ங்கே-ங்கா, அரசியலையும் வணிகத்தையும் கலக்கக் கூடாது

1businessஉங்கள் கருத்து   ‘பரிவர்த்தனைகள் ஒளிவுமறைவில்லாமல் நடந்திருக்கலாம். ஆனாலும், அரசியல்வாதிகள் வணிகத்தில் ஈடுபடுவது நல்லதல்ல. அதுவும் நிலம் சம்பந்தபட்ட விவகாரங்களில் ஈடுபடாமலிருப்பதே நல்லது.’

ங்கே: கிளந்தான் நிலம் திறந்த சந்தையில் வாங்கப்பட்டது

ஆர்எல்: பேராக் டிஏபி தலைவர் ங்கே கூ ஹாம் அவர்களே, இப்படிப்பட்ட அரசியல்வாதிகள் தேவையில்லை. இவர்களைப் போன்ற அரசியல்வாதிகள்தான் பிஎன்னில் இருக்கிறார்கள். அதற்காகவே மக்கள் அவர்களை உதறித் தள்ளினார்கள்.

வணிகத்தில் ஈடுபட வேண்டுமென்றால், அரசியலை விட்டு விடுங்கள். எங்களுக்கு மக்கள்மீதும் நாட்டின்மீதும் அக்கறை கொண்ட அரசியல்வாதிகளே தேவை, சொந்தத்துக்கு சொத்து சேர்க்க நினைப்பவர்கள் தேவையில்லை.

புரோண்டோ: அரசியலில் இருக்க விரும்பினால் வணிகத் தொடர்புகளை விட்டுவிட வேண்டும். அரசியல்வாதிகள் வணிகத்தில் ஈடுபடும்போது அவர்கள் ‘நீ எனக்குச் சாதகமாக நடந்துகொண்டால் நான் உனக்குச் சாதகமாக நடப்பேன்’ என்ற முறையில் நடந்துகொள்வதாக ஒரு தப்பெண்ணம் தோன்றிவிடும்.

தீமோதி: எல்லாமே சட்டப்பூர்வமாக நடந்ததாகவே இருக்கட்டும்.  அவ்விரு உறவினர்களையும் பகுதி-நேர வணிகர்கள் என்பதா, பகுதிநேர-அரசியல்வாதிகள் என்பதா?

டிஏபி ‘தவக்கேகளின்’ கட்சியாக (தொழிலதிபர்களின் கட்சியாக) மாறிவிடக்கூடாது. மசீச செய்ததுபோல் டிஏபி, வணிகத்தையும் அரசியலையும் கலக்கக்கூடாது.

விழிப்பானவன்: இரண்டு கேள்விகளுக்கு பதிலளித்திருக்கிறார்கள். நிலம் ‘மந்திரி புசார் பதவிக்குக் கொடுக்கப்பட்ட விலை அல்ல’ என்று சொன்னார்கள். முறைப்படிதான் வாங்கப்பட்டது என்றார்கள்.

நான் மூன்றாவதாக ஒரு கேள்வியை முன்வைக்க விரும்புகிறேன். ங்கா- ங்கே, டிஏபியில்; தீவிர அரசியல் பணியில் ஈடுபட்டு வரும் உங்கள் இருவருக்கும் வர்த்தக ஈடுபாடு ஏன்? சட்டப்படி அது தப்பல்ல. ஆனாலும் உங்கள் நம்பகத்தன்மையைக் கெடுத்து விடும்.

இரண்டில் எது தேவை என்பதை நீங்கள்தான் தேர்ந்தெடுக்க வேண்டும்.

பெர்ட் டான்: ஏன் அவர்கள் தனிப்பட்ட முறையில் வணிகத்தில் ஈடுபடக்கூடாது? இப்போது அவர்கள் மாநில ஆட்சிமன்ற உறுப்பினர்களாக இல்லையே.

கர்பால் சிங், வழக்குரைஞராக தொழில் செய்யவில்லையா? அவர் எம்பியாவும் டிஏபி தலைவராகவும் இருப்பதால் வழக்குரைஞர் தொழிலைக் கைவிட வேண்டும் என்பது சரியாகுமா?

உண்மை விளம்பி: அரசியலும் வணிகமும் ஒன்று சேரக்கூடாது. அது ஊழலுக்கு இட்டுச் செல்லும். ங்கேயும் ங்கேயும் இதை உணர வேண்டும். அவர்களின் அரசியல் தொடர்பின் காரணமாக அவர்களுக்கு நிலம் குறைந்த விலையில் கொடுக்கப்பட்டிருந்தால்  சட்டப்படி அது சரிதான் என்றாலும் தார்மீக ரீதியில் அது தப்பு.

மேலும் பாதிப்பு ஏற்படுமுன்னர் டிஏபி இப்படிப்பட்ட தலைவர்களைக் கழட்டி விட வேண்டும்.

பன்சாய்: பாஸ் கட்சியைச் சேர்ந்த ஒருவர் மந்திரி புசாராவதற்கு செய்த உதவிக்குக் கைமாறாக ங்காவுக்கும் ங்கேக்கும் நிலம் கொடுக்கப்பட்டது என்பது பிஎன்னின் குற்றச்சாட்டு. அது, மெய்பிக்கப்பட்டதா?

மலேசியர்கள் அவர்கள் மாநிலச் சட்டமன்ற உறுப்பினர்களாக இருந்தாலும் நிலம் வாங்குவதில் தப்பில்லை.  அதைத் திறந்த சந்தையில் முறைப்படி செய்திருக்க வேண்டும் என்பதுதான் முக்கியம்.

ஆ கு: அவ்விருவர்மீதும் எனக்கு சந்தேகம் உண்டு. பிரச்னையைத் தெளிவுபடுத்த டிஏபி அவர்கள்மீது முழுமையான விசாரணை நடத்த வேண்டும். தவறினால், 13வது பொதுத் தேர்தலில் குறிப்பாக பேராக்கில் அவர்கள் நிறைய வாக்குகளை இழக்க நேரும்.

TAGS: