-டாக்டர் சேவியர் ஜெயக்குமார், சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர். டிசம்பர் 29, 2012.
கடந்த வியாழக்கிழமை டிசம்பர் 27 ஆம் தேதி சிலாங்கூர் மாநில தமிழ்ப் பள்ளிகளின் மானியம் பரிந்துரை செயற்குழுவினர் எடுத்த முடிவின்படி அனைத்து தமிழ்ப்பள்ளிகளும் எழுத்து பூர்வமாக தங்களின் மானியக் கோரிக்கைகளை எதிர்வரும் ஜனவரி 14 ஆம் தேதிக்குள் சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்களான டாக்டர் அலிமா அல்லது டாக்டர் சேவியர் ஜெயக்குமார் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.
இதற்கு முன் இருந்ததைப் போன்று இவ்வாண்டும் பள்ளிகளின் பல தேவைகளுக்கு நிதி வழங்கப்படவுள்ளது. அதே வேளையில் இரண்டு புதிய திட்டங்கள் இவ்வாண்டு சேர்த்துக் கொள்ளப்படும். இவ்வாண்டு முதல் தமிழ்ப்பள்ளிகளில் அறிவியல் மற்றும் வாழ்வியல் கூடங்களுக்கான தளவாடங்களுக்கும் பள்ளிகள் மாநில அரசிடம் மனு செய்யலாம் என்பதை அனைத்து தமிழ்ப்பள்ளிகளுக்கும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
மனு செய்யும் பள்ளிகள் அப்பாடங்களுக்கான வகுப்பறைகளைக் கொண்டிருக்க வேண்டும் என்பது மட்டுமே நமது முக்கியமான நிபந்தனை.
இந்தப் பாடங்கள் தமிழ்ப்பள்ளி பாடத்திட்டத்தில் இருந்தாலும் அதற்கான நிதி ஒதுக்கீடுகளை மத்திய அரசு தமிழ்ப்பள்ளிகளுக்கு வழங்குவதில்லை என்று பல புகார்களை நாம் பெற்றுள்ளோம். ஆகையால், ஆண்டுக்கு குறைந்தது 5 தமிழ்ப்பள்ளிகளுக்காவது இதுபோன்ற வசதிகளை விரிவுபடுத்த வேண்டும் என்பதே நமது நோக்கம்.
இது போன்ற வசதிகளின் வழி தமிழ்ப்பள்ளிகளின் கல்வித் தரம் உயரும். கற்றலில் நமது மாணவர்களிடையே அதிக ஆர்வத்தையும் ஏற்படுத்த முடியும்.
கடந்த நான்கு ஆண்டுகளாக நாம் மேற்கொண்டு வரும் இது போன்ற திட்டங்களின் வழி நாட்டில் தமிழ்ப்பள்ளிகளின் தோற்றம் உயர்வடைந்து உள்ளது.
நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நாம் தமிழ்ப்பள்ளிகளில் துவக்கிய பாலர் பள்ளிகளை மத்திய அரசே ஏற்று நடத்த ஒதுக்கீடுகள் செய்வது போன்று, இந்த வசதிகளையும் மேம்படுத்த மத்திய அரசை வற்புறுத்துவதே நமது நோக்கம்.
கடந்த நான்கு ஆண்டுகளில் 30க்கு மேற்பட்ட தமிழ்ப்பள்ளிகளில் கணினி வகுப்புகளுக்கான ஒதுக்கீடுகளை மாநில அரசு வழங்கியுள்ளது.
அடுத்த பத்து வருடங்களுக்கு தமிழ்ப்பள்ளிகளுக்கான இதர வசதிகளை நாம் தொடர்ந்து மேம்படுத்துவதன் வழி, சிலாங்கூர் தமிழ்ப்பள்ளிகள் நாட்டிலுள்ள மற்றத் தமிழ்ப்பள்ளிகளுக்கு முன்னுதாரணமாகத் திகழ வேண்டும். இங்கு நம் மாணவர்களுக்கு ஒரு புதிய அடையாளத்தைத் தருவதன் வழி, தேசிய அளவில் நம் பள்ளிகளின் தேவைகளை மத்திய அரசு கவனிக்க வைக்க வேண்டும். அதற்கான விழிப்புணர்வை பாரிசான் நேசனலின் இந்திய கட்சிகள் அடைந்து விட்டால், அதுவே நாம் செய்த பாக்கியமாகும்.
தேர்தல் நெருங்கி வரும் வேளையில் இச்சமூகத்தின் பல்வேறு தேவைகளை முன்நிறுத்தி அதற்கான மானிய ஒதுக்கீடு கோரி மத்திய அரசிடம் போராட வேண்டிய அரசியல் கட்சிகள் சிலாங்கூர் மாநில அரசை முற்றிலும் பொய்யான, அர்த்தமற்ற விவகாரங்களில் விமர்சிக்கத் துவங்கியுள்ளது, தவறான அணுகுமுறையாகும். அது இச்சமூகத்தின் நல்வாழ்வுக்கு, முன்னேற்றத்திற்கு பாதை அமைக்காது.
நமது தமிழ்ப்பள்ளிகளுக்கான தேவைகள் அதிகரித்து வருகின்றன. நமது சமூகத்தினர் செரண்டாவில் நம் பள்ளிகளுக்காக சாகும்வரை உண்ணாவிரதம் பூண்டதை யாரும் மறக்கக் கூடாது. ஆனால், நாம் பள்ளிகளுக்கான உரிமைகளை வலியுறுத்த வேண்டிய நேரத்தில் காரியத்தைக் கைவிட்டு, அம்னேவின் திசைதிருப்பும் அரசியலில் சிக்கி, இச்சமூகத்திற்குக் கிடைத்துள்ள அருமையான சந்தர்ப்பத்தைக் கோட்டை விட்டுக் கொண்டிருக்கிறோம்.
அனைத்து தமிழ்ப்பள்ளி ஆர்வாளர்களையும், தமிழ்ப்பள்ளி மாணவர்களின் பெற்றோர்களையும், ஆசிரியர்களையும், இச்சமூகத்தின் தேவைகள், குறிப்பாக தமிழ்ப்பள்ளிக்கூடங்களின் தேவைகள், பிள்ளைகளின் கல்வி மேம்பாடு, மீது கவனம் செலுத்துமாறு இவ்வேளையில் கேட்டுக்கொள்கிறேன்.
காலம் அறிந்து பயிர் செய்ய வேண்டும் என்ற நமது பாட்டிகளின் கூற்று இன்றுள்ள பேரன்களுக்கு விளங்குவதில்லை.