சிலாங்கூர் 2015ம் ஆண்டு தண்ணீர் நெருக்கடியை எதிர்நோக்கும் எனக் கூறப்பட்ட போதிலும் அந்த மாநிலத்தின் தண்ணீர் பிரச்னையைத் தீர்ப்பதற்குத் தாம் 100 ஆண்டுகள் கூடக் காத்திருக்கத் தயாராக இருப்பதாக மந்திரி புசார் அப்துல் காலித் இப்ராஹிம் விடுத்துள்ள அறிக்கையை பயனீட்டாளர் சங்கத் தலைவர் ஒருவர் சாடியுள்ளார்.
காலித் அறிக்கை தொழில் நிபுணத்துவம் இல்லாதது என வருணித்த சுபாங் ஷா அலாம் பயனீட்டாளர் சங்கத் தலைவர் ஜேக்கப் ஜார்ஜ், தண்ணீர் விவகாரம் தொடர்பில் கூட்டரசு அரசாங்கத்திற்கு எதிராக அரசியல் போரை மாநில அரசாங்கம் நடத்துவதாக சொன்னார்.
“மந்திரி புசார் என்ற முறையில் சிரமங்களை எதிர்நோக்கும் சிலாங்கூர் தண்ணீர் பயனீட்டாளர்களுடைய உணர்வுகளைப் புரிந்து கொண்டிருக்க வேண்டும்,” என அவர் பேட்டி ஒன்றில் கூறினார்.
சிலாங்கூரில் நீர் வள மறுசீரமைப்புத் திட்டம் தொடங்கப்படும் பொருட்டு தேவைப்படும் காலம் வரையில் லங்காட் 2 நீர் சுத்திகரிப்பு நிலையக் கட்டுமானத்தை மாநில அரசாங்கம் தடுக்கும் என காலித் கூறியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
காலித் அறிக்கை ‘யானைகள் மோதும் போது புற்கள் மிதிபடுகின்றன’ ( “Gajah sama gajah berlawan, pelanduk mati tersepit di tengah ) என்னும் மலாய் பழமொழிக்கு ஏற்ப உள்ளது எனக் குறிப்பிட்ட ஜார்ஜ், பயனீட்டாளர்களே தண்ணீர் பற்றாக்குறை காரணமாக நீர் விநியோகத் தடைகளை எதிர்நோக்குகின்றனர் என்றார்.
“அவர்கள் மாநில ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு முன்னர் மக்களுக்கு நட்புறவாக இருக்கப் போவதாக அவர்கள் மீண்டும் மீண்டும் கூறினர். 2015ல் நீர் விநியோகப் பற்றாக்குறையை நாம் எதிர்நோக்குவோம் எனத் தெரிந்திருந்தும் 100 ஆண்டுகள் வரை காத்திருக்கத் தயார் என அவர்கள் இப்போது சொல்வது ஏமாற்றத்தை அளிக்கிறது,” என்றார் அவர்.
சிலாங்கூர் எதிர்நோக்கும் தண்ணீர் பற்றாக்குறைக்கு வழக்கமான பயனீட்டாளர் தேவை மட்டும் காரணமல்ல. தொழில் துறையின் தேவை அதிகரித்துள்ளதும் புதிய வீடமைப்புத் திட்டங்களும் காரணம் என அவர் சொன்னார்.