வாகன அணி நுழைவதற்கு அனுமதிக்கப்படவில்லை என்றும் குமார் சொன்னார்.

“கோலாப் பிலாவில் உள்ள பெல்டா கெப்பிஸ் நாங்கள் முதல் இலக்காகும். பெல்டா உள்ளூர் போலீஸ் துணையுடன் சிறுவர்கள் கும்பல் ஒன்று எங்களை நுழைய விடாமல் தடுத்தது.”

mob1“நாங்கள் பின்னர் பெல்டா ரோக்கான் பாராட்-டுக்கு சென்றோம். அங்கு பிஎன் கொடிகளை வைத்திருந்த ரௌடிகளும் பெல்டா ஊழியர்களும் போலீஸ்காரர்களும் எங்களை நிறுத்தினர்,” என்றார் அவர்.

இதனிடையே பாகாங்கில் அனாக் வாகன அணி, பெல்டா ஜெங்கா 23க்குள் நுழைய விடாமல் தடுக்கப்பட்டதாகவும் ஹராக்கா டெய்லி செய்தி வெளியிட்டுள்ளது.

என்றாலும் பெல்டா ஜெங்கா 12க்குள் செல்ல அனாக் வாகன அணி அனுமதிக்கப்பட்டதாக நேரில் பார்த்த ஒருவர் வீடியோ ஒளிப்பதிவை இணையத்தில் சேர்த்துள்ளார்.

ஜெங்கா 23 சம்பவம் மீது மாரான் போலீஸ் மாவட்ட போலீஸ் தலைமையகத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது.

TAGS: