உள்ளூர் ஓராங் அஸ்லிகள் பாரிசானுக்கு வாக்களிப்பதற்கு தாப்பா ஓராங் அஸ்லி மேம்பாட்டு இலாகா அவர்களுக்கு “பயிற்சி” கூட்டங்களை நடத்தி வருகிறது என்று பேராக் பக்கத்தான் இன்று கூறிக்கொண்டது.
ஜாலான் பகாங் பகுதியிலுள்ள அனைத்து ஓராங் அஸ்லி கிராமங்களிலும் இப்பயிற்சி கூட்டங்கள் கடந்த மாதம் நடத்தப்பட்டதாக பக்கத்தான் கூறிற்று. அப்பயிற்சிகள் ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியின் ஒத்துழைப்புடன் நடத்தப்பட்டதாகவும் அது கூறிற்று.
அப்பயிற்சி கூட்டங்களில் பங்கேற்றவர்களுக்கு இரண்டு தாள்கள் தரப்பட்டன. அவை தாப்பா நாடாளுமன்ற தொகுதி மற்றும் செண்டெரியாங் சட்டமன்ற தொகுதிக்கான மாதிரி வாக்கு சீட்டுகள் போன்று காணப்பட்டன.
அந்த இலாகா அதிகாரி மற்றும் தேர்ந்தெடுக்கப்பட பிரதிநிதியின் முன்பு ஓராங் அஸ்லிகள் பிஎன்னுக்கு வாக்களிக்குமாறு “கட்டாயப்படுத்தப்பட்டனர்” என்று பக்கத்தான் கூறிற்று.
“அந்த இரு மாதிரி வாக்குச் சீட்டுகளிலும் பாரிசானுக்கு வாக்களித்தவர்களுக்கு 5 கிலோ அரிசி வெகுமதியாக அளிக்கப்பட்டது”, என்று பேராக் பக்கத்தான் பாஸ் இதழ் ஹராக்காடெய்லியை மேற்கோள் காட்டி அதன் அறிக்கையில் கூறியுள்ளது.
இது ஒருவரின் தேர்தல் உரிமைகளில் குறுக்கீடுகள் குறித்த தேர்தல் குற்றங்கள் சட்டம் 1954, செக்சன் 9 ஐ மீறியதாகும் என்று பக்கத்தான் கூறியது.
மாதிரி வாக்குச் சீட்டுகள் அச்சடிப்பதும் அதே சட்டம் செக்சன் 3(j) க்கு முரணானதாகும் என்று அது வாதிட்டது.
அப்பயிற்சிகள் நடத்தப்பட்டபோது உடனிருந்த அந்த தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி மற்றும் ஓராங் அஸ்லி மேம்பாட்டு இலாகா இதற்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டனர்.
சம்பந்தப்பட்ட இலாகாவுடன் மலேசியாகினி தொடர்பு கொண்டபோது, அப்பயிற்சிக்கு பொறுப்பான அதிகாரி வெளியில் இருப்பதாகவும் நாளை திரும்புவார் என்றும் தெரிவிக்கப்பட்டது.
சம்பந்தப்பட்ட பிரதிநிதியின் எதிர்வினைக்காக அவரது அடையாளம் வெளியிடப்படவில்லை.