பாஸ்: ‘அல்லாஹ்’ என்ற சொல்லுக்குப் பதில் ‘துஹான்’ என்ற சொல்லைப் பயன்படுத்தலாம்

kitabபைபிளின் மூல வாசகத்தில் உள்ள உண்மையான அர்த்தத்தை பிரதிபலிக்கும் வகையில் பைபிளின் மலாய் பதிப்பில்  ‘God’ அல்லது இறைவன் என்பதற்கு ‘அல்லாஹ்’ என்னும் சொல்லுக்குப் பதில் ‘துஹான்’ என்னும் சொல்லைப் பயன்படுத்தலாம் என பாஸ் கட்சி இன்று கூறியுள்ளது.

“பைபிளின் மலாய் பதிப்பு ஆங்கிலப் பதிப்பின் நேரடி மொழி பெயர்ப்பு என்பதால் ‘God’ அல்லது இறைவன் என்பது ‘அல்லாஹ்’ எனப் பொருள்படாது. உண்மையான மொழி பெயர்ப்பு ‘துஹான்’ என இருக்க வேண்டும் என பாஸ் தகவல் பிரிவுத் தலைவர் துவான் இப்ராஹிம் துவான் மான் இன்று விடுத்த அறிக்கையில் கூறினார்.

அதே நிலையை அந்தக் கட்சியின் தலைமைச் செயலாளர் முஸ்தாபா அலியும் அறிவித்துள்ளார். அவரது செய்தி சினார் ஹரியானில் வெளியாகியுள்ளது.

‘God’ என்ற வார்த்தைக்கு ‘அல்லாஹ்’ என மொழிபெயர்ப்புச் செய்யப்படும் போது கிறிஸ்துவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் குழப்பம் ஏற்படுகின்றது. அதனால் முஸ்லிம்களிடையே அதிருப்தி அதிகரிக்கிறது என துவான் இப்ராஹிம் சொன்னார்.

“முஸ்லிம்களுக்கு ‘அல்லாஹ்’ என்னும் சொல் புனிதமானது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அதனைப் போற்ற வேண்டும். அது எல்லா இடங்களிலும் பொருத்தமற்ற இடங்களிலும் பயன்படுத்தப்படக் கூடாது,” என்றார் அவர்.

சபா, சரவாக்கில் உள்ள கிறிஸ்துவர்கள் பைபிள் மலாய் பதிப்பில் ‘அல்லாஹ்’ என்ற சொல்லை பயன்படுத்த அனுமதிக்குமாறு கூட்டரசு அரசாங்கத்தை டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் கடந்த திங்கட்கிழமை கேட்டுக் கொண்டார்.

TAGS: